ஆந்திர கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் தலையீடு… நான் கேப்டன் பதவியில் இருந்து தூக்கப்பட்டேன் –ஹனுமா விஹாரி குற்றச்சாட்டு!

vinoth

செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:36 IST)
இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் ஹனுமா விஹாரி. ஆனால் இப்போது இளம் வீரர்களின் அறிமுகத்தால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் அவர் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

ரஞ்சிக் கோப்பை தொடரில் ஆந்திர கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அவர் அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆனால் திடீரென அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது ரஞ்சிக் கோப்பை தொடர் முடிந்துள்ள நிலையில் தான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அரசியல் தலையீடுதான் காரணம் எனக் கூறியுள்ளார்.

அதில் “இந்த சீசனின் தொடக்கத்தில் நான் கேப்டனாக இருந்த போது அணியில் இருந்த ஒரு வீரரை போட்டியின் போது கத்திப் பேசினேன். அந்த வீரர் அரசியல்வாதி ஒருவரின் மகன். அவன் தன்னுடைய தந்தையிடம் சொல்லி, அவர் தன்னுடைய அரசியல் பலத்தை பயன்படுத்தி என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவைத்துவிட்டார். நான் கேப்டனாக இருந்த கடந்த ஏழு வருடங்களில் ஐந்து முறை அணியை நாக் அவுட் சுற்று வரை அழைத்து சென்றுள்ளேன்.  இத்தனைக்கு பிறகும் நான் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். இனிமேல் என் வாழ்க்கையில் நான் ஆந்திர கிரிக்கெட் வாரியத்துக்காக விளையாட மாட்டேன்.” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்