பாம்புகளின் இனப்பெருக்கம் பற்றிய புரிதலை மாற்றுமா புதிய கண்டுபிடிப்பு?

புதன், 14 டிசம்பர் 2022 (23:37 IST)
பாம்புகளுக்கு உணர்ச்சிப்பீடம் எனப்படும் க்ளிட்டோரிஸ்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
 
பெண் பாம்புகளுக்கு இந்த பாலுறுப்பு இல்லை என்கின்ற நீண்டகால அனுமானத்தை நொறுக்கியுள்ளது இக்கண்டுபிடிப்பு.
 
பெண் இன பாம்புகளின் பிறப்புறுப்பு குறித்து புதிய மற்றும் சரியானதொரு உடற்கூறியல் விளக்கங்களை வழங்கியுள்ளது புதன்கிழமை வெளியாகியுள்ள இந்த ஆராய்ச்சி முடிவு.
 
பாம்புகளின் ஆணுறுப்பு, ஹெமிபீனஸ், போன்றவை குறித்து பல தசாப்தங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், ஒப்பீட்டளவில் பெண் பாலின உறுப்பு என்பது இதில் கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். விஞ்ஞானிகளிடம் இதனைப் பற்றிய பெரிய தேடல் இல்லை என்பதே உண்மை.
 
"பெண் பாலுறுப்பு என்பது விலக்கிவைக்கப்பட்டுள்ளது, விஞ்ஞானிகளால் அதுகுறித்து கண்டுபிடிக்க முடியவில்லை, மற்றும் பாம்புகள் இன்டர்செக்ஸ் உயிரிகள் என்ற தவறான முத்திரையை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்" என்று முனைவர் பட்டம் பெற்றவரும் முன்னணி ஆராய்ச்சியாளருமான மேகன் ஃபோல்வெல் கூறுகிறார்.
 
பெண் பாம்பின் வாலில் உணர்ச்சிப்பீடம் (க்ளிட்டோரிஸ்கள்) இருப்பதைக் கண்டறிந்துள்ளது பற்றிய இவரது ஆராய்ச்சி கட்டுரை இந்த வாரம் ராயல் சொசைட்டி பி ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது.
 
பாம்புகளுக்கு இரண்டு தனித்தனி க்ளிட்டோரிஸ்கள் உள்ளன. திசுக்களால் பிரிக்கப்பட்டு வாலின் அடிப்பகுதியில் மறைந்திருக்கும் இரட்டைச் சுவர் கொண்ட இது, நரம்புகள் மற்றும் இரத்த சிவப்பணுக்களால் ஆனது, விறைப்புத் திசுக்களுடன் ஒத்துப்போகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். "பாம்பின் பெண் பிறப்புறுப்புகளைப் பற்றி படித்தபோது, பெண் பாம்புகளுக்கு உணர்ச்சிப்பீடம் இருந்திருக்கவில்லை அல்லது அவை பரிணாம வளர்ச்சியின் மூலம் வளர்க்கப்பட்டன என்ற கருத்துக்களை என்னால் நம்பமுடியாததால் அதுகுறித்து தேடத் துவங்கினேன்" என்கிறார் மேகன் ஃபோல்வெல்.
 
"க்ளிட்டோரிஸ் நிறைய விலங்குகளில் உள்ளது என்று எனக்குத் தெரியும். எனவே, அது எல்லா விலங்குகளிலும் இருக்காது என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. இந்த அமைப்பு முன்பே இருந்ததா அல்லது அது கவனிக்கப்படாமல் விடப்பட்டதா என்று நான் பார்க்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
 
ஒரு Death adder வகை பாம்பில் ஆராய்ச்சியைத் தொடங்கிய அவர் விரைவிலேயே க்ளிட்டோரிஸை கண்டறிந்தார். இனச்சேர்க்கைக்குத் துணைகளை ஈர்க்கப் பயன்படும் பெண் பாம்பின் வாசனை சுரப்பிகளுக்கு அருகில் இதய வடிவிலான இந்த அமைப்பு இருப்பதை அவர் கண்டறிந்தார்.
 
"இந்த அமைப்பு பெண் பாம்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சுற்றியுள்ள திசுக்களில் இருந்து அது முற்றிலும் வேறுபட்டுள்ளது. மேலும், நான் இதற்கு முன்பு பார்த்த ஆண் பாம்புகளின் இனப்பெருக்க கட்டமைப்புகளின் எந்த தாக்கமும் இதில் இல்லை."
 
இக்கண்டுபிடிப்பிற்குப் பிறகு பல்வேறு வகை பாம்புகளில் அவரது குழு சோதனை மேற்கொண்டது. கார்பெட் மலைப்பாம்பு, பஃப் ஆடர் மற்றும் மெக்சிகன் மொக்கசின் உட்பட மொத்தம் ஒன்பது இனங்களைச் சேர்ந்த பாம்புகளை கூராய்வு செய்து சோதனை செய்தது இவர்களது குழு. ஒவ்வொன்றிலும் வெவ்வேறு அளவில் காணப்பட்டாலும் அவை அனைத்திலுமே ஹெமிக்ளிட்டோரிஸ்கள் காணப்பட்டன.
 
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் விவகாரத்தில் நேரு மீது அமித் ஷா சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையுள்ளதா?
 
இந்த கண்டுபிடிப்பு இப்போது பாம்பின் பாலுறவு பற்றிய புதிய புரிதல்களையும், பெண் பாம்பின் தூண்டுதலுக்கான வழி மற்றும் அவற்றின் இன்பம் குறித்த புதிய பார்வையையும் திறந்துவைக்கிறது.
 
"இப்போது வரை, விஞ்ஞானிகள் பாம்பின் உடலுறவு என்பது பெரும்பாலும் 'வற்புறுத்தல்' அல்லது 'ஆண் பாம்பின் கட்டாயப்படுத்தப்பட்ட இனச்சேர்க்கை' என்றே நம்பினர்.
 
ஏனென்றால், பொதுவாக பாம்புகளின் பாலியல் உறவைக் கவனிக்கும்போது, ஆண் பாம்புகள் தான் எப்போதும் உடல்ரீதியாக ஆக்ரோஷமாக இருக்கும். பெண் பாம்பு பெரும்பாலும் அமைதியாகவே காணப்படும்," என்று மேகன் ஃபோல்வெல் கூறுகிறார்.
 
"ஆனால் இப்போது க்ளிட்டோரிஸ் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், தனது சந்ததியைப் பெருக்குவதற்காக ஒரு பெண் பாம்பு தூண்டுதல் மூலம் ஒரு ஆண் பாம்புடன் இணையும் என்ற கோணத்திலும் நாம் ஆராய முடியும்," என்கிறார் அவர்.
 
ஆண் பாம்புகள் பெரும்பாலும் தங்கள் வால்களைப் பெண் இணையின் வால்பகுதியில் தேய்க்கும் அல்லது அப்பகுதி மீது தங்களது வாலைச் சுற்றிக் கொள்ளும். ஏனென்றால் அங்குதான் க்ளிட்டோரிஸ் அமைந்துள்ளது.
 
பாம்புகள் குறித்த ஆராய்ச்சி உலகில் இந்த கண்டுபிடிப்புக்கு நேர்மறையான வரவேற்பு இருப்பதாகக் கூறும் மேகன் ஃபோல்வெல், "இவ்வளவு காலமாக இது தவறவிடப்பட்டது ஒரு அதிர்ச்சி, ஆனால் அது இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிவதே ஓர் ஆச்சரியம். சில பாம்பு இனங்களில், க்ளிட்டோரிஸ் மென்மையானதாகவும் மிகச்சிறியதாகவும் காணப்படுகின்றன. சில இனங்களில் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலேயே இது உள்ளது," என்கிறார் மேகன். மானிட்டர் பல்லி இனத்தில் காணப்படுவது போலவே பெண் பாம்புகளும் ஆண் ஹெமிபீனிஸின் சிறிய வடிவத்தைக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. அதுபோல, இன்டர்செக்ஸ் பாம்புகள் பற்றிய சில முந்தைய ஆய்வுகளில், விஞ்ஞானிகள் ஆண்குறியை க்ளிட்டோரிஸ் என்று தவறாகப் பெயரிட்டுள்ளனர்.
 
இந்த திட்டத்தின் மற்ற ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான அடிலெய்டு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் கேட் சாண்டர்ஸ், மேகன் ஃபோல்வெல்லின் "புதிய முன்னோக்கு" இல்லாவிட்டால் இந்த கண்டுபிடிப்பே நடந்திருக்காது என்றார்.
 
"விஞ்ஞானம் முன்னேறுவதற்கு பல்வேறு யோசனைகளைக் கொண்ட பல்வேறு சிந்தனையாளர்கள் தேவை என்பதைக் காட்டுகிறது இந்த கண்டுபிடிப்பு."

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்