சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துள்ள ஜடேஜாவிற்கு ரசிகர்கள் தளபதி பட்டம் சூட்டுவார்களா என்ற பேச்சு எழத் தொடங்கி விட்டது.
ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் இருந்தாலும் இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட அணி என்றால் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் முக்கியமானது. தமிழ்நாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், தோனிக்கும் இருக்கும் வரவேற்பு சக அணி வீரர்களையே ஆச்சர்யம் கொள்ள செய்வது.
சென்னை அணியில் ஏராளமான வீரர்கள் விளையாடினாலும் ரசிகர்கள் மிக சிலருக்கே செல்லமாக பட்டம் சூட்டுவார்கள். அப்படி சென்னை சூப்பர் கிங்ஸின் நிரந்தர தலயாக வலம் வருபவர் எம்.எஸ்.தோனி. தோனிக்கு பிறகு அப்படியொரு அங்கீகாரத்தை சுரேஷ் ரெய்னாவுக்கே ரசிகர்கள் அழைத்தனர். அவருக்கு சின்ன தல என்று பட்டமளித்தனர் சிஎஸ்கே ரசிகர்கள்.
அதுபோல கடந்த சமீப ஆட்டங்களாக சிஎஸ்கே ரசிகர்களின் விருப்ப நாயகனாக உயர்ந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. கடந்த சீசனில் அவர் வெளியேறும்போதெல்லாம் தோனி வருகைக்காக ரசிகர்கள் உற்சாகமாக கத்தி கடுப்பு ஏற்றியிருந்தாலும், இறுதி போட்டியில் வென்று கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் இந்த சீசன் தொடங்கியது முதலாகவே ஜடேஜாவை ரசிகர்கள் தளபதி என்று ஆங்காங்கே அழைக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றது. இதுகுறித்து ஜடேஜாவிடமே கேள்வி எழுப்பிய வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே “சேப்பாக்கம் மைதானம் நிறைய பட்டங்களை கொடுத்துள்ளது. தோனிக்கு தல, ரெய்னாவுக்கு சின்ன தல.. இப்போது உங்களுக்கு தளபதி என்ற பட்டம் கொடுக்க இதுதான் சரியான சமயம் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த ஜடேஜா “இரண்டு பேரின் பட்டங்களையும் ரசிகர்கள் அங்கீகரித்து கொண்டாடுகின்றனர். ஆனால் நான் இன்னும் ரசிகர்களின் அந்த அங்கீகாரத்தை பெறவில்லை. விரைவில் அதை எனக்கு ரசிகர்கள் கொடுப்பார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தோனி களம் இறங்கும்போது தல.. தல.. என ரசிகர்கள் கோஷமிடுவது போல தனக்கும் தளபதி.. தளபதி.. என அவர்கள் அன்புடன் அழைக்க வேண்டும் என்ற ஆசை ஜடேஜா மனதில் உண்டாகியிருப்பதாக தெரிகிறது. இதை ரசிகர்கள் அங்கீகரிப்பார்களா என்பது இந்த சீசன் முடிவதற்குள் தெரிந்து விடும்.