ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் முதல் சுற்று கிட்டத்தட்ட முடிவு நிலையை எட்டி வருகிறது. அதை தொடர்ந்து Revenge Week போட்டிகள் மேலும் சுவாரஸ்யம் தரக்கூடியவை. இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் எல்லா போட்டிகளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை இந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆப்க்கு தகுதி பெற தரவரிசையில் முன்னேற வேண்டிய அவசியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளதால் இன்று வெற்றிப்பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறலாம் என்பதால் முனைப்பு காட்டும். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மெக்கர்க் சீசன் தொடக்கம் முதலே சுமாராக ஆடி குறைந்த ரன்களில் அவுட்டாகிறார். ஆனால் பின்னர் வந்து விளையாடுபவர்கள் சிறப்பாக ஆடுகின்றனர். கடந்த மும்பை போட்டியில் களமிறங்கிய கருண் நாயர், எதிர்பாராத அதிரடியை காட்டி ஆச்சர்யப்படுத்தினார். அபிஷேக் பொரெல், கே எல் ராகுல், அக்ஸர் பட்டேல், ஸ்டப்ஸ் எல்லாம் நல்ல பேட்டிங் நிலையில் உள்ளனர். அஷுதோஷ் சர்மா டெல்லிக்கு சமீபத்திய சூப்பர் பலம். விப்ராஜ் நிகம் மிடில் ஆர்டர் தாண்டியும் அணிக்கு பலம் சேர்க்கும் பேட்ஸ்மேனாக உள்ளார். கடந்த போட்டியில் டூ ப்ளெசிஸ் காயம் காரணமாக விளையாடாத நிலையில், இந்த போட்டிக்கு வருவாரா என்ற சந்தேகம் உள்ளது.
பவுலிங்கில் மிட்செல் ஸ்டார்க் டெல்லிக்கு செம பலம். சன்ரைசர்ஸை இந்த சீசனிலேயே 5 விக்கெட்டுகளை காலி பண்ணி அதிர வைத்தார். குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், முகேஷ் குமார், விப்ராஜ் நிகம் என பவுலிங்கும் குறை சொல்ல முடியாத அளவில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸில் பேட்டிங் மிடில் ஆர்டர் தாண்டி வலு தவறுகிறது. ஜெய்ஸ்வால், சாம்சன், ரியான் பராக் என தொடக்க அதிரடிக்கும், ஹெட்மயர், நிதிஷ் ரானா என மிடில் ஆர்டருக்கும் நல்ல யூனிட் உள்ளது. பந்து வீச்சில் ஜோஃரா ஆர்ச்சர் சூப்பர் என்றாலும் சமீப போட்டிகளில் அவர்தான் அதிக ரன்களை அள்ளிக் கொடுத்தார். சந்தீப் சர்மா, ஹசரங்கா உள்ளிட்டோர் குறைந்தபட்சம் 2 விக்கெடுகளாவது வீழ்த்தி அணி வெற்றிக்கு உதவலாம்.
எப்படி பார்த்தாலும் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் கை ஓங்கியிருப்பதாகவே தெரிகிறது. ஒருவேளை டெல்லி டாஸ் வென்றால் பந்துவீச்சை எடுத்து ராஜஸ்தானை குறைந்த ஓவர்களில் வீழ்த்தி, எளிதில் சேஸ் செய்து ரன்ரேட்டை ஏற்ற முயல்வார்கள். டெல்லியை ராஜஸ்தான் வென்றால் அது ஒரு சிறப்பான வெற்றியாக கண்டிப்பாக அமையும்.
Edit by Prasanth.K