தெரியாத எண்ணிலிருந்து வந்த வாட்சப் வீடியோ கால் அழைப்பால் 55 ஆயிரம் ரூபாயை இழந்த இளைஞர்

செவ்வாய், 29 மார்ச் 2022 (08:53 IST)
வாட்சப் செயலியில் தனக்குத் தெரியாத எண்ணிலிருந்து வந்த வீடியோ கால் அழைப்பை எடுத்த இளைஞரை மிரட்டி ஒரு கும்பல் ரூ.55,000-ஐ பிடுங்கியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
 
இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர், வாட்சப் வீடியோ காலில் அழைத்தவர்கள் தன்னை மிரட்டி பணம் கேட்டதாகவும் இல்லையென்றால் தனது புகைப்படத்தை வைத்து மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டியதாகக் தெரிவித்திருந்தார்.
 
அந்த இளைஞருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு, தெரியாத எண்ணிலிருந்து வாட்சப் அழைப்பு ஒன்று வந்தது.
 
அந்த அழைப்பை எடுத்த போது அதில் யாரும் இல்லை, எந்தக் குரலும் வரவில்லை. இதனால் அழைப்பை துண்டித்திருக்கிறார். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு அவரின் மார்ஃபிங் செய்யப்பட்ட விடியோ ஒன்று செல்பேசிக்கு வந்தது.
 
உடனடியாக பணம் அனுப்பவில்லையென்றால், விடியோவை இளைஞரின் செல்பேசியில் இருக்கும் எண்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டல் வந்துள்ளது.
 
இப்படி மிரட்டியே 5,000 ரூபாய் பிறகு 30,000 ரூபாய் மூன்றாவது முறையாக 20,000 ரூபாய் என பிடுங்கியுள்ளனர் எனத் தெரிவித்தார் அந்த இளைஞர். மிரட்டல் தொடர்ந்ததால், பிறகு அவர் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
 
இதுபோன்று ஏராளமான மோசடிகள் தொடர்சியாக நடப்பதாக காவல்துறையினர் பல முறை எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து மோசடி கும்பல்களிடம் பலரும் சிக்குவது குறித்து காவல்துறையினரும் கவலை தெரிவித்துள்ளதாக தினமணியின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்