பேய் எப்படி இருக்கும்? 1.6 லட்சம் 'பேய்களை ஓட்டிய' போப் ஆண்டவரின் அதிகாரப்பூர்வ "பேயோட்டும்" பாதிரியார் கூறுவது என்ன?
வியாழன், 20 ஏப்ரல் 2023 (13:29 IST)
குழந்தையாக இருக்கும்போது, தனது பெற்றோருடன் மொடெனா நகரில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கத்தோலிக்க ஜெபக் கூட்டங்களில் பங்கேற்பதை கேப்ரியல் அமோர்த் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நகரம் இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரார்த்தனையில் கவனம் செலுத்தாமல், சிறுவயது குழந்தைகளுக்கே உள்ள குறும்புத்தனத்துடன் தேவாலயத்தை சுற்றி கண்ணாமூச்சி விளையாடுவதில் அவர் ஆர்வம் செலுத்தினார்.
அதேவேளையில், அவரது நன்னடத்தைக்காக அம்மா இனிப்புகளை வழங்கும்போது சமத்தாகிவிடுவார். தனது குறும்புக்கார மகன் உலகின் மிகப் பிரபலமான பேயோட்டும் நபர்களில் ஒருவராக வருவார் என்பதை கேப்ரியல் அமோர்த்தின் அம்மா அந்த நேரத்தில் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏறக்குறைய 1,60,000க்கும் மேற்பட்ட பேயோட்டுதல்களை நடத்தியுள்ள ஃபாதர் அமோர்த், பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். இவரை பற்றி ஏற்கனவே நெட்ஃபிளிக்ஸில் ஆவணப்படம் வெளிவந்துள்ள நிலையில், தற்போது ஹாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் பின்னணியில் கதாநாயகனாகவும் அவர் உள்ளார்.
ரஸ்ஸல் க்ரோ நடித்துள்ள தி போப்ஸ் எக்ஸார்சிஸ்ட் (The Pope's Exorcist) திரைப்படம் , இந்த ஏப்ரலில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஃபாதர் அமோர்த்தின் ஆன் எக்ஸார்சிஸ்ட் டெல்ஸ் ஹிஸ் ஸ்டோரி மற்றும் ஆன் எக்ஸார்சிஸ்ட்: நியூ ஸ்டோரீஸ் என்ற இரண்டு புத்தகங்களை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஃபாதர் அமோர்த் நுரையீரல் நோயால் தனது 91 வயதில் கடந்த 2016-ஆம் ஆண்டு காலமானார்.
வாழ்க்கையை மாற்றிய எதிர்பாராத சந்திப்பு
கேப்ரியல் அமோர்த் மே 1, 1925 இல் பிறந்தார். இளைஞராக இருக்கும்போது, இரண்டாம் உலகப் போரில் நாஜிகளுக்கு எதிராக மறைமுகப் போரில் அவர் ஈடுபட்டார். போர் முடிந்து பல ஆண்டுகள் கழித்து அவருக்கு இதற்காக பதக்கமும் வழங்கப்பட்டது. சட்டம், பத்திரிகையியல் படிப்பில் பட்டம் பெற்ற அவர் சிறிது காலம், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். ஆனால் அவர் ஏற்கனவே தனக்கான மதப் பணியை கண்டுபிடித்திருந்தார்.
1954-இல் ஃபாதர் அமோர்த் பாதிரியாக நியமிக்கப்பட்டாலும், 32 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அவர் பேயோட்டுவதை தொடங்கினார். அதே நேரத்தில் பேயோட்டும் நபராக மாறியது தன்னுடைய முடிவு அல்ல என்றும் அவர் பதிவு செய்துள்ளார். ரோமின் துணை ஜெனரலாக இருந்த கார்டினல் உகோ பொலெட்டி(1914-1997) மூலம் அவர் நியமனம் செய்யப்பட்டார். சில பாதிரியார்களுக்கு பேய்களை விரட்டும் அங்கீகாரத்தை வழங்கும் அதிகாரம் கார்டினல் உகோ பொலெட்டியிடம் இருந்தது.
1986ஆம் ஆண்டு காலையில், ஃபாதர் அமோர்த் கார்டினல் பொல்லெட்டியை எதேச்சையாக சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ரோம் மறைமாவட்டத்தில் 36 ஆண்டுகளாக பேயோட்டும் பணியில் ஈடுபட்டுவரும் தந்தை காண்டிடோ அமாண்டினி (1914-1992) மீதான தனது அபிமானத்தை கார்டினல் பொல்லெட்டி பேசியுள்ளார்.
தன்னை, ஃபாதர் அமாண்டினிக்கு உதவியாக அந்த இடத்திலேயே பேயோட்டுபவராக கார்டினல் பொல்லெட்டி மாற்றியதாக ஃபாதர் அமோர்த் குறிப்பிடுகிறார்.
பேய் பிடித்துள்ளது என்பதன் அறிகுறிகளாக கூறப்படுவது என்ன?
சில நாட்களுக்கு பின்னர் பணியில் சேர்ந்த அமோர்த், கத்தோலிக்க மதத்தில் பேயோட்டுவதற்கு முந்தைய 21 விதிகளை மனப்பாடம் செய்வது போன்றவற்றை கற்றுக் கொள்ளத் தொடங்கினார். பேய் பிடித்ததாக நம்பப்படும் ஒருவரிடமிருந்து பேய்களை விரட்டும் நடைமுறை குறித்து பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாடிகன் 1999 இல் இத்தகைய சடங்குகள் பற்றிய வழிகாட்டுதல்களை புதுப்பித்துள்ளது.
அமோர்த் தனது புத்தகத்தில் , "தங்களை பேய் பிடித்துள்ளதாக கூறும் நபர்களில் பலர் உண்மையில் பேயோடு போராடுவதில்லை. அவர்களில் பெரும்பாலான மக்கள் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் நம்பினார்.
“அந்த நபர் முதலில் மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், நான் பேய் ஓட்ட மாட்டேன். முதலில், அவருக்கு என்ன பாதிப்பு என்பது குறித்து அறிந்துகொள்ள நான் விரும்புவேன் ” என்று அமோர்த் எழுதியுள்ளார்.
ஒரு நபர் தனக்குத் தெரியாத மொழிகளில் பேசுவது, தான் அறிந்திருக்க முடியாத நிகழ்வுகள், நபர்கள் குறித்து பேசுவது மற்றும் ஒருநபர் தனது அளவைத் தாண்டி உடல் வலிமையை வெளிப்படுத்துவது ஆகியவை கத்தோலிக்கக் கோட்பாட்டின் படி, பேய்பிடித்துள்ளதன் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
ஃபாதர் அமோர்த் தனது பேயோட்டுதல் நிகழ்வு ஒன்றில், 11 வயது சிறுவன் நான்கு நபர்களின் பிடியில் இருந்து தப்பித்ததாகவும், அவர்களை அவன் பறக்கவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.
ஆனால், பேய் பிடித்திருக்கிறது என்பதன் மிகத் தீவிரமான அறிகுறி புனிதத்தின் மீதான வெறுப்பு. தேவாலயமோ அல்லது பிற மத இடங்களோ எதுவாகிலும் மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில் பேயோட்டுதலை மேற்கொள்ள வேண்டும் என்று வாடிகன் பரிந்துரைக்கிறது. பாதிக்கப்பட்டவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்களின் வீட்டில் சடங்கு செய்யலாம்.
ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக, சாதாரண சூழல்களில் பேயோட்டப்பட வேண்டிய நபர் ஒரு கவச நாற்காலியிலும், தீவிரமான சூழலில் ஸ்ட்ரெச்சரிலும் இருக்க வேண்டும்.
பேயோட்டும் சடங்கின் போது, பேயோட்டுபவருக்கு பாமர மக்கள் உதவலாம். சிலர் பேய் பிடித்ததாக கூறப்படும் நபர்களை கட்டுப்படுத்த உதவுவார்கள், மற்றவர்கள் பிரார்த்தனை செய்வதில் உதவுவார்கள். இருப்பினும், அவர்கள் யாரும், பேய் பிடித்திருப்பதாக கூறப்படும் நபரிடம் பேசக்கூடாது.
மேலும், பேயோட்டுபவர் அதிகமாக உரையாடலை வளர்க்கக்கூடாது. "உங்கள் பெயர் என்ன?", "நீங்கள் தனியாக இருக்கிறீர்களா?" மற்றும் "நீங்கள் எப்போது புறப்படுவீர்கள்?" ஆகியவை கேட்கப்பட வேண்டிய கேள்விகளில் சில. பேயோட்டுதலின் முக்கிய நோக்கமே ஒரு நபரை பிடித்திருப்பதாக கூறப்படும் பேய் தன் பெயரை வெளிப்படுத்த கட்டாயப்படுத்துவதேயாகும்.
"அவர்களைப் பொறுத்தவரை, பெயரைச் சொல்வது ஒரு பெரிய தோல்வி," என்று ஃபாதர் அமோர்த் விளக்கினார். எல்லாவற்றிற்கும் மேலாக, பேயோட்டுபவர் பேய் பிடித்தவர்களை இயேசுவின் பெயரில் விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
பேயோட்டுதல் தொடர்பான முதல் அனுபவம்
ஃபாதர் அமோர்த் தனது முதல் பேயோட்டுதலை 21 பிப்ரவரி 1987 அன்று நிகழ்த்தினார். 25 வயது விவசாயி ஒருவரை பேய் பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த பேயை விரட்ட தனது உதவியாளரான அமோர்த்தை அனுப்ப ஃபாதர் அமாண்டினி முடிவு செய்தார். ரோமில் உள்ள பொன்டிஃபிகல் பல்கலைக்கழகம் அன்டோனியனில் பேயோட்டுதல் நடத்தப்பட்டது. பேயை ஓட்டுவதற்காக வந்திருந்த அமோர்த்திற்கு அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், அமோர்த், பேய் பிடித்திருப்பதாக குறிப்பிடப்படும் நபர் ஆகியோருடன் அங்கு மூன்றாவது நபராக மொழிப் பெயர்ப்பாளர் ஒருவரும் இருந்தார்.
பேய் பிடித்திருப்பதாக கூறப்படும் நபர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவதாக அமோர்த்திடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆங்கிலத்தில்தான் அந்த நபர் தனது முதல் நிந்தனையை கத்த ஆரம்பித்தார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், படிப்பறிவற்ற ஒரு பெண்ணை பிடித்திருந்த பேயை ஓட்டுவதற்காக அமோர்த் சென்றபோது, அவருக்கு தெரியாத மொழியில் அப்பெண் அமோர்த்தை திட்டியுள்ளார்.
“புதிருக்கு விடைக்காணும் வரை நான் பல பாதிரியார்களை பேயோட்டுதலில் பங்கேற்கச் செய்ய வேண்டியதாக இருந்தது. அவர் அராமைக் [இயேசுவால் பேசப்பட்டதாக நம்பப்படும் ஒரு பண்டைய மொழி] மொழியில் பேசினார்”என்று அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
தான் முதன்முதலில் ஒரு சிறுவனுக்கு பேயோட்டியதாகவும் அந்த அனுபவம் மிகவும் பயங்கரமானது என்றும் அமோர்த் குறிப்பிடுகிறார்.
"சிறுவனின் கண்கள் உள்ளே உருண்டன, அவனது தலை நாற்காலியின் பின்புறத்துக்கு சென்றது. அறையில் வெப்பநிலை பயங்கரமாகக் குறைந்துவிட்டது. அவனை பிடித்திருந்த பேய் வெளியேறத் தொடங்கியது" என்று அவர் நினைவுக்கூர்ந்துள்ளார்.
"அங்கே அது அசையாமல் இருந்தது, பல நிமிடங்கள் காற்றில் அப்படியே இருந்தது" தீமைக்கு எதிரான இந்த முதல் போரில் வெற்றி பெற அவருக்கு ஐந்து மாதங்கள் மற்றும் 20 அமர்வுகள் தேவைப்பட்டன. ஆனால், இது குறைவான நேரம்தான் என்று அமோர்த் கூறுகிறார். மற்றொரு சம்பவத்தில் அவருக்கு பேயை ஓட்டுவதற்கு 30 ஆண்டுகள் எடுத்துகொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதேபோல், 10 நிமிடத்தில் பேயை ஓட்டியதாகவும் அவர் கூறுகிறார்.
தன் மீது எத்தனை முறை எச்சில் துப்பப்பட்டுள்ளது என்பதை எண்ண மறந்துவிட்டதாக கூறும் அவர், “ஒருமுறை கிசெல்லா என்ற இத்தாலிய கன்னியாஸ்திரிக்கு பேயோட்ட முயன்றபோது, அவர் என் மீது ஆணிகள், கத்திரிக்கோல், போன்ற உலோகப் பொருட்களை துப்பினார்” என்று கூறுகிறார்.
ஆம், பாதிரியாராக இருந்தாலும் சரி , கன்னியாஸ்திரியாக இருந்தாலும் சரி, அவர்களும் பேய் பிடித்தலில் இருந்து தப்புவதில்லை.
சில சந்தர்ப்பங்களில் அமோர்த் தன் உடல் முழுவதும் காயத்துடன் வெளியே வந்தார் என்று இத்தாலிய பத்திரிகையாளர் மார்கோ டோசாட்டி கூறுகிறார், அவர் சில பேயோட்டுபவர்களின் புத்தகங்களை இணைந்து எழுதியுள்ளார்.
தி போப்ஸ் எக்ஸார்சிஸ்ட் படத்தில் ரஸ்ஸல் க்ரோவின் கதாபாத்திரம் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிய அவர், ` படத்தில் அவர் தாடி வைத்திருந்தார். ஆனால், ஃபாதர் அமோர்த் எப்போதும் தாடியை முழுமையாக மழித்து விடுவார். எனினும், எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னால், முதலில் படத்தை பார்க்க வேண்டும்` என்று அவர் தெரிவித்தார்.
பேயோட்டுபவர்களின் சங்கம்
அமோர்த் நகைச்சுவை உணர்வு மிகுந்த நபர். நகைச்சுவை அவரது அடையாளங்களில் ஒன்றாகவே இருந்தது. ஒருமுறை நபர் ஒருவர் அமோர்த்திடம், `நான் கடவுளை நம்புகிறேன். ஆனால் பின்பற்றவில்லை` என்று கூறினார். அதற்கு அமோர்த் நகைச்சுவையாக, `பேய்களும் அப்படிதான்... அவை கடவுளை நம்புகின்றன, ஆனால் பின்பற்றுவதில்லை. சொல்லபோனால், நான் இதுவரை நாத்திகம் பேசும் பேயை சந்தித்ததே இல்லை` என்று குறிப்பிட்டார்.
1991ல், பேயோட்டுபவர்களுக்கு சங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஃபாதர் அமோர்த்துக்கு ஏற்பட்டது. மேலும், ரோம் மறைமாவட்டத்திற்கு பேயோட்டும் நபராக, அவர் தனது முடிவை ஒரு குறிப்பிட்ட கார்டினாலிடம் தெரிவிக்க விரும்பினார், அவரின் பெயர் என்ன என்பதை வெளியிட அமோர்த் விரும்பவில்லை.
“உங்களுக்கு அத்தகைய விஷயங்களில் நம்பிக்கை உள்ளது என்று நான் நினைப்பதை நீங்கள் விரும்பவில்லையா? ” என்று கார்டினல் கூறியதாக கூறப்படுகிறது.
அப்போது, “சரி, நீங்கள் உங்களுக்கு உதவக்கூடிய புத்தகம் ஒன்றை படிக்க வேண்டும் ” என்று அமோர்த் கூறியுள்ளார். அதற்கு என்ன புத்தகம் என்று கார்னல் கேட்டுள்ளார்.
“நற்செய்திகள்” என்று அமோர்த் பதிலளித்தார். இந்த பதில் கார்னலை ஆச்சரியப்படுத்தியது.
"இயேசு பேய்களை விரட்டுகிறார் என்று சுவிசேஷங்கள்தான் சொல்கிறது. அப்படியானால் நற்செய்தியும் மூடநம்பிக்கையா?" என்று அமோர்த் கேள்வி எழுப்பினார்.
பேயோட்டுபவர்களின் சர்வதேச சங்கம் (IEA) கத்தோலிக்க திருச்சபையால் ஜூன் 13, 2014 அன்று அங்கீகரிக்கப்பட்டது.
பிரேசிலைச் சேர்ந்த மான்சிக்னர் ரூபன்ஸ் மிராக்லியா ஜானி அதன் உறுப்பினர்களில் ஒருவர். 2013 இல் பேயோட்டுபவராக இவர் நியமிக்கப்பட்டார், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, ரோமில் ஒரு பயிற்சி வகுப்பின் போது ஃபாதர் அமோர்த்தை அவர் சந்தித்தார்.
"அவர் ஒரு பண்பட்ட, மகிழ்ச்சியான மற்றும் அறிவார்ந்த நபர்" என்று மான்சிக்னர் ஜானி விவரிக்கிறார்.
அவரது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில், கேப்ரியல் அமோர்த் ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து பேயோட்டுதல்களை நிகழ்த்தினார்.ஆனால் அவர் பத்து முதல் 15 பேய்கள் வரை ஓட்டிய காலம் இருந்தது. இதனால் அவர் பேயோட்டுவதற்கு வரும் அழைப்புகளை குறைக்கத் தொடங்கினார். “திங்கட்கிழமை காலை 6.30 முதல் 7.30 வரை மட்டுமே நேரம் ஒதுக்கப்படும், ரோம் மறைமாவட்டத்தைச் சேராதவர்கள், தயவு செய்து உங்கள் மறைமாவட்டத்தைச் சேர்ந்த பிஷப்பிடம் செல்லுங்கள்” என்றெல்லாம் அவர் கூறத் தொடங்கினார்.
ஏப்ரல் 2016 இல், தி எக்ஸார்சிஸ்ட் என்ற கிளாசிக் திகில் திரைப்படத்தின் இயக்குநரான வில்லியம் ஃபிரைட்கினிடமிருந்து ஃபாதர் அமோர்த்திற்கு ஒரு தகவல் வந்தது. பேயோட்டுதலைப் பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். "எக்ஸார்சிஸ்ட்டுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று பேய் தொடர்பான துப்பறிவு குறிப்பு ஒன்றில் அவர் எழுதியுள்ளார்.
"சற்றே பரபரப்பானதாக இருந்தாலும், யதார்த்தமற்ற காட்சிகளுடன், இது கணிசமான அளவில் துல்லியமானது. இந்த படம் பார்வையாளர்களை அடைந்ததோடு பேயோட்டுபவர்களையும் அவர்களிடம் கொண்டு சேர்த்தது என்று அமோர்த் குறிப்பிட்டிருந்தார்.
சில நாட்களுக்கு பிறகு 1 மே, 2016ல் (அமோர்த் இறப்பதற்கு 4 மாதங்களுக்கு முன்பு) கிறிஸ்டினா என்ற இத்தாலிய கட்டிடக் கலைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட பேயோட்டுதலை படம் பிடித்துகொள்ள அமோர்த் அனுமதி வழங்கினார்.
இதனை நெட்ஃபிக்ஸ் ஆவணப்படமான தி டெவில் அண்ட் ஃபாதர் அமோர்த்தில் நாம் காண முடியும்.
பாலின ஏற்றத்தாழ்வு
தான் 10 பேருக்கு பேயை ஓட்டினால் அதில் 9 பேர் பெண்களாக இருந்தார்கள் என்று ஃபாதர் அமோர்த் குறிப்பிடுகிறார். இது ஏன் என்று அவரால் விளக்க முடியவில்லை. ஒருவேளை, பேய் மேரி மாதாவை பழிவாங்க விரும்பியதோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.
"நான் இயேசுவை அழைப்பதை விட, அன்னையை அழைக்கும் போது நீங்கள் ஏன் அதிகம் பயப்படுகிறீர்கள்?" என்று ஒருமுறை பேயை ஓட்டும்போது அமோர்த் கேட்டதாக மெமரீஸ் ஆஃப் எ எக்ஸார்சிஸ்ட் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அவருக்கு கிடைத்த பதில், “ இயேசுவை விட ஒரு மனிதரால் தோற்கடிக்கப்படுவது என்னை அவமானப்படுத்துகிறது”