அ.தி.மு.கவின் அடுத்த அவைத் தலைவர் யார்? இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகள் மறைமுக மோதலா?

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (10:57 IST)
`அ.தி.மு.கவின் அடுத்த அவைத் தலைவர் யார்?' என்கிற விவாதம் தொடர்ந்தபடியே உள்ளது. `எம்.ஜி.ஆர் காலம் முதல் கட்சியில் பயணிக்கும் மூத்தவர்களுக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது' என்கின்றனர். அ.தி.மு.க வட்டாரத்தில் என்ன நடக்கிறது?
 
அ.தி.மு.க அவைத் தலைவராக கடந்த 15 ஆண்டுகளாக பதவியில் இருந்த மதுசூதனன், கடந்த 5 ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக மறைந்தார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மதுசூதனன், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அ.தி.மு.கவில் பயணித்து வந்தார்.
 
`அவர் இருக்கும் வரையில் அவர்தான் அவைத் தலைவர்' என ஜெயலலிதா கூறியிருந்ததால், பொதுச் செயலாளருக்கு அடுத்தபடியாக முக்கியமானவராக மதுசூதனன் வலம் வந்தார்.
 
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கு மதுசூதனன் ஆதரவு அளித்தார். பின்னர், அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம் பக்கம் திரும்பினார்.
 
அவைத் தலைவர் பதவிக்கு அடுத்து யார்?
இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.கவில் அணிகள் பிரிந்தபோது `இரட்டை இலை யாருக்கு?' என்ற கேள்வி எழுந்தபோது, மதுசூதனனிடம் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது.
 
பொதுச் செயலாளரால் செயல்பட முடியாமல் போனாலோ அல்லது மறைந்துவிட்டாலோ அவைத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது' என்ற உள்கட்சி விதியின் காரணமாக, மதுசூதனனின் முக்கியத்துவத்தை உணர்ந்து அ.தி.மு.க நிர்வாகிகள் நடந்து கொண்டனர்.
 
தற்போது அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பினருக்கு மறைமுக கருத்து வேறுபாடுகள் இருப்பதால், `அவைத் தலைவர் பதவிக்கு யார் வரப் போகிறார்கள்?' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
`` அ.தி.மு.கவை பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்தபடியாக அவைத் தலைவர் என்ற பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
 
வள்ளிமுத்து, புலமைப்பித்தன், காளிமுத்து, பொன்னையன், மதுசூதனன் என எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே கட்சியில் பயணம் செய்து வருகிறவர்களுக்கே இந்தப் பதவிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன.
 
2007ஆம் ஆண்டு மதுசூதனன் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னால் தூத்துக்குடியை சேர்ந்த கட்சியின் முக்கிய நபர் ஒருவரை இந்தப் பதவிக்கு சசிகலா முன்னிறுத்தினார். `அவருக்குத்தான் பதவி' என முடிவு செய்யப்பட்ட நிலையில், மறுநாள் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் திடீரென மதுசூதனனை ஜெயலலிதா தேர்வு செய்தார். இதனை கட்சி நிர்வாகிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை" என்கிறார் அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர்.
 
தனபாலா.. ஜெயக்குமாரா?
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், ``ஜெயலலிதா இருந்த வரையில் அவைத் தலைவர் பதவிக்கான நபரை மிகக் கவனமாகத் தேர்வு செய்தார். தற்போது இந்தப் பதவிக்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பொன்னையன், தம்பிதுரை ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
 
இதனை ஓ.பி.எஸ் தரப்பினர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. `இந்தப் பதவியும் இ.பி.எஸ் தரப்பினருக்குச் சென்றுவிடக் கூடாது' என்பதில் ஓ.பி.எஸ் தரப்பினர் உறுதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இதையடுத்து, `எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தப் பதவியைத் தர வேண்டும்' என்ற கோரிக்கையை சிலர் முன்வைத்துள்ளனர். அந்த வரிசையில், முன்னாள் சபாநாயகர் தனபாலின் பெயர் அடிபடுகிறது.
 
இவர்களைத் தவிர ஜெயக்குமார், செம்மலை ஆகியோரது பெயரும் அவைத் தலைவர் பதவிக்கு பேசப்பட்டு வருகிறது. எப்படிப் பார்த்தாலும், சசிகலா தரப்புக்கு எதிராக உள்ள ஒருவரைத்தான் இந்தப் பதவிக்கு முன்னிறுத்துவார்கள் என்கின்றனர். இன்னும் சில நாள்களில் அவைத் தலைவர் சர்ச்சை முடிவுக்கு வரலாம்" என்றார் விரிவாக.
 
``அவைத் தலைவர் பதவிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?" என அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
 
`` அ.தி.மு.கவில் இரட்டை இலைக்கு கையொப்பம் போடக் கூடிய அதிகாரம் என்பது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் கைகளில் உள்ளது. அவைத் தலைவர் என்பவர் கூட்டத்துக்குத் தலைமை வாங்குவார்.
 
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை அடையாளப்படுத்துவதற்காக மதுசூதனன் பெயர் சொல்லப்பட்டது. இது ஜெயலலிதா கொடுத்த பதவி என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. அ.தி.மு.கவின் உள்கட்சி விதிகளின்படி பார்த்தால் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு அவைத் தலைவர் தலைமையில் கூடும். இது ஓர் அலங்காரப் பதவியாகத்தான் பார்க்கப்படுகிறது" என்கிறார்.
 
"ஜோதிடம் கூற முடியாது"
``அவைத் தலைவர் பதவி என்பது அலங்காரப் பதவியா?" என அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
 
`` அவைத் தலைவர் என்பது கட்சியின் தனித்துவமான பதவி. அவரது தலைமையில்தான் பொதுக்குழு, செயற்குழு கூடும். அவர் கட்சிக்கும் நிகழ்ச்சிகளுக்கும் தலைமை தாங்குவார்.
 
அதேநேரம், கட்சியின் முழு அதிகாரம் என்பது பொதுச் செயலாளரிடம்தான் இருந்தது. தற்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் உள்ளது.
 
அவைத் தலைவர், பொதுச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர், பொருளாளர் ஆகியோர் கூடி, இரட்டை இலை சின்னத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில் உள்ளனர்" என்கிறார்.
 
``அவைத் தலைவர் பதவி தொடர்பாக இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?" என்றோம்.
 
`` அவைத் தலைவராக தேர்வு செய்யப்படுகிறவர், கட்சியில் மூத்த உறுப்பினராக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் காலத்தில் அவரது அன்பைப் பெற்றவராகவும் அவரது மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டாகப் பிரிந்தபோது ஜெயலலிதாவின் அன்பைப் பெற்று கட்சியில் பணிபுரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
 
அப்படிப்பட்டவருக்குத்தான் இந்தப் பதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பதவி அவருக்கா... இவருக்கா என ஜோதிடம் கூற முடியாது. எவருக்கு இந்தப் பதவி என்பதை இன்னும் சில நாள்களில் தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்