பிரிட்டனில் மீண்டும் மதுபான கடைகள் மற்றும் பார்கள் உள்ளிட்டவை, சனிக்கிழமை (ஜூலை 4) முதல் திறக்கப்பட்டுள்ள்து.
இந்த நிலையில், குடித்துவிட்டு வருபவர்களால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது என லண்டன் மாநகரின் போலீஸ் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 3 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் மதுபான பார்கள் உள்ளிட்டவை ஜூலை 4-ஆம் தேதி திறக்கப்பட்ட சூழலில், மிகுந்த எச்சரிக்கையுடன் மக்கள் பாதுகாப்பு தொடர்பான கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்களும், அமைச்சர்களும் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலையை தவிர்க்க மக்கள் அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டுமென்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும், அரசு அதிகாரிகள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்சின் போலீஸ் கூட்டமைப்பு ஒன்றை சேர்ந்த ஜான் ஆப்டர் கூறுகையில், "குடித்துவிட்டு வருபவர்களால் நிச்சயம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது. அவர்கள் அவ்வாறு பின்பற்ற மாட்டார்கள் என்பதும் மிகவும் தெளிவாக தெரிகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
"மிகவும் பரபரப்பான இரவாக அமைந்தது இந்த இரவு. ஆனால் போலீஸ் அதிகாரிகள் முடிந்தவரை திறன்பட சமாளித்தனர். சில பகுதிகளில் பிரச்னைகள் ஏற்பட்டு அதிகாரிகள் தாக்கப்பட்டதும் நடந்துள்ளது,'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
லண்டன் உள்ளிட்ட பிரிட்டனின் பல இடங்களில் பெருந்திரளாக மக்கள் மதுபான விடுதிகளில் அருகருகே அமர்ந்து மது அருந்தும் ஏராளமான படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகியுள்ளன. இவை பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக கூறப்படுகிறது.
இதனிடையே பெரும்பாலான மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டதாக போலீஸ்துறையின் சார்பாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.