14 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வென்றதையடுத்து, ’தாதா’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் கங்குலி சட்டையை கழற்றியதை வீரேந்தர் ஷேவாக் நினைவு கூர்ந்துள்ளார்.
2002ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நாட் வெஸ்ட் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில், சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி, நாசர் ஹுசை தலைமையிலான இங்கிலாந்து அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் குவித்தது. பின்னர், ஆடிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கடைசி 2 ஓவர்களில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முஹமது கைஃப், ஜாகிர் கான் இருவரும் களத்தில் இருந்தனர். 49ஆவது ஓவரில் கைஃபின் பவுண்டரி உட்பட 9 ரன்கள் எடுக்கப்பட்டது. 50ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் 2 ரன்களை ஜாகிர் கான் எடுக்க இந்திய திரில் வெற்றிபெற்றது.
இதனை கேளரியில் இருந்து இந்திய வீரர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, தான் அணிந்திருந்த மேல் சட்டையை கழற்றி சுழற்றினார். இது, அப்பொழுது கிரிக்கெட் உலகில் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி வீரர் வீரேந்தர் ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
அதில், “14 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நாட்வெஸ்ட் தொடரை வென்றோம். கங்குலி, சல்மான் கான் போல் செய்து (மேலாடை இல்லாமல்) ஓவ்வொருவரின் இதயங்களையும் வென்றார்” என தெரிவித்துள்ளார்.