ஆபாச காட்சிகள் ஓடிய பாட்னா ரயில் நிலைய திரைகள் - அதிர்ச்சியில் பயணிகள்!
செவ்வாய், 21 மார்ச் 2023 (09:12 IST)
பிகாரின் பாட்னா ரயில் நிலையத்தில் நிறுவப்பட்டிருந்த டிவி திரைகளில் விளம்பரங்களுக்குப் பதிலாக சுமார் மூன்று நிமிடங்களுக்கு வயது வந்தோருக்கானதாக கருதப்படும் ஆபாச காணொளி ஒளிபரப்பானதால் அதைப் பார்த்த பயணிகள் திகைத்துப் போனார்கள்.
மக்கள் கூடும் பொது இடமான ஒரு ரயில் நிலையத்தில் இப்படியும் கூட நடக்குமா என்று கேட்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை ரயில் நிலையத்தின் நெரிசல் நேரத்தில் காலை 9:30 மணியளவில் நடந்திருக்கிறது.
பயணிகளில் சிலர், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) ஆகியவற்றிடம் உடனடியாக இந்த காட்சிகள் குறித்து புகார் அளித்தனர்.
இதற்கிடையில், இந்த காணொளியை சில பயணிகள் தங்களுடைய செல்பேசியில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் சிலர், அந்த காணொளிகளுக்குரிய பதில் இடுகையில் பதிவிட்டுள்ளனர்.
நடவடிக்கை எடுத்த ரயில்வே துறை
இந்த நிலையில், ரயில் நிலைய டிவி திரைகளில் விளம்பரங்களை இயக்குவதற்கு பொறுப்பான ஏஜென்சியான தத்தா கம்யூனிகேஷன் நிறுவனம், ரயில்வே துறையால் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் அலட்சியமாக செயல்பட்டதற்காக அந்நிறுவனத்துக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மாநில அரசின் ரயில்வே காவல் துறை நடவடிக்கை எடுக்க தாமதமானதாகவும் பின்னர் ரயில்வே பாதுகாப்புப்படையினர் தத்தா கம்யூனிகேஷன் நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ஆபாச வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
நடந்த சம்பவம் தொடர்பாக தத்தா கம்யூனிகேஷன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் சுஷில் குமார் தெரிவித்தனர்.
இந்த ரயில் நிலையத்தில் விளம்பர காட்சிகளை திரைகளில் ஒளிபரப்பும் பொறுப்புக்குரிய அலுவலர் காவல்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் ஆஜராகத் தவறினால் கைது வாரன்ட் பெறப்பட்டு அவரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ரயில் நிலைய டிவி திரைகளில் விளம்பரங்களை ஸ்ட்ரீம் செய்ய அந்த ஏஜென்சிக்கு அங்கீகாரம் அளித்த ஒப்பந்தத்தை ரயில்வே துறை நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது.