ஹிட்லரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தது? பிம்பங்களை உடைத்த ஈவா பிரௌன் வீடியோ
சனி, 23 செப்டம்பர் 2023 (21:00 IST)
பொதுவாக, வரலாற்றில் கொடும் மனித அவலங்களை, பெரும் இன அழித்தொழிப்புகளை நிகழ்த்திய அரசர்களைப் பற்றியும் சர்வாதிகாரிகளைப் பற்றியும் பல கட்டுக்கதைகள் உலவும்.
அவர்களது வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் நாமும் அவற்றை விரும்பிப் படிப்போம்.
இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தில் நடந்துகொண்டிருந்த 1941-1945 காலகட்டத்தில், 60 லட்சம் யூத மக்களை வதை முகாம்களில் அடைத்து, அவர்களைக் கொன்றழித்த இந்தச் சர்வாதிகாரியைப் பற்றி இதுவரை நாம் அறிந்துவைத்திருந்த பொது பிம்பம் – அவர் தனிமையை விரும்பியவர், சொந்த வாழ்வில் சோகமாகவே இருந்தவர், யாருடனும் அதிகம் பழகாமல் இருந்தவர் என்பது.
ஆனால், ஹிட்லரின் மனைவி ஈவா ப்ரௌன் அவரை தனிப்பட்ட வாழ்வில் எடுத்த வீடியோ காட்சிகள் வேறு ஒரு பிம்பத்தைக் காட்டுகின்றன.
அதில் ஹிட்லர், தனது மனைவியுடன், குடும்பத்தாருடன், நண்பர்களுடன், சிரித்துப் பழகி மகிழ்ச்சியாக இருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இது ஹிட்லரின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கை பற்றிய நமது பிம்பத்தை மாற்றுவதாய் அமைந்திருக்கிறது.
ஹிட்லரின் மனைவி ஈவா ப்ரௌன் அவரை எடுத்த இந்த வீடியோ காட்சிகளில் ஹிட்லர் அன்பான, மகிழ்ச்சியாகச் சிரிக்கும் ஒரு மனிதராக வெளிப்படுகிறார்
ஹிட்லரின் மனைவி ஈவா ப்ரௌன் அவரது தனிப்பட்ட வாழ்கையை எடுத்த இந்த வீடியோ காட்சிகள் 1970களில் வெளியாகின. அப்போது அவை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
காரணம்: அக்காட்சிகளில் ஹிட்லர் அன்பான, மகிழ்ச்சியாகச் சிரிக்கும் ஒரு மனிதராக வெளிப்படுகிறார்.
மேலும் அக்காட்சிகள், அவர் தனக்கென ஒரு நெருங்கிய நட்பு வட்டத்தையும் கொண்டிருந்தார் என்று உலகுக்குக் காட்டின.
இதைப்பற்றிப் பேசும் ஜெர்மானிய வரலாற்றாசிரியரான ஹெய்க கோர்டமேக்கர் (Heike Gortemaker), ஹிட்லர் இருந்த இடம் எப்போதும் மக்களாலும் அவரது நண்பர்களாலும் சூழ்ந்திருக்கும் என்கிறார். கோர்டமேக்கர் ஹிட்லரைப் பற்றியும் அவரது மனைவி ஈவா ப்ரௌனைப் பற்றியும் ஆராய்ந்து அவர்களது வாழ்க்கை வரலாறு நூல்களை எழுதியவர்.
“அவரைச் சூழ்ந்திருந்த ஆண்களும் பெண்களும் அவரை உண்மையாக நேசித்தனர்,” என்கிறார் கோர்டமேகர். “அவர்கள் ஹிட்லரின் அரசியல் சித்தாந்ததை நம்பினர், அதனை ஆதரித்தனர். அதை அடைய அவருக்குத் துணைபுரிந்தனர்,” என்கிறார் அவர்.
ஆனால், ஹிட்லர் நண்பர்களே இல்லாத, தனிமையான, சோகமான மனிதர் எனும் பிம்பம், 1945-ல் அவரது மரணத்திற்குப் பிறகு ஜெர்மனி மக்களிடையே பரவியது, என்கிறார் கோர்டமேகர். “இப்படி அவரை நண்பர்களற்ற, அன்பு செலுத்த முடியாத, மிருகமாகச் சித்தரிப்பதன் மூலம், அவரிடமிருந்து, நாஜி சித்தாந்தத்திலிருந்து, நாஜிக்கள் செய்த பெரும் குற்றங்களிலிருந்து ஜெர்மனி மக்கள் தங்களை விலக்கிப் புனிதப்படுத்திக்கொண்டனர்,” என்கிறார் அவர்.
,
ஹிட்லருக்கு தன்னைப் பற்றிய பாதுகாப்பற்ற உணர்வு இருந்தது. அதனால் அவர் மற்றவர்களைச் சார்ந்திருந்தார். அவருக்கு தனது செயல்கள் அனைத்தும் சரிதான் என்று உறுதியளிக்கும் ஒரு நட்பு வட்டம் தேவைப்பட்டது
ஆனால் ஈவா ப்ரௌன் எடுத்த அவரது தனிப்பட வாழ்வின் வீடியோ காட்சிகள் இதனை அசைத்துப் பார்த்தது.
ஹிட்லருக்கு தன்னைப் பற்றிய பாதுகாப்பற்ற உணர்வு இருந்தது, என்கிறார் கோர்டமேக்கர். “அதனால் அவர் மற்றவர்களைச் சார்ந்திருந்தார். அவருக்கு தனது செயல்கள் அனைத்தும் சரிதான் என்று உறுதியளிக்கும் ஒரு நட்பு வட்டம் தேவைப்பட்டது,” என்கிறார் அவர்.
“தன்னை ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ளும் ஒரு நட்பு வட்டம் அவருக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது,” என்கிறார் இந்த வரலாற்றாசிரியர்.
மேடையில் பல லட்சம் மக்களுக்கு முன் ஆவேச உரையாற்றிய ஃப்யூரர் ஹிட்லர் (führer), மற்றும் தனிப்பட்ட வாழ்வில் தனது நண்பர்களுடன் இருந்த தனிமனிதனான ஹிட்லர் ஆகியோருக்கிடையே மிகப்பெரும் வேறுபாடு இருந்தது என்கிறார் அவர்.
பவாரியா பகுதியில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஹிட்லரின் மலைவாசஸ்தல விடுமுறை மாளிகையான பெர்க்ஹாஃப்
ஹிட்லரின் மனைவி ஈவா ப்ரௌன் அவரது தனிவாழ்வில் எடுத்த ஓசையற்ற வீடியோ படங்கள், பெரும்பாலும், 1930களில், பவாரியா பகுதியில், ஆல்ப்ஸ் மலைத்தொடரில், ஹிட்லரின் மலைவாசஸ்தல விடுமுறை மாளிகையான பெர்க்ஹாஃபில் (Berghof) படமாக்கப்பட்டவை.
தனது சுயசரிதையான மெய்ன் கம்ப்ஃப் (Mein Kampf) நூலின் விற்பனை உரிமைத்தொகையிலிருந்து, 1920களின் இறுதியில் ஹிட்லர் இந்த வீட்டை வாங்கினார், என்கின்றனர் வரலாற்றாசிரியர்கள்.
ஆரம்பத்தில் இது ஆல்ப்ஸ் மலையில் இருந்த மற்ற வீடுகளைப் போலவே சிறியதாக இருந்தது. ஆனால் 1930களில் இது விரிவடைந்து பெரும் மாளிகையாக மாறியது. இதன் பாதுகாப்புக்காகத் தனி ராணுவ முகாமே இருந்தது.
இவ்வகையில், 1930களில் இருந்து, பெர்க்ஹாஃப், தலைநகர் பெர்லினுக்கு அடுத்தபடியான அதிகார மையமாக உருவெடுத்தது.
ஹிட்லரின் காதலியாக இருந்து, அவரது கடைசித் தருணங்களில் அவரைத் திருமணம் செய்துகொண்ட ஈவா ப்ரௌன், உண்மையில், ஹிட்லரின் வீட்டில், மிகவும் முக்கியமான, அதிகாரம் பெற்றிருந்த நபர்
ஹிட்லர் பெர்க்ஹாஃபிலிருந்துதான் தனது ஆட்சிப் பணிகளை மேற்கொள்ள விரும்பினார். உலக நாடுகளின் தலைவர்களையும் அங்குதான் சந்தித்தார்.
பிரிட்டன் பிரதமர் நெவில் சாம்பர்லெய்னையும், விண்ட்சர் கோமகனையும் அங்குதான் அவர் சந்தித்தார். அந்தச் சந்திப்புக்குப் பிறகு கோமகனின் மனைவி, ஹிட்லரின் மீதிருந்து தனது கண்களை எடுக்க முடியவில்லை எனவும், ஹிட்லரின் மன உறுதியால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறினார்.
இந்த முக்கியமான விருந்தாளிகள் யாரும், ஹிட்லரின் காதலியாக இருந்து, அவரது கடைசித் தருணங்களில் அவரைத் திருமணம் செய்துகொண்ட ஈவா ப்ரௌனைச் சந்திக்கவில்லை. அதிகாரப்பூர்வ புகைப்படங்களில் அவர் இருக்கமாட்டார்.
ஆனால், உண்மையில், ஹிட்லரின் வீட்டில், அவர் மிகவும் முக்கியமான, அதிகாரம் பெற்றிருந்த நபர்.
“ஈவா தான் பெர்க்ஹாஃபின் இளவரசி. அவர்தான் அங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சிகளுக்கு யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானித்தார். அனைவரும் அவரை சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். யரும் அவரது அதிகாரத்தைக் கேள்வி கேட்கத் துணியவில்லை,” என்கிறார் கோர்டமேக்கர்.
ஆண்டுகள் செல்லச்செல்ல ஈவா ப்ரௌனின் முக்கியத்துவமும் அதிகரித்தது. பெர்க்ஹாஃபில், அவர் ஹிட்லரின் அந்தரங்க நட்பு வட்டத்தின் மையப்புள்ளி ஆனார்.
அவர் தன் கணவரான ஹிட்லர் நண்பர்களோடு கழித்த தனிப்படத் தருணங்களை எடுத்த வீடியோ காட்சிகள் தான், ஹிட்லர் போன்ற, வரலாறு காணாத மனித அழித்தொழிப்பைச் செய்த ஒரு சர்வாதிகாரிக்கும் நண்பர்கள் இருந்தனர் என்றும், அவர்களோடு அவர் மகிழ்ச்சியான, சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த நாட்களைக் கழித்திருக்கிறார் என்றும், இன்று நமக்குக் காட்டுகின்றன.