'கடவுளுக்கு எதிரான குற்றம்' - இரானில் 23 வயது இளைஞருக்கு பொது இடத்தில் வைத்து தூக்கு தண்டனை

செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:15 IST)
சமீபத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய இரண்டாவது மரண தண்டனையை நிறைவேற்றியதாகவும் அதில், 23 வயது இளைஞரை பொது வெளியில் பகிரங்கமாகத் தூக்கிலிட்டதாகவும் இரான் கூறுகிறது.

மாஜித்ரேசா ரஹ்னாவார்ட், 23 வயதான இளைஞர். அவர் மாஷாத் நகரில் திங்கள் கிழமையன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

துணை ராணுவப் படைகளில் ஒன்றான பாசிஜ் எதிர்ப்புப் படையை (Basij Resistance Force ) சேர்ந்த இருவரை குத்திக் கொன்றதைக் கண்டறிந்த நீதிமன்றம் “கடவுளுக்கு எதிரான குற்றம்” என்று அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தது.

கைது செய்யப்பட்ட 23 நாட்களுக்குப் பிறகு ரஹ்னாவார்ட் தூக்கிலிடப்பட்டார்.

எந்தவிதமான சட்ட நடைமுறைகளும் இல்லாமல் போலியான விசாரணைக்குப் பிறகு எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

அவர் உயிரிழக்கும் வரை அவருடைய தாயிடம் மரண தண்டனை குறித்துக் கூறப்படவில்லை.

பின்னர் அவரது குடும்பத்திற்கு ஒரு கல்லறையின் பெயரும் ஒரு நிலத்தின் எண்ணும் வழங்கப்பட்டது. அவர்கள் அங்குச் சென்றபோது, பாதுகாவலர்கள் அவரது உடலை அடக்கம் செய்துகொண்டிருந்தனர்.

உள்ளூர் நேரப்படி, திங்கள் காலை 7 மணிக்கு ஓர் அதிகாரி ரஹ்னாவார்டின் குடும்பத்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “நாங்கள் உங்கள் மகனைக் கொன்று, பெஹேஷ்-இ ரேசா கல்லறையில் புதைத்துள்ளோம்,” எனத் தெரிவித்ததாக அரசு எதிர்ப்பு ஆர்வலர்கள் குழுவான 1500தஸ்விர் ட்வீட் செய்தது.

நீதித்துறையின் மிசான் செய்தி முகமை, ரஹ்னாவார்ட் “மஷாதி குடிமக்கள் குழுவின் முன்னிலையில்” தூக்கிலிடப்பட்டதாகக் கூறியது. மேலும், மரண தண்டனையைக் காட்டுவதாகக் கூறப்படும் பல புகைப்படங்களையும் வெளியிட்டது.

அந்தப் படங்களில், பார்வையாளர்களுக்கு முன்பாக ஒரு மனிதர் கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். எத்தனை இந்த மரண தண்டனை நிகழ்வில் பங்கேற்றனர், அவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ரஹ்னாவார்டுக்கு விசாரணையில் அவருக்கு விருப்பமான வழக்கறிஞரை தேர்வு செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட வழக்கறிஞர் சரியாக இவரது தரப்பை முன்வைத்து வாதாடவில்லை.

நவம்பர் 17ஆம் தேதியன்று மஷாத் தெருவில், பாசிஜின் இரண்டு உறுப்பினர்களைக் குத்திக் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக மிசான் முன்பு தெரிவித்தது. ஒரு தன்னார்வ படையான பாசிஜ், பெரும்பாலும் இரானிய அதிகாரிகளால் எதிர்ப்பை அடக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

நார்வேவை தளமாகக் கொண்ட இரான் மனித உரிமைகள் இயக்குநரான மஹ்மூத் அமிரி-மொகத்தம் ட்விட்டைல், ரஹ்னாவார்டின் தண்டனை “மிகவும் நியாயமற்ற செயல்முறையையும் ஒரு நிகழ்ச்சியைப் போல் நடந்த விசாரணைக்குப் பிறகான கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டது” எனக் கூறினார்.

“இந்தக் குற்றத்திற்காக இஸ்லாமிய குடியரசு கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும்,” என்றவர், அரசை எதிர்ப்பவர்கள் கூட்டாக மரணதண்டனைக்கு உள்ளாகக்கூடிய அபாயம் உள்ளதாகவும் கூறினார்.

22 வயது பெண் மாசா அமினி, செப்டம்பர் 13ஆம் தேதியன்று “முறையற்ற வகையில்” ஹிஜாப் அல்லது தலையில் முக்காடு அணிந்ததாகக் கூறி அறநெறி போலீசாரால் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவர் காவலில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, இரானின் மதகுரு ஸ்தாபனத்திற்கு எதிரான பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் தொடங்கின.

அந்தப் போராட்டங்கள், 31 மாகாணங்களிலும் உள்ள 161 நகரங்களில் பரவி, 1979 புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமிய குடியரசின் மிகக் கடுமையான சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றன.

இரானின் தலைவர்கள் இந்தப் போராட்டங்களை வெளிநாட்டு எதிரிகளால் தூண்டிவிடப்பட்ட “கலவரங்கள்” என்று சித்தரித்துள்ளனர். இருப்பினும், எதிர்ப்பாளர்களில் பெரும்பாலானோர் நிராயுதபாணியாகவும் அமைதியான முறையிலும் இருந்தனர்.

நவம்பர் 19ஆம் தேதியன்று அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அரசுத் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஒரு காணொளி, ரஹ்னாவார்ட் கண்களை மூடிக்கொண்டு இடது கையை வார்ப்புக்குள் விடுவதைக் காட்டியது. அவர் பாசிஜ் உறுப்பினர்களைத் தாக்கியதை மறுக்கவில்லை. ஆனால், விவரங்கள் நினைவில் இல்லை, ஏனெனில் அவர் சரியான மனநிலையில் இல்லை எனக் கூறினார்.

'புரட்சிகர நீதிமன்றத்தில்' அவர் அளித்த “ஒப்புதல் வாக்குமூலம்” என்னவென்பதையும் திங்கட்கிழமையன்று அரசுத் தொலைக்காட்சி காட்டியது.

சித்ரவதை மற்றும் பிற மோசமான சிகிச்சைகள் மூலம் வற்புறுத்தப்பட்ட கைதிகளின் தவறான வாக்குமூலங்களை இரானிய அரசு ஊடகங்கள் வழக்கமாக ஒளிபரப்புவதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திங்கட்கிழமையன்று, இரானிய அரசுத் தொலைக்காட்சி மற்றும் அதன் இயக்குநரை கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களை ஒளிபரப்பியதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது.

எதிர்ப்பாளர்களை அடக்கியதற்காக இரானிய ராணுவத் தலைவர் மற்றும் புரட்சிகர காவலர்களின் பிராந்திய தளபதிகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.

டெஹ்ரானின் நடவடிக்கைகளைக் கண்டித்த பல ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷ் அரசியல் பிரமுகர்களைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளதாக இரான் கூறியுள்ளது.

கடந்த வியாழனன்று போராட்டக்காரர் ஒருவருக்கு முதல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது சர்வதேச கண்டனத்தைத் தூண்டியது. 23 வயதான மொஹ்சென் ஷெகாரி, டெஹ்ரானில் பாசிஜ் உறுப்பினரைக் கத்தியால் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், “கடவுளுக்கு எதிரான குற்றம்” எனக் குற்றம் சாட்டப்பட்டார்.

பிபிசி பெர்ஷிய செய்தியாளரான கஸ்ரா நஜி, இந்த மரண தண்டனைகள் நாட்டில் நிலவி வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருமா அல்லது நெருப்பில் எண்ணெயை ஊற்றுமா எனத் தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, மஷாத் முழுவதும் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாக இருந்தன. திங்கட்கிழமையன்று ரஹ்னாவார்டின் கல்லறையில் படமாக்கப்பட்ட காணொளியில், “நாட்டின் தியாகி மாஜித்ரேசா ரஜ்னாவார்ட்” என்று மக்கள் கோஷமிடுவதை கேட்க முடிந்தது.

இதுவரை, குறைந்தபட்சம் 488 எதிர்ப்பாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர், 18,259 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மனித உரிமை ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது. மேலும், 62 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரான் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்