2011 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து உலகக்கோப்பை தொடரை நடத்தினர். இதன் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 274 ரன்கள் சேர்க்க, இந்தியா கம்பீர் மற்றும் தோனியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பையை வென்றது.
இந்நிலையில் தற்போது அந்த இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸீங் நடந்ததாகவும் இலங்கை அணி விலைபோய் விட்டதாகவும், அந்நாட்டு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தாநந்தா அலுத்காமகே குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ‘2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டம் பிக்ஸிங் செய்யப்பட்டது. 2011 அல்லது 2012-ம் ஆண்டு போட்டியா என உறுதியாகத் தெரியவில்லை. அந்த ஆட்டம் நாங்கள் வெல்ல வேண்டிய ஆட்டம். ஆனால் பிக்ஸிங்கில் எந்த வீரர்களும் ஈடுபடவில்லை. சில கட்சிகள் ஈடுபட்டன.’ எனக் குற்றச்சாட்டை வைக்க அது இப்போது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.