தண்டனை பெற்ற சம்பந்தி, மேலாளர், ஆலோசகருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்

வியாழன், 24 டிசம்பர் 2020 (11:00 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிய டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் பதவியை விட்டு விலகுவதற்கு முன்பு பல்வேறு வழக்குகளில் தண்டனை  பெற்றுள்ள தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மன்னிப்பு உத்தரவுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இப்போது புதிதாக தண்டனை மன்னிப்பு பெற்றிருப்பவர்கள் பட்டியலில் அவரது சம்பந்தி சார்லஸ் குஷ்னர், அவரது தேர்தல் பிரசார மேலாளர் பால் மனாஃபோர்ட், முன்னாள் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 
பால் மனாஃபோர்ட்
 
2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றி பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யத் தலையீடு இருந்ததாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில் 2018ம் ஆண்டு குற்றவாளி என்று  தீர்ப்பளிக்கப்பட்டவர் பால் மனாஃபோர்ட்.
 
நிதி முறைகேடு, தன் மீதான விசாரணையை தடுக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.
 
அவருக்கு ஏழரை ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு அவர் தமது தண்டனையின் பெரும்பாலான பகுதியில் இருந்து தப்பிக்க வழி செய்திருக்கிறது.
 
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மே மாதம் சிறையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார் அவர். இப்போது, வீட்டுச்  சிறையில் இருந்தும் அவருக்கு விடுதலை.
 
தாமும் தம் குடும்பமும் அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும், தாங்களது நன்றி உணர்ச்சியின் அளவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
 
ஆலோசகரும், பணக்கார சம்பந்தியும்
 
நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதற்காக தண்டிக்கப்பட்டவர் ரோஜர் ஸ்டோன். ஆனால், இவருக்கு ஏற்கெனவே இவரது தண்டனையை குறைத்து  உத்தரவிட்டிருந்தார் டிரம்ப்
 
ஆலோசகர், மேலாளர், சம்பந்தி: ரோஜர் ஸ்டோன், பால் மனாஃபோர்ட், சார்லஸ் குஷ்னர்.
 
வரி ஏய்ப்பு, பிராசர நிதி சார்ந்த குற்றங்கள், சாட்சிகளைக் கலைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர் டிரம்பின் சம்பந்தி சார்லஸ் குஷ்னர்.
 
டிரம்பின் மகள் இவான்கா டிரம்பின் மாமனாரான அவர் பெரிய ரியல் எஸ்டேட் முதலாளி. வெள்ளை மாளிகையில் ஆலோசகராக இருந்தவர். இவரது குடும்பத்துக்கு நியூயார்க்கில் இருந்து விர்ஜினியா வரை 20 ஆயிரம் சொத்துகள் உள்ளன.
 
2004ம் ஆண்டு இவருக்கு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 
பாலியல் தொழிலாளியை வைத்து மைத்துனரை மயக்கி...
 
தமக்கு எதிராக அதிகாரிகளோடு ஒத்துழைத்துக் கொண்டிருந்த தமது சொந்த மைத்துனரை மயக்கி கவர ஒரு பாலியல் தொழிலாளியை அமர்த்தினார் சார்லஸ் குஷ்னர். அவர்களது உறவை ரெக்கார்ட் செய்து அதனை தமது சொந்த சகோதரிக்கு அனுப்பினார் என்பது குற்றச்சாட்டு. சாட்சியை சிதைத்தார் என்ற குற்றச்சாட்டு  இதில் இருந்துதான் வருகிறது.

இராக் படுகொலையில் தண்டனை பெற்றவர்களுக்கும் மன்னிப்பு
 
இவர்களையும் சேர்த்து சமீபத்தில் டிரம்ப் மன்னிப்பு வழங்கியவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. இவர்களில் 26 பேருக்கு முழு மன்னிப்பும், 3 பேருக்கு தண்டனை குறைப்பும் கிடைத்துள்ளது. தண்டனை குறைப்பு என்பது சிறையில் இருக்கவேண்டிய காலத்தை குறைப்பதுதானே தவிர, அவர்கள் குற்றவாளி என்று  அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்றுவதோ, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஆக்குவதோ அல்ல.
 
ஆனால் மன்னிப்பு என்பது சில கூடுதல் சலுகைகளை தரக்கூடியது. இதன் மூலம் தண்டனை பெற்றவர்கள் வாக்களிக்கும் உரிமை, நீதிமன்ற ஆலோசகர்களாக செயல்படும் உரிமை ஆகியவற்றை திரும்பப் பெற முடியும்.
 
ரஷ்யத் தலையீடு தொடர்பான சிறப்பு வழக்குரைஞர் விசாரணையில் தண்டிக்கப்பட்ட முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளின்னுக்கு நவம்பர் மாதமே மன்னிப்பு வழங்கினார் டிரம்ப். 2007 இராக் படுகொலைகளில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்ற பிளாக்வாட்டர் ராணுவ ஒப்பந்ததாரர்கள் நான்கு பேர்  கூட மன்னிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.
 
இவர்கள் பிளாக்வாட்டர் என்ற தனியார் ராணுவ நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர்கள். இந்த நான்கு பேரும் 2007ம் ஆண்டு இராக் தலைநகர் பாக்தாத்தில் பொதுமக்கள் குழுமி இருந்த இடத்தில் கண் மூடித்தனமாக இயந்திரத் துப்பாக்கி, கையெறி குண்டு போன்ற ஆயுதங்களால் தாக்கியதில் குழந்தைகள் உட்பட நிராயுதபாணிகளாக இருந்த 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதுதான் குற்றச்சாட்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்