இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

திங்கள், 21 நவம்பர் 2016 (12:49 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை 246 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளது.


 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 455 எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் விராட் கோலி 167 ரன்களும், சத்தீஸ்வர் புஜாரா 119 ரன்களும், அஸ்வின் 58 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், மொய்ன் அலி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களிலும், பைர்ஸ்டோ 53 ரன்களிலும் வெளியேறினர். அடில் ரஷித் 32 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

200 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக கேப்டன் விராட் கோலி 81 ரன்களும், ஜெயந்த் யாதவ் 27 ரன்களும், ரஹானே 21 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் அடில் ரஷித் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனால், இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் கேப்டன் அலைஸ்டர் குக் அபாரமாக இந்திய பந்துவீச்சை சமாளித்து 54 ரன்கள் எடுத்தார். மேலும், ஹஷீப் ஹமீத் மற்றும் ஜோ ரூட் தலா 25 ரன்கள் எடுத்தனர்.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 92 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தது. ஆனால், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்க தவறினர். தொடர்ந்து 7 வீரர்களும் ஒற்றை இலக்கத்திலேயே நடையைக் கட்டினர். இதனால், இங்கிலாந்து அணி 158 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜான் பைர்ஸ்டோ மட்டும் 34 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின், ஜெயந்த் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 5 இங்கிலாந்து வீரர்கள் எல்.பி.டபள்யூ. முறையில் ஆட்டமிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்