நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணி மோசமான தோல்விகளைப் பெற்று வெளியேறியது. லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றது. இந்த படுதோல்விகளுக்கு பாகிஸ்தான் அணிக்குள் இருக்கும் கோஷ்டி சண்டையே காரணம் என சொல்லப்படுகிறது.
அணிக்குள் வீரர்கள் பாபர், ரிஸ்வான் மற்றும் ஷாகீன் அப்ரிடி ஆகியோரின் தலைமையில் குழுவாக பிரிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் அந்த அணியின் டி 20 பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனின் கருத்து கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் அணி செயல்பட்ட விதம் குறித்து அவர் பேசும்போது “பாகிஸ்தான் அணிக்குள் ஒற்றுமையே இல்லை. இது ஒரு அணியே கிடையாது. வீரர்கள் ஒருவரை ஒருவர் ஆதரிப்பதில்லை. அனைவரும் தனித்தனியாக உள்ளனர். எத்தனையோ அணிகளோடு பணியாற்றியுள்ளேன். ஆனால் இதுபோல ஒரு அணியை நான் பார்த்ததில்லை” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர் ஷாகீன் அப்ரிடி உலகக் கோப்பை தொடரின் போது கிரிஸ்டனிடம் அவமரியாதை செய்யும் விதமாக நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி அவர் புகார் அளித்துள்ள நிலையில் அப்ரிடி மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.