ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்திற்கு இன்று மதியம் 3.15 மணி அளவில் அழைத்துச் செல்லப்பட்டு நீதிபதி அஜய் குமார் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிபிஐ தரப்புக்காக ஆஜராகியுள்ள இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் இடையே காரசாரமான வாதம் நடந்து வருகிறது.
குற்றப்பத்திரிகையில் தனது பெயர் இடம்பெறவில்லை என சிதம்பரம் கூறி வருகிறார், ஆனால் குற்றப்பத்திரிகையில் அவரது பெயரை சேர்ப்பதற்கான அத்தனை வேலைகளிலும் நாங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். அதற்குத் தேவையான ஆதாரங்களை சிதம்பரம் கொடுக்காததை இந்த கால தாமதத்திற்கான காரணம். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் மேலும் பல விஷயங்களை எங்களால் தெரிந்து கொள்ள முடியும் என்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து பிபிசி தமிழ் செய்தியாளர் அபர்ணா ராமமூர்த்தி தெரிவிக்கிறார்.
கைது செய்வதற்கு முந்தைய 24 மணிநேரம் சிதம்பரம் உறங்கவே இல்லை என்பதால், அடுத்த நாள் காலை, அதாவது இன்று, வியாழன் காலை கைது செய்யுமாறு சிதம்பரம் தரப்பில் கோரப்பட்டதாவும், அதற்கு சிபிஐ அதிகாரிகள் மறுத்ததாகவும் சிதம்பரத்தின் வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கபில் சிபல் நீதிபதியிடம் தெரிவித்தார்.
வழக்கு தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளன; எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டுள்ளது.
சிதம்பரத்தை ஐந்து நாட்கள் தங்கள் காவலில் சிபிஐ தரப்பில் அனுமதி கோரப்பட்டது என்று துஷார் மேத்தா தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ.
பிணையில் வெளிவர முடியாத பிடியாணைக்கு பின்னர்தான், சிதம்பரம் கைது செய்யப்பட்டதாக துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தன்னுடைய பதவியை சிதம்பரம் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் அதனால் சிலர் லாபமடைந்துள்ளனர் என்றும் கூறிய துஷார் மேத்தா இந்த வழக்கில் சிதம்பரம் குற்றம் செய்ததற்கான முகாந்திரம் உள்ளது என்றும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன என்பதை வெளியே கூற முடியாது. கேட்கப்பட்ட கேள்வி மற்றும் விடைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று துஷார் மேத்தா தெரிவித்தார்.
ப.சிதம்பரம் சிபிஐ நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படும் முன்பு கார்த்தி சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் ஆகியோர் நீதிமன்றம் வந்தடைந்தனர் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
சிதம்பரம்தரப்பின்எதிர்வாதம்
எனினும், குற்றப்பத்திரிகை வரை தயார் செய்யப்பட்டுள்ளதால் விசாரணை முடிந்து விட்டது என்று நீதிமன்றத்தில் வாதிட்ட கபில் சிபல், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டுவதற்கான அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை ஆறு அரசு செயலர்கள் வழங்கியுள்ளனர் அவர்களில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது சிதம்பரம் ஒரு முறைகூட வரமால் இருந்ததில்லை என்று கபில் சிபல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று காலை எட்டு மணிக்கு சிதம்பரம் தூங்கி எழுந்தபின், மதியம் 12.30 மணி முதல் 12 கேள்விகள் கேட்கப்பட்டன என்றும் அவற்றில் ஆறு கேள்விகள் முந்தைய விசாரணைகளில் கேட்கப்பட்டவை என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.
அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு நடக்கிறது என்று சிதம்பரம் தரப்பின் இன்னொரு வழக்கறிஞரான அபிஷேக் மனு சிங்வி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் ஏற்கனவே வாக்குமூலம் கொடுத்தவர், பின்னர் அப்ரூவர் ஆகி மீண்டும் ஒரு வாக்கு மூலம் கொடுக்கிறார். ஆனால் அவர் ஏற்கனவே வேறு வாக்கு மூலம் கொடுத்தார் என நீதிமன்றத்துக்கு கூறவில்லை என்றார்.
அப்போது துஷார் மேத்தா குறுக்கிட்டு காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரினார். ஆனால் சிங்வி தனது தரப்பு வாதம் முடியவில்லை என தெரிவித்தார்.
ஒருவரது ஜாமீன் மனுவை நிராகரிக்க மூன்று அடிப்படையான காரணங்கள் தேவை, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை மட்டுமே காரணமாக கொள்ள முடியாது.
குற்றங்களை ஒப்புக் கொள்வதற்காக மட்டுமே விசாரணை காவலுக்கு உத்தரவிடக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது என அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.
நீதிமன்றத்தில் தாம் பேச விரும்புவதாக சிதம்பரம் தெரிவித்ததாகவும், அப்போது அவரது சார்பாக இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் வாதிடுவதாகவும் துஷார் மேத்தா தெரிவித்தார் என்றும் ஏ.என்.ஐ தெரிவிக்கிறது.
அப்போது குற்றம்சாட்டப்பட்டவர் தமக்காகத் தாமே நீதிமன்றத்தில் வாதிட அனுமதிக்கும் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பு இருப்பதாகவும் சிங்வி சுட்டிக்காட்டினார்.
என் மீது பண மோசடி வழக்கு உள்ளது, எனவே உங்கள் கணக்கில் 5 மில்லியன் பணம் போடப்பட்டுள்ளது உள்ளது. எனவே எங்கள் வங்கி கணக்கு ஆதாரங்களை கொடுக்க கேட்டனர். அதனையடுத்து என்னுடைய மற்றும் கார்த்தி வங்கிக்கணக்கு விவரத்தை வழங்கினோம் என சிதம்பரம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தன்மீதானகுற்றச்சாட்டுகளைமறுத்தப.சிதம்பரம்
நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம், தாமோ தமது குடும்ப உறுப்பினர்களோ ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்படவில்லை என்று தெரிவித்தார்.
"சிபிஐ அல்லது அமலாக்கத் துறை தமக்கு எதிராக எந்த நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றும், சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தமது பெயர் குறிப்பிடப்படவில்லை," என்றும் தெரிவித்தார்.
நிலைமை இவ்வாறாக இருக்க தாமும் தனது மகனும் தவறு செய்தது போன்ற பிம்பம், பொய் பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர்களால் உருவாக்கப்படுவதாகவும் கூறினார்.
2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.
இதுதொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் சிதம்பரம். இடைக்கால நிவாரணம் அளிக்க உயர்நீதிமன்றம் மறுத்ததை அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தை அனுகினார்.
உச்சநீதிமன்றமும் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே, அவருக்கு சிபிஐ லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.