நியுசிலாந்து அணிக்கு எதிரான வொயிட்வாஷ் தோல்வியால் இந்திய அணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. அப்படி ஒரு முக்கியத்துவம் உள்ள தொடரின் முதல் சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.
அவர் குடும்பக் காரணங்களுக்காக அந்த நேரத்தில் இந்தியாவில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். முதல் போட்டியில் கேப்டன் இல்லையென்றால் அது அணிக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள அவர் “ஒருவேளை முதல் 2 போட்டிகளில் ரோஹித் ஷர்மா இல்லை என்றால் துணைக் கேப்டன் ஆன பும்ரா தொடர் முழுவதையும் தலைமையேற்று நடத்த வேண்டும். அப்போதுதான் அணிக்குள் ஒரு தொடர்ச்சி இருக்கும்” எனக் கூறியிருந்தார்.
கவாஸ்கரின் இந்த கருத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் ஏற்க மறுத்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் “ரோஹித் ஷர்மா முக்கியமான ஒரு காரணத்துக்காக இந்த போட்டிகளில் விளையாட முடியாமல் உள்ளார். ஆனால் அவர்தான் இந்திய அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதனால் கவாஸ்கரின் கருத்தை நான் முழுமையாக ஏற்க மறுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.