சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்று முறை பதவி வகிக்கலாம்.
இதையடுத்து, இந்தப் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிட்ட நிலையில் அவரை எதிர்த்து யாரும் நிற்காததால் அவர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஐசிசி தலைவரானவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் ஜெய்ஷா. அவருக்கு வயது 35 தான்.
இந்நிலையில் ஜெய் ஷாவின் இந்த வெற்றியை பாராட்டுவது போல நக்கல் அடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். அதில் “ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதனையாளரை கைதட்டி பாராட்டுவோம். ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் ஆல்ரவுண்டர். ஒரு மனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.