பிரா அணியாவிட்டால் மார்பகங்கள் தளருமா? பெரிய மார்பகங்கள் சிக்கலை ஏற்படுத்துமா?

வியாழன், 16 மார்ச் 2023 (09:40 IST)
பெண்களின் மார்பக ஆரோக்கியம் குறித்து, பலரிடமும் ஏராளமான குழப்பங்களும் சந்தேகங்களும் நிலவுகின்றன. குறிப்பாக ‘பிரா’ அணிவது குறித்த வதந்திகள் அதிகம் காணப்படுகின்றன.

பெண்கள் தங்களது உடைகளை சௌகரியமாக அணிவதற்கு பிராக்கள் உதவி செய்கின்றன.நடைமுறையில் பார்க்கும்போது, பள்ளி & கல்லூரி மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை பெரும்பாலானோர் தங்களது அன்றாட வாழ்வில் பிராக்கள் அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம் பிராக்கள் அணிவதில் அவர்களுக்கு பல சந்தேகங்களும் உள்ளன.
 
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 13ஆம் தேதி, “No Bra Day” கடைப்பிடிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பெண்கள் தங்களின் மார்பகங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
 
அன்றைய தினம் பெண்கள் பிராக்கள் அணியாமல் சென்று, இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிராச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் சில பெண்கள், பிராக்கள் அணிவதால்தான் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது என நம்ப துவங்குகின்றனர்.
பிராக்கள் அணியும்போது தங்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதால், பிரா அணிவதை தவிர்க்கும் பெண்களும் இங்கு இருக்கின்றனர்.
 
இதனால், ”தொடர்ச்சியாக நீண்டகாலம் பிராக்கள் அணியாமல் இருந்தால், பெண்களின் உடல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுமா, மார்பகங்கள் தளர்வடைந்துவிடுமா” என்ற குழப்பமும் பெண்களுக்கு ஏற்படுகிறது.
 
உண்மையில் பிராக்கள் அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் உடலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துமா? பெண்கள் தங்களுடைய மார்பகங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது என்ன? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
 
"மார்பகங்கள் குறித்த புரிதல் அவசியம்"
 
”இதுபோன்ற பல குழப்பங்களை தவிர்ப்பதற்கு முதலில் நமக்கு நம்முடைய உடல் பற்றிய புரிதல் அவசியம். குறிப்பாக பெண்களுக்கு தங்களுடைய மார்பகங்கள் குறித்த புரிதல் இருக்க வேண்டும்” என்கிறார் மகப்பேறு மருத்துவர் பாலகுமாரி.
 
”பெண்களுடைய மார்பகங்கள் கொழுப்பினாலும், பால்சுரப்பிகளைக் கொண்ட திசுக்களாலும் ஆனது. அதாவது வாய் பகுதிகளில் எச்சில் ஊறுவதற்கு சில சுரப்பிகள் இருப்பது போல, மார்பகங்களில் பால் சுரப்பதற்கான சுரப்பிகள் இருக்கின்றன.
 
சிலருக்கு பால் சுரப்பிகளைக் கொண்ட திசுக்கள் அதிகமாகவும், கொழுப்பு திசுக்கள் குறைவாகவும் இருக்கலாம். மற்ற சிலருக்கு கொழுப்பு திசுக்கள் அதிகமாகவும், பால் சுரப்பிகளைக் கொண்ட திசுக்கள் குறைவாகவும் இருக்கலாம். இது ஒவ்வொருவரின் உடல் அமைப்பை பொறுத்து மாறுபடும்.
 
இந்த திசுக்களானது வயது மூப்படையும் போது இயல்பாகவே தளர்வடையும். அதாவது வயது மூப்பு அதிகரிக்கும்போது மார்பகங்கள் தளர்வு அடைவது என்பது இயற்கையான விஷயம். பிராக்கள் அணியாமல் இருந்தால் மார்பகங்கள் தளர்வடையும் என்று கூறுவது உண்மையல்ல” என்று அவர் குறிப்பிடுகிறார்.
 
”அதேபோல் பிராக்களை இறுக்கமாக அணிவதால் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்று கூறுவதும் உண்மையல்ல. உள்ளாடைகள் இறுக்கமாக அணியும்போது, அதனால் தோல் பகுதிகளில் தடுப்புகள் ஏற்படலாம். மேலும் வியர்வையினால் அந்த இடங்களில், அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். தொடர்ச்சியாக மிக இறுக்கமான உள்ளாடைகளை அணியும்போது அவர்களுக்கு மார்பக பகுதிகளில் வலி ஏற்படலாம். எனவே பெண்கள் சரியான அளவில் பிராக்களை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். இதனால் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்று அச்சம் கொள்ள தேவையில்லை” என்று அவர் கூறுகிறார் .
“பெரிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு, இயல்பாகவே மார்பக சரிவு ஏற்படுவது வழக்கம். அதனால் அவர்களுக்கு முதுகு வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதனால் பிராக்கள் அணிந்து கொள்ளும்போது, அது அவர்களுக்கு தற்காலிகமாக ஓர் சௌகரிய நிலையை கொடுக்கிறது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் முதுகு வலி போன்ற பிரச்னைகளையும் தவிர்க்க முடியும். பொதுவாகவே `பிரா` அணிவது ஒரு தற்காலிக சௌகரியத்திற்காகத்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுவே சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால், அவர்கள் அணிய தேவையில்லை.
 
எனவே பிராக்கள் அணிவது மார்பகங்களில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. இதனால் நன்மையும் கிடையாது, தீமையும் கிடையாது” என்கிறார் மருத்துவர் பாலகுமாரி.
 
மார்பக தளர்வை தடுப்பதற்கு கிரீம்கள் பயன்படுத்தலாமா?
 
”மார்பக தளர்வு அடைவது இயற்கையான விஷயம் என்பதை முதலில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஆண்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம். பெண்களின் உடல் மீது ஆண்களுக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புகள்தான், பெண்களுக்கு ஒருவித சோர்வான மனநிலையை உருவாக்குகிறது” என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் காவ்யா கிருஷ்ணன்.
 
அவர் மேலும் கூறும்போது, “இன்று ஆன்லைனில் மார்பக தளர்வுகளை தடுப்பதற்கான கிரீம்கள் என ஏதேதோ விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் அதுவெல்லாம் போலியானவை. கிரீம்களால் நிச்சயம் மார்பக தளர்வுகளை தடுக்க முடியாது. மருத்துவ ரீதியாக அப்படி எதுவும் நிரூபனம் ஆகவில்லை. மக்கள் இதுபோன்ற விளம்பரங்களை பார்த்து ஏமாறக் கூடாது. இயற்கையாக உடலில் நடக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மக்களிடம் வர வேண்டும்.
 
வயது அதிகரிக்கும்போது பெண்களுக்கு மார்பக தளர்வுகள் ஏற்படுவது போலவே, பாலூட்டும் தாய்மார்களுக்கும் மார்பக தளர்வுகள் ஏற்படும். இது உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நடக்கக்கூடிய ஒன்றுதான். இதில் யாரும் விதிவிலக்கல்ல. எனவே இது குறித்து யாரும் கவலைகொள்ள தேவையில்லை. அதேபோல் பாலூட்டுவதால் மட்டும்தான் மார்பகங்கள் தளர்வடைகிறது என்ற தவறான எண்ணமும் இங்கு சிலரிடம் இருக்கிறது. ஆனால் அதுவும் உண்மையில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
 
"சிறிய மார்பகங்கள் குறித்த தாழ்வு மனப்பான்மை"
 
”சிறிய மார்பகங்கள் இருக்கும் பெண்களுக்கு அதுகுறித்த தாழ்வு மனப்பான்மை இருப்பதை காணமுடிகிறது. ஆனால் அது வருந்தக்கூடிய விஷயமல்ல. இயற்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான உடலமைப்புகள் இருக்கின்றன. எனவே இதுதான் சரியான உடல் அமைப்பு, இதுதான் சரியான மார்பக அளவு என்று எதுவும் கிடையாது. ஆனால் நம்முடைய உடல் அமைப்பு காரணமாக நமக்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டால், அதற்காக நாம் சில சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம்” என்று விளக்குகிறார் மருத்துவர் பாலகுமாரி.
 
“உதாரணமாக பெரிய அளவிலான மார்பகங்கள் உடையவர்கள், அதனால் முதுகு வலியையோ, தோள்பட்டை வலியையோ சந்திக்கும்போது, அவர்கள் அறுவை சிகிச்சை மூலம் தங்களது மார்பக அளவை குறைத்துக்கொள்ளலாம். அதனை ’Breast reduction Surgery’ என்று கூறுவோம்.
 
அதேபோல் சிறிய மார்பகங்கள் உடையவர்கள் அதனால் மிகுந்த தாழ்வு மனப்பான்மைக் கொண்டிருந்தால், அதற்காக Breast enhancement surgery செய்துக்கொள்ளலாம். ஆனால் இது எதுவுமே மருத்துவர்களாகிய நாங்கள் பரிந்துரைக்க விரும்புவதில்லை. இது முழுக்க முழுக்க தனிநபர் விருப்பம் மற்றும் அவர்களுடைய தேவை சார்ந்தது.
 
இங்கே மற்றொரு விஷயத்தையும் நாம் குறிப்பிட வேண்டும். சிறிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கும் எனவும், பெரிய மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் எனவும் மற்றொரு பொய்யான நம்பிக்கை இருக்கிறது.
 
ஆனால் உண்மை என்னவென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது குழந்தைக்கு பாலூட்டுவதற்கு தேவையான அளவு பால் சுரப்பிகள் அவர்களது மார்பகங்களில் இருக்கின்றன. மார்பக அளவிற்கும், பாலூட்டுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
 
மாதவிடாய்க்கு பின் சுயபரிசோதனை அவசியம்
 
”மார்பக புற்றுநோயிலிருந்து பெண்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கு மாதம் ஒருமுறை தங்களுடைய வீட்டிலேயே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார் மருத்துவர் மனு.
 
அவர் மேலும் கூறும்போது, “ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்தப் பிறகு, பெண்கள் தங்களுடைய மார்பகங்களை பரிசோதனை செய்ய வேண்டும். கைகளினால் மார்பகங்கள் முழுவதும் தொட்டுப் பார்க்க வேண்டும்.
 
அப்போது எங்கேனும் வித்தியாசமாக உணர்ந்தாலோ, அல்லது கட்டி போல தென்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாக 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்த பரிசோதனையை கட்டாயம் மாதம்தோறும் செய்துகொள்ள வேண்டும். இது ஒரு எளிய பரிசோதனை முறைதான். அதேபோல் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஒருமுறை மெமோகிராம் பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் தங்களுடைய அரோக்கியத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வந்தாலே, பல பிரச்னைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்” என்று குறிப்பிடுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்