திரையரங்கில் ஓடும்போதே ஹாட்ஸ்டாரில் 'கைதி' வெளியானதற்கு காரணம் என்ன?

செவ்வாய், 26 நவம்பர் 2019 (15:06 IST)
கைதி திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
கார்த்தி நடித்து தீபாவளி தினத்தன்று வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால் ஒரு மாதம் கழிந்த நிலையிலும், தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பாக ஹாட் ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியானது.
 
படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே, ஹாட் ஸ்டாரில் வெளியானதற்கு பல திரையரங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கின் நிர்வாகியான நிகிலேஷ், "கைதி திரைப்படம் வெளியாகி 30வது நாளன்றுகூட இரண்டு காட்சிகள் முழுமையாக நிரம்பின. ஆனால், தற்போது படம் ஆன்லைனில் வெளியாகியிருக்கிறது. இதனால், உடனடி பாதிப்பு இருக்காது என்றாலும்கூட, மிக அபாயகரமான முன்னுதாரணம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
3-4 வாரங்களிலேயே படத்தை ஆன்லைனில் பார்த்துவிடலாம் என்றால், யாரும் திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் நிகிலேஷ். இந்த நிலையில், கைதி திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியானதற்குப் பிறகு எஸ்பிஐ சினிமாஸ், பிவிஆர் ஆகிய தொடர் திரையரங்குகளில் கைதி திரைப்படம் நிறுத்தப்பட்டது.
 
இது போலச் செய்யக்கூடாது. இப்படி ஒரு மாதத்திலேயே படத்தை ஆன்லைனில் வெளியிட்டால் யார் திரையரங்கிற்கு வருவார்கள்? இந்த ஆன்லைன் தளங்களைப் பொறுத்தவரை திரையரங்கில் வெளியானால்தான் வாங்குவார்கள். ஆக, தயாரிப்பாளர்கள் எங்களை விளம்பரம் செய்யும் ஊடகமாகப் பயன்படுத்துகிறார்களா? 4 வாரங்களில் படத்தை ஆன்லைன் ஊடகங்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்றால், படத்தை இரண்டு வாரங்களுக்கு மட்டும் ஓட்ட வேண்டும் என ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியதுதானே? எதற்காக 'ஃப்ரீ ரன்' என ஒப்பந்தம் செய்கிறார்கள்?" என்கிறார் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம்.
ஆனால், தயாரிப்பாளர் தரப்பு இதில் தவறில்லை என்கிறார்கள். "திரையரங்கத்தினருடன் ஒப்பந்தம் செய்யும்போது இத்தனை நாட்கள் ஓட்ட வேண்டுமென நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. எல்லா புதிய படங்களுக்கும் முதல் நாளே திருட்டு வீடியோ வெளிவந்துவிடுகிறது. அந்த திருட்டு வீடியோவை பெரும் எண்ணிக்கையில் மக்கள் பார்க்கிறார்கள். தவிர, 3வது வாரத்திற்குப் பிறகு, திரையரங்குகளில் இருந்து தயாரிப்பாளருக்கு வரும் வருவாய் மிகக் குறைவு. ஆகவேதான் 4வது வார இறுதியில் ஆன்லன் தளங்களுக்கு கொடுத்துவிடுகிறோம்" என பிபிசியிடம் கூறினார் 'கைதி' திரைப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்