1993 -இல் கல் நாயக் வெளியானது. சஞ்சய் தத் நாயகன். நாயகி மாதுரி தீட்சித், சோளிக்கே பீச்சே க்யே கை என்று சுழன்று ஆடியதில் இந்தியாவே கிறங்கிப் போனது. படம் பம்பர் ஹிட்.
சுபாஷ் கை போன்ற ஒரு இயக்குனர், சோளிக்குள் என்ன இருக்கிறது என்பது போன்ற ஒரு ஆபாசப் பாடலை தனது படத்தில் வைக்கலாமா என்று சோளிக்கே பீச்சே க்யா கை பாடல் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், அந்தப் பாடல்தான் கல் நாயக் படத்தை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
கல் நாயக் வெளியாகி 23 வருடங்களாகிறது. சுபாஷ் கை இந்த இடைவெளியில் சஞ்சய் தத்தை வைத்து எந்தப் படமும் இயக்கவில்லை. இப்போது கல் நாயக் படத்தின் தொடர்ச்சியை சஞ்சய் தத்தை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளார். படத்தின் பெயர், கல் நாயக் ரிட்டர்ன்ஸ்.
பல்லு பல்ராம் (கல் நாயக்கில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம்) சிறையில் 20 வருடங்களை கழித்த பின் வெளியே வருகிறார். அதன் பிறகு நடப்பதுதான் படத்தின் கதை. சஞ்சய் தத்தும் இப்போதுதான் சிறையிலிருந்து திரும்பியிருக்கிறார்.