3வது ஒருநாள் போட்டி.. 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.. தெ.ஆ. பரிதாபம்..!

Siva

திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (07:51 IST)
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட் 142 ரன்களும், மிட்செல் மார்ஷ் 100 ரன்களும், கேமரூன் கிரீன் 118 ரன்களும் குவித்து சாதனை படைத்தனர். இதன் மூலம், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 431 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
 
432 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி துரத்திய தென்னாப்பிரிக்கா அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது. 25 ஓவர்களுக்குள்ளாகவே அந்த அணி 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்க அணியில் கிரேவிஸ் மட்டுமே அதிகபட்சமாக 49 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியின் கூப்பர் மிக சிறப்பாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாப்பிரிக்க அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
 
இந்த ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தாலும், ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால், 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மகாராஜ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்