ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாவது ஏன்? கொலை, கொள்ளை தொடர்வதன் பின்னணி என்ன?

புதன், 5 ஜனவரி 2022 (11:58 IST)
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் கொலை, தற்கொலை, கொள்ளை எனக் குற்றங்கள் பெருகிக் கொண்டே போகின்றன. `ஆன்லைன் சூதாட்டங்களுக்கு எதிராக வலுவான சட்டம் இயற்றுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது' என்கின்றனர் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள். என்ன நடக்கிறது?
 
2 சம்பவங்கள்
 
சம்பவம் 1: சென்னை பெருங்குடி, பெரியார் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மணிகண்டன் (45) என்பவர் வசித்து வந்தார். இவர் போரூரில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் தாரா என்ற மனைவியும் பத்து மற்றும் ஒரு வயதில் இரண்டு மகன்களும் இருந்தனர். கொரோனா முதல் அலையின் காரணமாக வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வந்த மணிகண்டனுக்கு ஆன்லைன் ரம்மியின் மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரிடம் கடன் வாங்கி விளையாடியுள்ளார். அந்தவகையில் ஒரு கோடி ரூபாய் வரையில் கடன் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இதனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடன் நெருக்கடி காரணமாக கடந்த 2 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் மணிகண்டன் வீட்டில் இருந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மோதல் வலுக்கவே, மனைவி, குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டார். இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் விவரங்கள் வெளியில் வந்துள்ளன.
 
சம்பவம் 2: சென்னை திருவான்மியூரில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் கடந்த திங்கள்கிழமையன்று நடந்த கொள்ளைச் சம்பவம் ரயில்வே போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அங்கு டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த டீக்காராம், அதிகாலையில் மூன்று பேர் துப்பாக்கி முனையில் தன்னைக் கட்டிப் போட்டு 1.25 லட்ச ரூபாயை கொள்ளையடித்துவிட்டுச் சென்றுவிட்டதாகக் கூறியிருந்தார். திருவான்மியூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் 5 தனிப்படைகளை அமைத்து போலீஸார் விசாரித்து வந்தனர்.
முடிவில், தனது மனைவியோடு சேர்ந்து டீக்காராம் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியிருப்பதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். இவர், ஆன்லைன் ரம்மியில் அதிகப்படியான பணத்தை இழந்ததால், கடனை அடைப்பதற்காக இப்படியொரு வழியை தேர்வு செய்ததாக தெற்கு ரயில்வே டிஐஜி ஜெயகவுரி தெரிவித்தார்.
 
- மேற்கண்ட 2 சம்பவங்கள் மட்டுமல்ல, கடந்த ஓராண்டுகளில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடிக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்தவகையில் தற்போது வரையில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
 
தொடரும் மரணங்கள்
 
ஆன்லைன் ரம்மி ஆட்டத்துக்காக கடன் வாங்குகிறவர்கள், தங்களின் உயிரை மாய்த்துக் கொள்வது என்ற நிலை மாறி, குடும்பத்தினரையும் கொலை செய்வது, கொள்ளையடிப்பது என அடுத்த நிலைக்குச் செல்வதாகவும் சைபர் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் சென்னை அரசு விருந்தினர் மாளிகை அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர், தன்னைத்தானே சுட்டுக் கொன்று தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவர் ஆன்லைன் ரம்மியில் 7 லட்ச ரூபாய் வரையில் இழந்ததாகக் கூறப்பட்டது. இவரைப் போலவே, விழுப்புரம், கோவை எனப் பல மாவட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.
 
இதன் தொடர்ச்சியாக, `ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும்' என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உள்பட பலரும் பேசி வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவசர சட்டம் ஒன்றையும் அ.தி.மு.க அரசு கொண்டு வந்தது. ஆனால், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கு சரியான காரணத்தை அரசாணையில் கூறவில்லை என்ற காரணத்தைக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்துவிட்டது.
 
மேலும், `ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதைவிட, அதனை முறைப்படுத்த வேண்டும்' எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களைத் தடுக்க வேண்டும் என்ற குரல்கள் தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளன.
 
''அனைத்துமே புரோகிராம்கள்தான்''
 
இதுகுறித்து, பிபிசி தமிழிடம் பேசிய சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன், ``ஆன்லைனில் உள்ள சாதாரண விளையாட்டுகளில் பணத்தை இழக்க வேண்டிய தேவை இல்லாததால், விளையாட்டை மட்டும் மக்கள் ஆடி வந்தனர். இதன் அடுத்தகட்டமாக ஆன்லைன் ரம்மி வந்தது. இதற்காக சொந்தப் பணத்தை வைத்து ஆடியவர்கள், ஒருகட்டத்தில் கடன் வாங்கி விளையாடுகின்றனர். இதனால் அவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுகின்றனர்,'' என்கிறார்.
 
தொடர்ந்து பேசுகையில், `` ஒரு விளையாட்டை ஆடும்போது ஆர்வம் மட்டும் இருக்கும். ஆனால், சூதாட்டத்தில் உங்கள் கணக்குக்குப் பணம் வரும். அதனை உங்களின் வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். நாம் 5,000 ரூபாயை முதலீடு செய்தால் பத்தாயிரம் வரும். ஒருகட்டம் வரையில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதன்பிறகு பணத்தை எடுக்க முடியாது. `விளையாட்டில் நாம் செய்த தவறால்தான் பணம் போய்விட்டது' என நினைப்போம். ஆனால் உண்மையில் அப்படிக் கிடையாது. இது வடிவமைக்கப்பட்ட புரோகிராம்கள்.
 
உங்கள் நண்பர்களை சேர்த்துவிட்டாலும் பணம் கிடைக்கும். இதில் சேட் ஆப்ஷன், புரோமோஷன் ஆப்சன் இருக்கும். அதில் உரையாடும்போது மற்றவர்களையும் விளையாடுவதற்கு ஊக்குவிக்கும். இதில் எளிதாக பணம் சம்பாதித்து பணக்காரனாக மாறலாம் என சிலர் நினைக்கின்றனர். பணத்தை இழந்தபிறகு எப்படியாவது சம்பாதிக்கலாம் எனக் கொள்ளையடித்தாவது பணம் போடுகின்றனர். இது தனிநபரின் குற்றமாக இருந்தது. தற்போது சமூகத்துக்கு எதிரானதாக மாறிவிட்டது'' என்கிறார்.
 
விதிமுறைகளை வாசிக்காத 99 சதவீதம் பேர்
 
`` பெருங்குடி கொலை, தற்கொலை சம்பவத்தில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் வங்கி ஒன்றில் உயர் பொறுப்பில் இருந்தவர். அதிக சம்பளம் கிடைத்தும் ஏன் இப்படியொரு முடிவை எடுக்க வேண்டும்?'' என்றோம்.
 
`` தனது தகுதிக்கு மேல் அவர் கடன் வாங்கியுள்ளதாகவும் பார்க்கலாம். பணம் திரும்ப வரும் என்ற எண்ணத்தில் மேலும் கடன் வாங்கியுள்ளார். தான் இறந்துவிட்டால் தனது மனைவி, குழந்தைகளுக்கும் தொல்லை தருவார்கள் என்ற நோக்கத்தில் அவர்களைக் கொலை செய்திருக்கலாம் எனக் கருதுகிறேன்,'' என்கிறார்.
 
``ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் உரிய எச்சரிக்கை கொடுக்கப்படுகிறதே?'' என்றோம். ``ஆமாம். ஆனால் ஆன்லைன் ரம்மியை டவுன்லோடு செய்யும்போது அதில் உள்ள விதிமுறைகளை 99 சதவிகிதம் பேர் படிப்பதில்லை. இதனை அல்காரிதம் மூலம் வடிவமைத்துள்ளோம் என அவர்கள் கூறியுள்ளனர். ஒரு லட்சம், 2 லட்சம் என அதிகப்படியான தொகையைப் போடும்போது அந்தப் பணம் திரும்பி வராது. மீண்டும் முதலில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். இது ஒருவரது திறமையால் சம்பாதிக்கும் விளையாட்டு கிடையாது.
 
சிலர் ஆன்லைன் சூதாட்டத்தில் இழப்பு ஏற்பட்டால் வழக்கு போடலாம் என நினைக்கின்றனர். சம்பந்தப்பட்ட கம்பெனி மீது வழக்குப் போட வேண்டும் என்றாலும் விதிமுறைகளில் வெளிநாட்டில் உள்ள நீதிமன்றத்தின் பெயரைத்தான் தெரிவித்துள்ளனர். அங்கு நம்மால் வழக்கு தொடர முடியாது. பாதிக் கிணறு தாண்டிய பிறகுதான் சூதாட்டத்துக்கு அடிமையாகிவிட்டதை உணர முடியும். ஜாய்னிங் போனஸ், ரெபரல் போனஸ் என சில ஆயிரங்களைக் கொடுக்கும்போது உங்களுக்கு பணம் கொடுக்காமலேயே காசு வருகிறதே எனத் தோன்றும். தற்காலிக வெற்றியால் மூளையில் சுரக்கும் டோபோமைனும் ஒரு காரணமாக உள்ளது. இதன் காரணமாகவே பலரும் அடிமையாகின்றனர்,'' என்கிறார்.
 
தமிழ்நாடு அரசால் தடுக்க முடியுமா?
 
``ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான வழக்கை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?'' என்றோம். `` ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதைவிட, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய வேண்டும். சில நாடுகளில் ஆன்லைன் ரம்மி தடை செய்துள்ளனர். சில நாடுகளில் வரைமுறைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சீனாவில் இதே மக்கள்தொகைதான் உள்ளது. அங்கே செயலியை பதிவிறக்கம் செய்ததும் காலை 6 மணிக்கு மேல்தான் செயல்படத் தொடங்கும். இரவு 10 மணிக்கு மேல் அந்தச் செயலி செயல்படாது. இரவு முழுவதும் விளையாட முடியாது.
 
இதன் காரணமாக ஒருவர் அந்த ஆட்டத்துக்கு அடிமையாக முடியாது. நாளொன்றுக்கு 10 டாலர்தான் செலவிட முடியும். பணம், நேரம் ஆகியவற்றை சரியான முறையில் ஒதுக்குகின்றனர். இதனை பூர்த்தி செய்யாத நிறுவனங்களைத் தடை செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் உள்ளவர்களைத்தான் அனுமதிக்கின்றனர். அதுபோன்ற ஒரு வரைமுறை இங்கே கொடுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் தடை செய்வதற்கு சரியான காரணங்களைச் சொல்லவில்லை.
 
இதனைச் செயல்படுத்த முனைந்தாலும் தமிழ்நாடு அரசுக்கு சில எல்லைகள் உள்ளன. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்தச் செயலியை நீக்க முடியாது. சட்டம் வந்த பிறகு மற்றவர் விளையாடுவதாக புகார் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். தேசிய அளவில் சட்டம் வந்தால்தான் முழுமையான தீர்வு கிடைக்கும். தெலங்கானா, ஆந்திரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தடைச் சட்டம் கொண்டு வந்துள்ளனர். ஆனால், இதனை முறைப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன'' என்கிறார்.
 
மேலும், ``சைபர் சூழல் என்பது மாறிக் கொண்டே இருக்கும். புதுப்புது வடிவங்களில் அது வரும். தேசிய அளவில் உறுதியான வரைமுறைகள் கொண்டு வரும்போதுதான் கட்டுப்படுத்த முடியும்'' என்கிறார் கார்த்திகேயன்.
 
தி.மு.க அரசின் நிலைப்பாடு என்ன?
``ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?'' என அரசு வழக்கறிஞரும் தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளருமான கண்ணதாசனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.
 
`` ஆன்லைன் ரம்மியை உச்ச நீதிமன்றம் தடை செய்யவில்லை. `அது ஒரு பொழுதுபோக்கு' எனக் கூறியது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பிறகு, அதற்கு எதிராக சட்டம் இயற்றினால் அது செல்லாது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. புதிய சட்டத்தை உருவாக்குவதற்கு வலுவான காரணங்களை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. இதனை மிக முக்கியமான பிரச்னையாக அரசு பார்க்கிறது. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை,'' என்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்