இதுக்கு மும்பை ஜெர்ஸிய போட்டுக்கலாமே!... நடுவர்களின் ஒருதலைபட்ச முடிவுகள்… கொந்தளிக்கும் ஆர் சி பி ரசிகர்கள்!

vinoth

வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (10:35 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்கள் ஆக நடைபெற்று வரும் நிலையில் நேற்று மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதையடுத்து பேட் செய்த ஆர் சி பி அணியில் பாஃப் டு பிளசீஸ், ரஜத்படிதார் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் அந்த அணி 196 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆர் சி பி பவுலர்களை கொஞ்சம் கூட மதிக்காமல் அடி வெளுத்து வாங்கியது. அந்த அணியின் இஷான் கிஷான் 34 பந்துகளில் 69 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களும் சேர்த்து ஆட்டத்தை மிகவும் எளிதாக்கினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 16 ஆவது ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நடுவர்களின் சில முடிவுகள் ஆட்சேபத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தன.  ஆர் சி பி வீரர் ரஜத் படிதார் அடித்த பவுண்டரியை ஆகாஷ் மத்வால் எல்லைக்கு அருகே தடுத்தார். அப்போது அவரின் உடல் பவுண்டரி லைனில் பட்ட போது அவர் உடலில் பந்து இருந்தது. ஆனால் அதற்கு நடுவர் பவுண்டரி கொடுக்கவில்லை.

அதே போல பும்ரா வீசிய உயரமான புல்டாஸ் பால் ஒன்றுக்கும் நடுவர் நோபால் அறிவிக்கவில்லை. அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரெவ்யூ மீதம் இல்லாத போது கேட்ச்சுக்கு அப்பீல் செய்தனர். அதை நடுவரே தன்னுடைய அப்பீலாக அறிவித்தது மேலும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனால் நடுவர்கள் மீது கடும் விமர்சனங்கள் வந்துள்ளன. 

வெப்துனியாவைப் படிக்கவும்