சாயிரா நரசிம்மா ரெட்டி - சினிமா விமர்சனம்

Webdunia
புதன், 2 அக்டோபர் 2019 (16:43 IST)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் இருந்த உய்யலவாடாவைச் சேர்ந்த பாளையக்காரரின் மகனான நரசிம்ம ரெட்டியின் கதை.


 
1840களின் பிற்பகுதியில் விவசாயிகளை திரட்டி அவர் நடத்திய புரட்சியின் கதைதான் சாயிரா நரசிம்மா ரெட்டி. வரலாற்றுக் கதையை சினிமாவுக்காக ரொம்பவே மாற்றி திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
 
திரைப்படம் சாயிரா நரசிம்மா ரெட்டி
நடிகர்கள் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, தமன்னா, நயன்தாரா, அமிதாப்பச்சன், சுதீப், ஜகபதிபாபு, ரவி கிஷண்
இசை அமித் த்ரிவேதி, ஜூலியஸ் பாக்கியம்
ஒளிப்பதிவு ரத்னவேல்
இயக்கம் சுரேந்தர் ரெட்டி
உய்யலவாடாவின் பாளையக்காரர் நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி). அவரது ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி விவசாய வரி வசூல் முறையில் சில மாற்றங்களை செய்கிறது. இதனை விவசாயிகளும் பல பாளையக்காரர்களும் எதிர்க்கிறார்கள்.
 
குறிப்பாக நரசிம்மா ரெட்டி கடுமையாக எதிர்க்கிறார். விவசாயிகளும் அவர் பின்னால் திரள்கிறார்கள். முடிவில் கைதுசெய்யப்படும் நரசிம்மா ரெட்டி தூக்கிலிடப்படுகிறார்.
 
சுருக்கமாகச் சொன்னால், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு எதிராக விவசாயிகளைத் திரட்டி நரசிம்மா ரெட்டி நடத்தும் போராட்டம்தான் இந்தப் படம்.
 
வரலாற்றுத் திரைப்படங்களை எடுக்கும்போது அதற்கு ஒரு காவியத் தன்மை கொடுப்பதற்காக நிஜமாக நடந்த கதையில் சில மாற்றங்களைச் செய்வதுண்டு. இந்தப் படத்திலும் அவையெல்லாம் உண்டு.
 
பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள், மெய்சிலிர்க்கவைக்கும் சண்டைக் காட்சிகள், பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் பங்கேற்கும் போர்க்களக் காட்சிகள் ஆகியவையும் உண்டு.
 
எல்லாம் இருந்தும் திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார்கள். 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் இந்தத் திரைப்படம் பல இடங்களில் சோர்வையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது. பல படங்கள் எப்போது முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்.
 
ஆனால், இந்தப் படத்தில் பல காட்சிகளே எப்போது முடியுமென்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்கு நீளம்.
 
துவக்கத்திலிருந்தே பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்துப் போராடும் வீரனின் கதை என்று வைத்த பிறகு, அவருக்கு ஒரு காதலி, ஒரு மனைவி, அவர்களுக்கென பாடல்கள் என பொறுமையைக் கடுமையாக சோதிக்கிறார்கள்.
 
தமிழ்நாட்டிலிருந்து வந்து நரசிம்மா ரெட்டியுடன் சேர்ந்துகொள்கிறது ராஜபாண்டி (விஜய் சேதுபதி) என்ற பாத்திரம்.
 
ஆனால், கதையோடு சுத்தமாக ஓட்டவில்லை. பல இடங்களில் பாகுபலி படத்தின் தாக்கம் தெரிகிறது. குறிப்பாக துவக்கத்தில் மாடுகள் வெறிபிடித்து ஓடிவரும் காட்சி.
 
சிரஞ்சீவியைப் பொறுத்தவரை அவரது மறுவருகைக்குத் தேவையான கவனத்தை இந்தப் படம் கொடுக்கும். ஆனால், படத்தில் உள்ள பிறருக்கு அப்படிச் சொல்ல முடியாது. குறிப்பாக அமிதாப் வரும் காட்சியெல்லாம் கூர்ந்து கவனித்தால்தான் உண்டு.
 
கதாநாயகிகளாக வரும் நயன்தாரா, தமன்னாவுக்கும் பெரிய பாத்திரங்கள் இல்லை.
 
பின்னணி இசை பரவாயில்லை ரகம். மொத்தம் நான்கு பாடல்கள். அதில் இரண்டு பாடல்கள் தேறுகின்றன. ரத்னவேலின் ஒளிப்பதிவு படத்தின் பலங்களில் ஒன்று. படத்தில் வரும் போர்க்களக் காட்சிகள் அட்டகாசமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.
 
2007க்குப் பிறகு சிரஞ்சீவியை மீண்டும் தெலுங்கு திரைக்களத்தில் நிறுத்துகிறது இந்தப் படம். ஆனால், மற்ற ரசிகர்கள் சும்மா பார்த்துவைக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்