சமீபத்தில் சல்மான்கான் வீட்டின் முன்னால் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அதிர்ச்சிக்குரிய பல விஷயங்கள் தெரிய வந்துள்ளன.
இந்தி சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சல்மான்கான். சில தினங்கள் முன்பாக சல்மான்கான் வீட்டின் முன்பு அதிகாலையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் அந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம் என டெல்லி சிறையில் உள்ள கூலிப்படை தலைவன் அன்மோல் பிஷ்னோய் அறிவித்துள்ளார். அன்மோல் பிஷ்னோயும், அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோயும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். சமீபத்தில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் இவர்களுக்கு தொடர்புள்ளது.
ஆனால் சல்மான்கானுக்கு இவர்கள் ஏன் கொலை மிரட்டல் விடுக்க வேண்டும் என்பதற்கான காரணம்தான் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1998ம் ஆண்டில் பட ஷூட்டிங் ஒன்றிற்காக ராஜஸ்தான் சென்ற சல்மான்கான் அங்கு அரியவகை மான்களை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக சிறை சென்றது இந்தியா முழுவதும் அந்த சமயம் பிரபலமான செய்தியாகும்.
சல்மான்கான் சுட்டுக்கொன்ற அந்த மான் பிஷ்னோய் மக்கள் தெய்வமாக கருதும் விலங்கு என கூறப்படுகிறது. இதற்காக சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிஷ்னோய் சகோதரர்கள் எச்சரிக்கை விடுத்தும் சல்மான்கான் மன்னிப்பு கேட்கவில்லையாம். இதனால் கடந்த பல ஆண்டுகளாகவே பிஷ்னோய் சகோதரர்கள் இதுபோன்ற கொலை மிரட்டல்களை சல்மான்கானுக்கு விடுத்து வருகிறார்களாம்.
மானை சுட்ட விவகாரத்தில் சட்ட நடவடிக்கைகளில் இருந்து சல்மான்கான் வெளியேறியிருந்தாலும் தொடர்ந்து இவ்வாறு மானின் சாபம் கொலை மிரட்டலாக தொடர்ந்து வருகிறதாம்.