அச்செய்தியில் அவர் தெரிவித்ததாக, "மனித உரிமை நிலவரங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் தனிமனிதரில் தங்கியிருப்பதில்லை. புதிய ஒருவர் பதவிக்கு வருவதால் மாத்திரம் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது.
பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக மாயாஜால வித்தைகளை செய்து மனித உரிமைகள் செயற்பாடுகளில் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கூட போலீஸ் வன்முறைகள் குறைந்திருந்த போதிலும் முற்றாக இல்லாமல் போகவில்லை. மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்கள் எனும்போது அது தனிமனிதரில் தங்கியிருப்பதில்லை. ஒட்டுமொத்த மக்களின் மனநிலையில் மாற்றங்கள் வர வேண்டும். குறிப்பாக, பொறிமுறையில் மாற்றம் ஒன்றே நாட்டுக்கு அவசியம்."
"இம்மாதம் 9ஆம் தேதி அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. மாறாக அரசியல்வாதிகளின் வீடுகளைத் தாக்கியதாகவும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் பலரை போலீசார் கைது செய்துவருகிறார்கள். நியாயமான சந்தேகத்தின் அடிப்படையிலோ அல்லது ஆதாரத்தின் அடிப்படையிலோ இந்த கைதுகள் இடம்பெறவில்லை என்பதுபோலவே எமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன" என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தீர்வு விவகாரத்தில் இந்தியாவின் பொறுப்பை நிறைவேற்றுங்கள்"
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.
இந்திய தூதுவருடன் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்னிறுத்திய நடவடிக்கைகள் தற்போது ஸ்தம்பித்துள்ளது என்று அவரிடம் சுட்டிக் காட்டியதாகவும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "தற்போது நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை நிலவுவதால், தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால் இதுகுறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தூதுவர் கோபால் பாக்லேவுடம் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.
அதற்கு பதிலளித்த தூதுவர், இப்போது நாட்டில் இடம்பெற்று வரும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை இச்சந்திப்பின்போது புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் தூதுவர் கோபால் பாக்லே ஏதேனும் தெரிவித்தாரா என்று எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது, 'இல்லை' என்று பதிலளித்த அவர், இவ்விடயத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதைத் தாம் தூதுவரிடம் தெளிவுபடுத்தியதாகக் கூறினார்" என, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நிற்க வேண்டாம்"
எரிபொருளுடன் மேலும் 3 கப்பல்கள் விரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ள மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இன்னும் மூன்று தினங்களுக்கு பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளதாக, 'தினகரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தேவையான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் அதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும், "நேற்று டீசல் கப்பல் ஒன்று நாட்டை வந்துடைந்துள்ளதுடன் விரைவில் மேலும் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளன.
இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைக்கவுள்ள மூன்று எரிபொருள் கப்பல்களே விரைவில் நாட்டுக்கு வரவுள்ளன" என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.