ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ஏழுபேர் விடுதலை தொடர்பான முடிவு என்ன ஆனது?

வெள்ளி, 20 மார்ச் 2020 (17:04 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பல்வேறு புலனாய்வு அமைப்புகளின் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகுதான், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கபோவதாக ஆளுநர் கூறியுள்ளார் என சட்டத்துறை அமைச்சர் சண்முகம் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வேண்டுமென, கடந்த செப்டம்பர் 2018ல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநரின் பதில் இரண்டு ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்தது.

தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏ சிவகுமார்(தாயகம் கவி) ஏழுபேர் விடுதலை தொடர்பாக ஆளுநரின் பதில் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு அமைப்புகள் புலானய்வு நடத்தி வருகின்றனர். அந்த அமைப்புகளை கண்காணிக்கும் அமைப்பு(Multi disciplinary monitoring agency) விசாரணை அறிக்கையை தந்தபின்னர், அதனை வைத்துதான் விடுதலை பற்றி முடிவு செய்யமுடியும் என ஆளுநர் கூறினார் என்றார்.

2018 செப்டம்பர் 6ம் தேதி வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பில், அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அதனை அடுத்து, 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடத்தப்பட்டு, ஏழு பேரும் விடுவிக்கபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரின் முடிவுதான் இறுதியானது என்பதால், ஏழு பேரும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் ஆளுநர் ஏன் மௌனமாக இருக்கிறார் என அவ்வப்போது பொது தளங்களிலும் விவாதிக்கப்பட்டது. ஆளுநர் பதில் தரவேண்டும் எனக் கோரி, சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் பேரணி நடத்தினர். ஆனால், ஆளுநர் முடிவை தெரிவிக்கவேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது என அதிமுக அமைச்சர்கள் தெரிவித்துவந்தனர். இந்நிலையில்தான் ஆளுநர் விசாரணை அறிக்கைக்காக காத்திருக்கிறார் என்ற தகவல் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்