ஆஸ்திரேலிய தொல்குடிகள் வசித்த 46 ஆயிரம் ஆண்டு பழமையான குகைகள் தகர்ப்பு

திங்கள், 1 ஜூன் 2020 (15:17 IST)
மேற்கு ஆஸ்திரேலியாவில் அபாரிஜினல் தொல்குடியினர் வசித்த 46,000 ஆண்டுகள் பழமையான குகைகள் இரும்புத் தாது வெட்டியெடுத்தபோது வெடிவைத்து தகர்க்கப்பட்டன.

ரியோ டின்டோ என்ற பகாசுர சுரங்க நிறுவனம் இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.

இந்த குகைகள் கடைசி பனியுகத்தில் உருவானவை.

பில்பாரா பிராந்தியத்தில் ரியோ டின்டோ நிறுவனம் தமது இரும்பு சுரங்கத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இப்பகுதியில் உள்ள ஜுகன் கார்ஜ் குகைகள் என்ற பெயருடைய இந்த குகைகள் சேதமடைந்தன. இரும்புத் தாது எடுக்கும் இந்த திட்டத்துக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்திருந்தனர்.

தொலைதூரத்தில் உள்ள இந்த பாரம்பரிய தலத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த பல சின்னங்கள் காணப்படுகின்றன.

"இதனால் ஏற்பட்ட மனவேதனையை நினைத்து வருந்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார் இந்நிறுவனத்தின் இரும்புத் தாது பிரிவின் முதன்மை செயலதிகாரி கிறிஸ் சாலிஸ்பரி.

இந்த இடத்தின் பாரம்பரிய உரிமையாளர்களான 'பூட்டு கன்டி குர்ராமா பினிகுரா மக்களுக்கு' (PKKP) நாங்கள் எங்கள் மரியாதையை செலுத்துகிறோம் என்று கூறினார் அவர்.

"என்ன நடந்தது என்பதை அறியவும் எங்கள் கூட்டுறவை வலிமைப்படுத்தவும் பி.கே.கே.பி.யோடு தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். அவசர முடிவாக, ஜுகான் கார்ஜ் பகுதியில் உள்ள எல்லா சுரங்கப் பணித் திட்டங்களையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கலைப் பொருட்களில் மனித தலைமுடியைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு பெல்டும் அடக்கம். இந்த பெல்ட்டை ஆய்வு செய்ததில் பிகேகே மக்களுக்கும் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் அக்குகைகளில் வாழ்ந்தவர்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

'மோசமான பேரிடி'

"மேற்கு ஆஸ்திரேலியாவின் பாரம்பரிய விஷயங்களை மேலாண்மை செய்வது தொடர்பாக துணிச்சலாக பரிசீலனை செய்யவேண்டியது தேவை என்பதை இப்போது புரிந்துகொள்கிறோம்" என்று சாலிஸ்பரி தெரிவித்துள்ளார்.

ஆங்கில - ஆஸ்திரேலிய பெருநிறுவனமான ரியோ டின்டோ-வுக்கு ஆஸ்திரேலியாவில் இரும்புத் தாது சுரங்கம் தவிர, பிற சுரங்க ஈடுபாடுகளும் உள்ளன. பாக்ஸைட், வைரம், யுரேனியம் ஆகியவை அவற்றில் சில.

இந்த குகைகளை இழந்தது மோசமான பேரிடி என்று பிகேகேபி பிரதிநிதி ஜான் ஆஷ்பர்டன் தெரிவித்திருந்தார்.

"ஆஸ்திரேலியாவில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசில பழைய அபாரிஜினல் தொல்குடி தலங்களில் இதுவும் ஒன்று. இதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடமுடியாது" என்று அவர் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

"இந்த கற்புகலிடங்கள் அழிக்கப்பட்டதைக் கண்டு எங்கள் மக்கள் ஆழமான வேதனையும், சோகமும் அடைந்துள்ளனர்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இந்த வெடிப்பு நிகழ்ந்துவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" என்று அபாரிஜினல் சமூகத்தை சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் தொல்குடி விவகார அமைச்சருமான கென் வையாட் தெரிவித்தார். ஆனால், இது நிஜமாகவே நடந்த பிழையாகத் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசின் சட்டங்கள் இந்த விவகாரத்தில் தோற்றுப் போய்விட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்