பனிமலைகள் உருகுவதால் மனித குலத்துக்கு என்ன ஆபத்து?
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (11:59 IST)
பனிமலைகள் உருகுவதால் மனித குலத்துக்கு என்ன ஆபத்து?
பனிப் பாறைகளில் உறைந்துள்ள நீரைப் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரத்துக்கும், மின்சாரத்துக்கும் உணவுக்கும் நம்பியுள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் அவை உருகி ஓடிக் கொண்டிருக்கின்றன? அவை மாயமானால் நமக்கு ஏற்படும் இழப்பு என்ன?
பனிக்கட்டிகள் ஆறுகளாகி மலையடிவாரங்களை நோக்கிச் செல்லும் போது, கீழே உள்ள பாறைகளைக் கழுவிப் பண்படுத்திக்கொண்டு செல்வது, மனம் கவரும் காட்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை நம் அனைவரின் வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அவை பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் தொழில், வாழ்வாதாரங்கள், இயற்கை மற்றும் காலநிலையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. மேலும் அவை மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட மற்றும் விரைவாக விரிவடையும் சில பகுதிகளில் வாழ்வாதாரத்துக்கும் அவசியமானவை.
மாபெரும் நீர்த்தேக்கங்களைப் போல செயல்படும் பனிப்பாறைகள், தன்னுள் தேக்கி வைத்த நீரை மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் பனியாகப் பொழிந்து, வறண்ட காலங்களில் நீராக உருகி ஓடுகிறது. இதனால், இந்தப் பனிப்பாறைகள் தங்கள் படுகைகளில் உள்ள ஆறுகளில் ஆண்டு முழுவதும் சீரான நீர் விநியோகத்தை உறுதி செய்கின்றன.
நீர் மின்சாரம், நீர்ப்பாசனம், கால்நடைகள், உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்குத் தேவைப்படும் நீருக்குப் பனிப்பாறைகளை மனிதர்கள் நம்பியுள்ளனர். உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சில நாடுகளில் பனிப்பாறையால் பெறப்படும் நீர் பாய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பனிப்பாறைகளின் நேர்த்தியான சமநிலை அண்மைக்காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவை தொடர்ந்து மறைந்து வருகின்றன; வேகமாக மறைந்து வருகின்றன. இது அவற்றை நம்பியுள்ள பொருளாதாரங்களைப் பாதிக்கும். உலகம் எவ்வளவு விரைவாகப் பனிப்பாறைகளை இழந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவற்றைச் சார்ந்திருக்கும் மக்களைப் பாதுகாக்க உதவும் - அது எவ்வளவு தேவை என்பதையும் நாம் காணலாம்.
மழைப்பொழிவு, பனிப்பாறைகளின் தடிமன், பனி மூட்டம் மற்றும் விவசாயம், தொழில், மக்கள் தொகை மற்றும் இயற்கையின் தேவைகள் பற்றிய தகவல்களைப் பயன்படுத்தி, நெதர்லாந்தில் உள்ள உட்ரெக்ட் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர் ஆர்தர் லூட்ஸ் மற்றும் இணை ஆசிரியர்கள் 78 "நீர்க் கோபுரங்களுக்கான" பனிப்பாறை பாதிப்புக் குறியீட்டை உருவாக்கினர். நீர்க் கோபுரம் என்றால் என்ன என்று குழம்பிவிட வேண்டாம். பல பனிப்பாறைகள், மலைத்தொடர்கள் மற்றும் ஆறுகளை ஒரு குழுவாகக் கருதி ஒரு பெயரிடப்படுகின்றன. அவ்வளவுதான்.
ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒவ்வொரு நீர்க் கோபுரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காடியதோடு, எதிர்காலத்தில் மக்கள்தொகை மற்றும் தொழில் பற்றிய கணிப்புகளின் உதவியுடன் அவை எந்த அளவுக்கு பாதிக்கப்படக்கூடியவை என்பதையும் குறிப்பிட்டது.
"உதாரணமாக, சிந்து. கங்கை, மற்றும் மத்திய ஆசியாவில் அமு தர்யா மற்றும் சிர் தர்யா - இவை அதிகம் பாதிக்கப்படும் என லூட்ஸ் கூறுகிறார். காரணம், இவை பனிப்பாறைகள் பதுக்கி வைத்திருக்கும் நீரை உள்ளடக்கியதும் அதிக பனி மூடியிருப்பவையுமாகும். சமவெளிகளில் அவற்றின் தேவைகளும் மிக அதிகமானவை."
உதாரணமாக பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவில் உள்ள சிந்து, உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன ஆதாரமாக உள்ளது. கோடிக் கணக்கான மக்கள் உணவுத்தேவைக்காக இந்த நதியை நம்பியுள்ளனர். மேலும் அந்த நாடுகளின் மக்கள் தொகை மற்றும் பொருளாதாரங்கள் எதிர்காலத்தில் வேகமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
"மேலும், அதிக மக்கள் தொகைக்கு அதிக தண்ணீர் மற்றும் அதிக உணவு தேவை, ஆனால் அதிக வளமான மக்களும், அதிக தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள்," என்கிறார் லூட்ஸ். "பணக்கார நாடுகளில் அதிகம் இறைச்சி உட்கொள்ளப்படுவதால் அதிக தண்ணீர் தேவைப்படுகிறது."
2000 ஆம் ஆண்டில் பனிப்பாறை உருகும் நீரைச் சார்ந்து கங்கை - பிரம்மபுத்திரா மற்றும் சிந்துப் படுகைகளில் மொத்த உற்பத்தி (ஜிடிபி) முறையே $418 பில்லியன், $ 296 பில்லியன் என இருந்தது- இது ஆய்வு செய்யப்பட்ட 78 பனிப்பாறையால் நீர் பெறும் நதி அமைப்புகளில் நான்காவது மற்றும் எட்டாவது இடத்தில் உள்ளன.
ஆனால் 2050 வாக்கில், பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்கதேசத்தின் மக்கள் தொகை கணிசமாக விரிவடையும் மற்றும் அதன் விளைவாக அந்த நாடுகளின் பொருளாதாரம் துரிதப்படுத்தப்படும் போது, அந்த நதியால் வளப்படும் பகுதியின் மொத்த உற்பத்தி $4,947 பில்லியன் மற்றும் $ 2,574 பில்லியன் ஆக உயரும். இது 11.8 மற்றும் 8.7 மடங்கு அதிகரிப்பாகும். இவை, லூட்ஸ் மற்றும் அவரது சகாக்களின் பட்டியலில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்த வளங்களை நாம் எவ்வளவு விரைவாக இழக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை இந்தப் பனிப்பாறை பாதிப்புக் குறியீடு காட்டுகிறது. பனிப்பாறைகள் நமது கிரகத்தில் நிகழும் மாற்றங்களின் நல்ல குறிகாட்டிகளாக பரவலாகக் கருதப்படுகின்றன. சில பனிப்பாறைகள் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விரைவாக எதிர்வினையாற்றுகின்றன.
அதே நேரத்தில் அண்டார்டிகா மற்றும் உயர் ஆர்க்டிக்கின் வறண்ட பள்ளத்தாக்குகளில் மெதுவாக எதிர்வினையாற்றுகின்றன. லண்டன் ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தின் பனிப்பாறை நிபுணர் பெத்தன் டேவிஸ் கூறுகையில், "அதிக பனிப்பொழிவு உள்ள பனிப்பாறைகள் - அதிக பனிப்பொழிவு, அதிக உருகும் இடங்களில் எதிர்வினையாற்றும் நேரம் குறைவாக உள்ளது" என்கிறார்.
பனிப்பாறைகள் எப்போதும் நகர்ந்து கொண்டிருக்கின்றன - பள்ளத்தாக்குகளில் சில சென்டிமீட்டர் அல்லது பல மீட்டர்கள் ஒரே நேரத்தில் நகர்கின்றன. அவற்றின் ஒட்டுமொத்த அளவு, உருகுவதன் மூலம் எவ்வளவு பனி இழக்கப்படுகிறது என்பதையும் புதிய பனி எவ்வளவு விழுகிறது என்பதையும் பொறுத்தது.
ஓராண்டில், பனிப்பொழிவும் உருகிய நீரும் ஒரே அளவில் இருந்தால், ஒரு பனிப்பாறை சமநிலையில் உள்ளது என பொருள் கொள்ளலாம். அதாவது, அளவில் எந்த மாறுதலும் இல்லை. ஆனால் பனிப்பொழிவின் அளவு குறைதல் அல்லது வெப்பநிலை உயர்வு ஆகியவை உருகுவை வேகப்படுத்தும்.
2000 மற்றும் 2019-க்கு இடையில், பனிப்பாறை உருகுவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 267 கிகா டன்கள் தண்ணீர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, தனித்தனியாக கிரீன்லாந்து அல்லது அண்டார்டிகா பனிக்கட்டிகளை இழப்பதை விட வேகமாக அதிகரிக்கிறது.
பூமியின் நிலப்பகுதியில் 8.3% அண்டார்டிக் பனித் தகடுகளும் 1.2% கிரீன்லாந்து பனித் தகடுகளும் உள்ளன. 0.5% நிலம் பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவை பூமியின் மிகச் சிறிய பகுதியையே ஆக்கிரமித்திருந்தாலும் அவை வேகமாக மறைந்து வருகின்றன.
இந்த விகிதத்தில் பனிப்பாறைகள் மறைவதால் நாம் இழப்பது என்ன?
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் காலநிலை விஞ்ஞானி டாம்சின் எட்வர்ட்ஸ் மற்றும் அவரது சகாக்கள் கடல் மட்ட உயர்வில் பனிப்பாறை உருகுவதன் தாக்கம் குறித்து ஒரு மாதிரியை உருவாக்கியுள்ளனர். 2100ஆம் ஆண்டில் 1.5 டிகிரி செல்சியஸுக்கு வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், கடல் மட்டம் 13 செ.மீ உயரும். தற்போதைய விகிதத்தில் தொடர்ந்து வெப்பமடையும் பட்சத்தில், 25 செமீ உயரும் என்றும் மிகவும் மோசமான சூழலில், 42 செமீ கடல் மட்டம் உயரும் என்றும் கணிக்கப்படுகிறது.
இது ஒரு சிறிய அளவு போல் தோன்றலாம், ஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், ஏனெனில் கடலின் மட்டம் சமமாக இல்லை. பெருங்கடல்கள் சில இடங்களில் அதிக அளவு உயரலாம். அது குறைவாக உயரும் பகுதிகளும் உள்ளன. உதாரணமாக, வெப்பமான பகுதிகளில், கடல் நீர்மட்டம் வெப்ப விரிவாக்கத்தால் அதிகரிக்கப்படும்.
கடல் மட்ட உயர்வை பாதிக்கும் அனைத்து காரணிகளிலும், மிகப்பெரியது வெப்ப விரிவாக்கம் ஆகும். அடுத்த மிகப்பெரிய பங்களிப்புகள் மலைப் பனிப்பாறைகள், பனிக்கட்டிகள் உருகுவதாலும் பனிப்பாறை அல்லாத நீர் நதிகளை விட்டு வெளியேறுவதாலும் ஏற்படுகின்றது. இவற்றில் கடந்த 20 ஆண்டுகளில், மலைப் பனிப்பாறைகளில் இருந்து உருகும் நீரால் 21% கூடுதலாக கடல் மட்டம் உயர்கிறது.
நீர்த் தேக்கங்கள் போலப் பயனளிக்கின்றன
நன்னீர்த் தேக்கங்கள் போலப் பயனளிப்பதுடன் சிறந்த சுற்றுச் சூழலுக்கும் பனிப்பாறைகள் பங்களிக்கின்றன.
ஒரு பனிப்பாறையில் உயிர்கள் இல்லாதது போலத் தோன்றலாம், ஆனால் மேற்பரப்பிலும் கீழேயும் தனித்துவமான உயிரினங்களைக் காணலாம். குறைந்த வளிமண்டல அழுத்தம் மற்றும் அதிக புற ஊதா கதிர்வீச்சு பனிப்பாறைகளை ஒரு வசிக்க முடியாத சூழலாக மாற்றினாலும், மேற்பரப்பில், சிறப்புப் பனிப்பாறை ஆல்கே வளரலாம். ஒரு பனிப்பாறையின் மேற்பரப்பில் குழிகள் ஏற்படுத்தப்பட்டு அங்கும் உயிர்கள் வாழலாம்.
சூரிய ஒளி ஊடுருவ முடியாத பனியின் ஆழமான பகுதியில் வாழும் உயிரினங்கள் பாறையிலிருந்து தான் ஆற்றலைப் பெற வேண்டும். தனிப்பட்ட துணை பனிப்பாறை ஏரிகளில், ஆயிரக்கணக்கான தனித்துவமான நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, இருப்பினும் இந்த அணுக முடியாத இடங்களில் வாழும் பல்லுயிரியலின் முழுமையான அளவு என்னவென்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.
பல்லுயிர் சூழல்களைத் தக்கவைக்க பனிப்பாறைகள் அவசியம். "பனிப்பாறை உருகுவது சில பகுதிகளில் முக்கியத்துவம் பெறுகிறது" என்கிறார் ஸூரிச் பல்கலைக்கழகத்தின் உலக பனிப்பாறை கண்காணிப்பு சேவையின் பனிப்பாறை நிபுணர் இனெஸ் டுசைலண்ட்.
ஹிஸ்பானிக் காலத்திற்கு முன்பிருந்தே, உயர் ஆண்டிஸில் உள்ள மக்கள் பயிர்கள் மற்றும் கால்நடைகளை வளர்ப்பதற்கு நீர் ஆதாரமாக போஃபெடேல்களைப் பயன்படுத்தினர்.
மண்ணில் கரி வளமாக இருப்பதால் ஈரநிலங்களும் ஒரு முக்கியமான கார்பன் மடுவாகும். கரி எடுப்பது இன்னும் பரவலாக இல்லை என்பதால் இன்றுவரை இந்த கார்பன் நிறைந்த மண்ணின் பெரும்பகுதி அப்படியே உள்ளது.
"ஆனால் அவற்றுக்கு நீர் வழங்கும் பனிப்பாறைகள் மிகச் சிறியவை. அவற்றில் அதிகபட்சமாக உருகிக் கிடைக்கும் உச்ச நீர் அளவைக் கடந்துவிட்டோம், அதனால் இப்போது உருகிக் கிடைக்கும் நீர் குறைந்து வருகிறது" என்கிறார் டேவிஸ்.
பனிப்பாறைகள் கணிசமாக பங்களிக்க முடியாத அளவுக்குச் சிறிதாகும் முன், பனிப்பாறை உருகிக் கிடைக்கும் அதிக நீர் உச்சபட்ச நீர் எனப்படும். "இங்கு மழைப்பொழிவு மிகவும் பருவகாலமானது, எனவே அவை பனிப்பாறையில் உருகும் நீரைத் தான் மிகவும் நம்பியுள்ளன." ஆண்டெஸ் போன்ற வறண்ட, உயரமான சூழல்களில், இந்த ஈரநிலங்களை பராமரிக்க ஒரே வழி பனிப்பாறை ஓட்டம் மட்டுமே.
ஒரு கணிப்பின் படி, நாம் 2017ஆம் ஆண்டில் 45% மலைப் பனிப்பாறைகளில் அதிகபட்சமாக உருகிக் கிடைக்கும் "உச்ச நீர்" என்ற அளவை அடைந்துவிட்டோம். ஆனால் 22% மலைப் பனிப்பாறைகளுக்கு, பருவநிலை வெப்பமயமாதலின் காரணமாக சுமார் 2050 வரை உருகுவது தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. பொதுவாக, பெரிய பனிப்பாறை உச்ச நீரை அடைய அதிக நேரம் எடுக்கும்.
அதே கணிப்பின் படி, மேற்கு கனடா, மத்திய ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில், பனிப்பாறைகள் சிறியதாக இருப்பதால், உச்ச நீர் நிலை கடந்துவிட்டிருக்கும் அல்லது இன்னும் சில ஆண்டுகளில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவும் பனிப்பாறை நீரை நம்பியுள்ளது, சிறிய பனிப்பாறைகளின் ஆரம்ப எச்சரிக்கையைப் பற்றி "மாற்றங்கள் நமக்கு வரும் என்பதற்கான சமிக்ஞை" என்கிறார் டுசைலன்ட். "பூமி குளிர்ச்சியாகத் தொடங்கும் வரை, அந்த பனிப்பாறைகள் மறைந்து கொண்டிருக்கும்."
ஆனால் டுசாய்லாண்ட் மற்றும் டேவிஸ் இருவரும் மோசமான சேதத்தைத் தவிர்க்க முடியும் என்று வலியுறுத்துகின்றனர். ஐபிசிசி வரையறுத்த பாரிஸ் ஒப்பந்தத்தின் படி, புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸ் ஆகக் கட்டுப்படுத்துவது "எல்லா பனியையும் இழப்பதற்கும் அல்லது அதிகளவு பனியைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை நிர்ணயிக்கும்" என்கிறார் டேவிஸ்.
"1.5 செல்சியஸுக்கு கீழே இருந்தால், பல ஆபத்துகளைத் தவிர்க்கலாம். இன்னும் காலம் கடந்து விட்டதாக நான் நினைக்கவில்லை" என்று அவர் கூறுகிறார்.