கிம் ஜாங் உன்னுக்கு தென்கொரியாவில் தரப்படவுள்ள இரவு விருந்தில் என்ன ஸ்பெஷல்?

வியாழன், 26 ஏப்ரல் 2018 (14:58 IST)

தென்கொரியாவில் நடக்கவுள்ள இரு கொரிய நாடுகளுக்கு இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்க வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் செல்லவுள்ளார். அங்கு அவருக்கு தரப்படவுள்ள இரவு விருந்தில் கிம்முக்கு அவரது பள்ளி நாட்களை நினைவுபடுத்தும் வண்ணம் 'ஸ்விஸ் உருளைக்கிழங்கு' வழங்கப்படவுள்ளது.

அதிபர் கிம் சுவிட்சர்லாந்தில் படித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

அதே வேளையில், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு அவரது சொந்த ஊரான கடற்கரை நகரமான பூசானை நினைவுபடுத்தும் விதமாக விருந்தில் கடல் மீன் பரிமாறப்படவுள்ளது.

2007-க்கு பிறகு கொரிய நாடுகளுக்கு இடையேயான உச்சிமாநாடு இந்த வார வெள்ளிக் கிழமையன்று நடக்கவுள்ளது.

இரு நாடுகளில் இருந்தும் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படவுள்ளன என தென் கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் பிரத்யேக பிரபல உணவான குளிர்ந்த நூடில்ஸ் இராணுவமயமற்ற தெற்கு பகுதியில் சமைக்கப்படவுள்ளது. அதிபர் மூனின் கோரிக்கையை ஏற்று பியோங்கியாங்கின் பிரபல ஓக்ரூ க்வான் உணவகத்தின் சமையற்காரர் ஒருவர் இவ்வுணவை சமைக்கவுள்ளார்.


ரோஸ்டி என அறியப்படும் ஸ்விஸ் ஃபிரைடு உருளைக்கிழங்கு அதிபர் கிம்முக்கு வழங்கப்படவுள்ளது.

முன்பேஜூ எனும் காய்ச்சி வடிகட்டிய மதுபானம் வடகொரியாவில் உருவானது. ஆனால் தற்போது தென்கொரியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்த மதுபானமும் உச்சிமாநாட்டில் பரிமாறப்படவுள்ளது. இதனை தென் கொரிய அரசும் அந்நாட்டு அதிபரின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜான் டோரி எனும் பெயரிலான சுடப்பட்ட மீன் அதிபர் மூனுக்கு வழங்கப்படவுள்ளது. ஏனெனில் இது அவரது சொந்த ஊரான புசானில் பொதுவாக பரிமாறப்படும் உணவாகும்.
 

 


வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்தை பேச்சுவார்த்தை மூலம் குறைக்க முனையும் தூதரக முயற்சிகளின் முடிவே இந்த உச்சிமாநாடு.

பிற நாட்டுத்தலைவர்கள் தங்களது நாட்டுக்கு வரும்போது அவர்களுக்கு பரிமாறும் உணவுகள் வாயிலாக அரசியல் முடிவுகளை எடுக்கும் நாடாக சோல் அறியப்படுகிறது. 2017-ல் அதிபர் டிரம்ப் வருகை தந்தபோது தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு இடையேயுள்ள சர்ச்சைக்குரிய தீவில் பிடிக்கப்பட்ட இறால் மீன் உணவு பரிமாறப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்