ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. சடலங்களைத் தேடி வருவோரின் கதறல்களால் நிறைகின்றன மருத்துவமனைகள். களத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்.
ஞாயிற்றுக் கிழமை பிற்பகல்.
ஒதிஷா ரயில் விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக புவனேஸ்வருக்கு வந்துகொண்டிருக்கின்றன. சடலங்களை அடையாளம் காண வருவோருக்கென அமைக்கப்பட்டிருக்கும் கவுண்டரில் திடீரென ஒரு கதறல் சத்தம். கணிப்பொறியின் திரையில் காட்டப்பட்ட சடலங்களில் தன் மகனின் சடலத்தை அடையாளம் கண்ட தந்தையின் கதறல் அது.
50களில் உள்ள சிவசங்கர் ஜானாவுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகன் சிறுவன். இன்னொரு மகனான டெவிட் ஜானாவுக்கு 27 வயது. தந்தை, மகன் இருவருக்குமே சரியான வேலை இல்லாத நிலையில், சென்னையில் வேலை தேடலாம் என கோரமண்டல் எக்ஸ்பிரசில் புறப்பட்டார் டெவிட் ஜானா.
டெவிட் ஜானாவுடன் தானும் வருவதாகச் சொன்னார் சிவசங்கர். ஆனால், சென்னைக்குச் சென்று வேலைதேடி, ஒரு சிறிய வீட்டையாவது வாடகைக்கு எடுத்துவிட்டு, தன் தந்தையை அழைத்துக் கொள்வதாகக் கூறி புறப்பட்டார் டெவிட் ஜானா.
இப்போது, அந்த மகனின் உடலை வாங்க வெயில் கொளுத்தும் ஒரு நாளில், பரிச்சயமில்லாத ஒரு ஊரில், பிணவறை முன்பாக அமர்ந்திருக்கிறார் சிவசங்கர் ஜானா.
இந்தக் கொடூரமான அனுபவம் இன்னும் பல குடும்பத்தினருக்கும் காத்திருக்கிறது. ஒதிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 275 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் சுமார் 200 உடல்கள் வரை புவனேஸ்வரை வந்தடைந்திருக்கின்றன. இதில் 110க்கும் மேற்பட்ட உடல்கள் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இரு பிணவறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
விமான, ரயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்
ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு மணிவரை சுமார் 15 சடலங்கள் வரை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அடையாளம் காணப்பட்ட சடலங்கள் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன.
வேறு மாநிலங்களில் இருந்து சடலங்களை அடையாளம் காண வருவோருக்கு உதவும் வகையில் பல ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது ஒதிஷா அரசு. விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இதற்கென சிறப்பு கவுன்டர்கள் செயல்படுகின்றன. சடலங்களைத் தேடி புவனேஸ்வருக்கு வந்து சேரும் உறவினர்கள், உடனடியாக அரசு வாகனத்தின் மூலம் மருத்துவமனைகளுக்கு உடல்களை அடையாளம் காண அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
நேரடியாக மருத்துவமனைகளுக்கே வருபவர்களுக்கு, கம்ப்யூட்டர் திரையில் இறந்தவர்களின் உடல்கள் காட்டப்படுகின்றன. அதில் உடல்களை அடையாளம் கண்டால், அவர்கள் பிணவறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் குறிப்பிட்ட உடல் காட்டப்படுகிறது. அந்த உடல் தங்களுடைய உறவினர்களுடையது என உறுதிப்படுத்தினால், அடையாள அட்டை சரிபார்ப்பு போன்றவற்றை மற்றொரு அதிகாரிகள் அணி மேற்கொள்கிறது.
உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்
இதற்குப் பிறகு, குறிப்பிட்ட உடல் மரப்பெட்டியில் உறவினர்கள் சொல்லும் ஊருக்கு, ஒதிஷா மாநில அரசின் செலவில் அனுப்பி வைக்கப்படுகிறது. உடலைக் கொண்டுசெல்ல விரும்பவில்லையென்றால், ஒதிஷாவிலேயே தகனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் பல சவால்களும் இருக்கின்றன.
"பெரும்பாலான உடல்கள் சிதைந்த நிலையில்தான் வருகின்றன. அடுத்ததாக, உறவினர்கள் இன்னும் பெரிய எண்ணிக்கையில் வர ஆரம்பிக்கவில்லை. அதனால் சடலங்களை அடையாளம் காண்பது தாமதமாகிறது. விரைவிலேயே, உறவினர்கள் வந்து சடலங்களைப் பெற்றுச்செல்வார்கள் எனக் கருதுகிறோம். பெரும்பாலும் பிஹார் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் வருகிறார்கள். உறவினர்களின் உடலைத் தேடி வரும்போது துயரத்தால் நொறுங்கிப் போயிருப்பார்கள். அவர்களை ஆற்றுப்படுத்தி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து தருகிறோம்" என்கிறார் புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆணையரான விஜய் குலங்கே.
ரயிலில் பயணித்த உறவினர்களின் கதி தெரியாமல் தவிப்பு
இவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், சடலங்களின் புகைப்படங்களைப் பார்த்து, அது தங்களுடைய உறவினர்தானா என்பதை அறிய முடியாதவர்களும் இருக்கிறார்கள். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குமாரின் சகோதரர், எல்லோரையும் போலவே சென்னைக்கு வேலை தேடி கோரமண்டல் எக்ஸ்பிரசில் பயணித்தார். இப்போதுவரை அவரது நிலை குறித்து குமாரால் அறியமுடியவில்லை. குமாரின் சகோதரருக்கு 3 பெண், 2 ஆண் என ஐந்து குழந்தைகள். என்ன செய்வதெனத் தெரியாமல் பரிதவித்துப் போயிருக்கிறார் குமார்.
இவ்வளவு சடலங்கள் புவனேஸ்வருக்கு வந்துவிட்ட நிலையிலும், சடலங்களைத் தேடி வருவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. பலர், தங்கள் உறவினர்களைத் தேடி பாலாசூருக்கே நேரடியாகச் சென்றுவிடுவது இதற்கு ஒரு காரணம். அங்கே உடல்கள் இல்லை எனத் தெரிந்த பிறகுதான் இங்கே வருகிறார்கள்.
இந்த ரயிலில் பயணம் செய்து, பலியானவர்களில் பலர் பிஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்க மாநிலங்களின் உள்ளடங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் தகவல் அறிந்து இங்கே வந்து சேர தாமதமாகிறது.
ஒடிஷா அரசைப் பொறுத்தவரை, பேரிடர்களை எதிர்கொள்வதில் அனுபவம் வாய்ந்தது. அதனால், இந்தப் பேரிடரையும் தங்கள் முந்தைய அனுபவங்களில் கிடைத்த பாடத்தின் மூலம் சிறப்பாக எதிர்கொள்கிறது அம்மாநில அரசு.
திங்கள் அல்லது செவ்வாய்க் கிழமைக்குள் உடல்கள் அனைத்தையும் உறவினர்கள் வசம் சேர்த்துவிட முடியுமென்றும் நிர்வாகம் நம்புகிறது.