இந்தியா 248 ரன்னுக்கு 6 விக்கெட்: முன்னிலை பெற போராட்டம்!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2017 (17:35 IST)
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி முன்னிலை பெற போராடி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் இன்று முழுவதும் விளையாடிய இந்திய அணி 248 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்துள்ளது.


 
 
இரு அணிகளும் ஆளுக்கு ஒரு வெற்றியுடன் சமனில் உள்ளதால் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இந்த டெஸ்ட் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி நேற்று முதல் நாள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்களை எடுத்திருந்தது.
 
இதனையடுத்து இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கியது. தொடக்க வீரர் விஜய் 10 ரன்னில் வெளியேற பின்னர் களம் இறங்கிய புஜாரா சிறப்பாக நிலைத்து நின்று ஆடினார். ராகுல் புஜாரா ஜோடி சிறப்பாக ஆடியது. ராகுல் 60 ரன் குவித்து அணியின் எண்ணிக்கை 108-ஆக இருக்கும் போது ஆட்டமிழந்தார்.
 
இதனையடுத்து கேப்டன் ரகானே களமிறங்கினார். இதனையடுத்து ரகானே புஜாரா ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்தது. புஜாரா தனது அரை சதத்தை கடந்தார். அணியின் எண்ணிக்கை 157-ஆக இருக்கும் போது 57 ரன் எடுத்திருந்த புஜாராவும் அவுட்டாகி வெளியேறினார்.
 
பின்னர் களமிறங்கிய கருண் நாயர் 5 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளிக்க, அஸ்வின் களம் இறங்கி சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினார். இந்த நேரத்தில் 46 ரன் எடுத்திருந்த ரகானே ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து சிறிது இடைவெளியில் அஸ்வினும் வெளியேறினார்.
 
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 248 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து உள்ளது. விக்கெட் கீப்பர் சஹாவும், ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 300 ரன் எடுத்துள்ளதால் அதனை இந்தியா சமன் செய்ய இன்னும் 52 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
 
மீதம் 4 விக்கெட்டுகளே உள்ளதால் இந்திய அணி 52 ரன்களை மேற்கொண்டு எடுத்து மேலும் முன்னிலை பெற போராடி வருகிறது. இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் ஆடி வருவதால் ஆட்டம் விருவிருப்பாக தொடர்கிறது.
அடுத்த கட்டுரையில்