இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு: தோல்வியை சந்திக்காத கோலி சாதிப்பாரா?

சனி, 25 பிப்ரவரி 2017 (12:30 IST)
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா அணி. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.


 
 
புனேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 260 ரன்களில் ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா அணி இந்தியாவை 105 ரன்களில் சுருட்டி பந்தாடியது.
 
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி 165 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலியா மேற்கொண்டு 285 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 441 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
 
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக 109 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 441 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியுள்ளது. இதுவரை கேப்டனாக பொறுப்பேற்று டெஸ்ட் போட்டியில் எந்த தோல்வியையும் சந்திக்காமல் இருந்து வரும் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த பெரிய சிக்கலில் இருந்து தப்பிக்குமா என்பதே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்