சில தினங்களுக்கு முன்னர் லக்னோ மற்றும் ஆர் சி பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார்.
பேட்டிங்கிலும் இக்கட்டான ஒரு சூழலில் 11 ஆவது வீரராகவே களமிறங்கினார். ஆனாலும் அவரால் ரன்கள் ஓடமுடியவில்லை. இந்நிலையில் இப்போது அவர் மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கலாமா என்பதை மருத்துவர் குழுவின் ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது ராகுல் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்றே கிரிக்கெட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமில்லாமல் அடுத்த மாதம் தொடங்க உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது. ஆனால் ராகுலின் காயம் பிசிசிஐ-யோ, லக்னோ அணி நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.