ஹ்வாசாங்-17 ஏவுகணையை செலுத்த ஹாலிவுட் பாணியில் டிரெய்லர் காட்டிய வட கொரியா

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (23:48 IST)
கிம் ஜாங்-உன்னின் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவும் ஹாலிவுட் பாணியில் காண்பிக்கப்பட்ட டிரெய்லர் காணொளி.
 
வட கொரியா அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியிருக்கிறது - இதன் மூலம் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறது அந்த நாடு. ஆனால் வட கொரியா அரசு நடத்தும் தொலைக்காட்சியில் இது பற்றிய செய்தி ஒளிபரப்பப்பட்ட விதம்தான் பரவலான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வழக்கமாக வெற்றிக்களிப்பை பகட்டில்லாத வகையில் வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்ட வட கொரியா, இந்த முறை அது முன்பு எப்போதும் நடந்து கொள்ளாத வகையில் செயல்பட்டிருக்கிறது. இந்த முறை ஹாலிவுட் பாணி திரைப்பட டிரெய்லரை போல ஏவுகணை ஏவும் காட்சியை வடகொரியா காண்பித்திருக்கிறது.
 
தோல் ஜாக்கெட் மற்றும் கறுப்பு நிற கண்ணாடியில் கதாநாயகன் போல தோன்றிய வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன், வீடியோ எஃபெக்ஸ்ட், திரைப்படத்தில் வருவது போன்ற பின்னணி இசையுடன் காணொளியில் தோன்றியிருக்கிறார்.
 
வட கொரிய தொலைக்காட்சி பொதுவாக ராணுவ வாத்திய குழு வாசிக்கும் தேசபக்தி மற்றும் உழைப்பின் சாதனைகள் பற்றிய திரைப்படங்களுடன் கிம் குடும்ப பிரசாரத்தின் தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் மற்றும் தகவல்களையே ஒளிபரப்பும். அத்தகைய வழக்கத்தில் இருந்து விடுபட்டு இப்போது புதிய காணொளியை வெளியிட்டிருக்கிறது.
 
 
 
 
கிம் ஜோங் உன் வழங்கும் செய்தி உலகிற்கு தெளிவாக உள்ளது - குறிப்பாக அமெரிக்காவின் எந்த தடைகளும் தங்களைத் தடுக்காது என்பதுதான் அது.
 
இந்த வகையில்தான் ஹ்வாசாங் -17 ஏவுகணை பற்றிய தனது செய்தியையும் வித்தியாசமாக வழங்கியிருக்கிறது அந்த தொலைக்காட்சி.
 
அதுவும் செய்தி அறிக்கை வடிவில் இது வழங்கப்பட்டது.
 
பார்வையாளர்களுக்கு 15 நிமிட வீடியோ எஃபெக்ட்ஸ் காட்சிகள் வந்த பிறகு, அரங்கேற்றப்பட்ட நிகழ்வு போல கிம்ஜோங் உன் ஒரு பெரிய கதவு திறக்கப்பட்டு அதில் இருந்து இரு ராணுவ உயரதிகாரிகள், இடதும் வலதும் நடந்து வர மத்தியில் நாயகன் போல வருகிறார் கிம் ஜோங் உன். கறுப்பு கண்ணாடி அணிந்தபடி வரும் அவர் கேமிராவை நேரடியாகப் பார்த்து, "இதை நாம் செய்வோம்" என்று சொல்கிறார்.
 
ஏவுகணை ஏவப்படும் காட்சிகளுடன் பின்னணியில் இசை கேட்க வட கொரியாவின் "பிங்க் லேடி" என்று மேற்கு நாடுகளில் அறியப்படும் மூத்த செய்தி வாசிப்பாளரான ரி சுன்-ஹீயின் வெற்றிகரமான குரலில் இது பற்றிய செய்தியை வாசிக்கிறார்.
 
சமூக ஊடக பயனர்கள் இந்த காணொளியை டாப் கன், தண்டர்பேர்ட்ஸ் மற்றும் பாலிவுட் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
 
கிம் மற்றும் அவரது ஜெனரல்கள் ப்யோங்யாங்கின் சர்வதேச விமான நிலையத்தில் ஏவுகணை ஏவ்படும் முன்பு ஹேங்கரில் இருந்து வெளியேறும் காட்சியை, 1983 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'தி ரைட் ஸ்டஃப்' உடன் சிலர் ஒப்பிட்டனர்.
 
 
வட கொரிய தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு இது புதியது. வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஊடகங்கள் பார்க்கப்பட்டால் அந்த நாட்டில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் - அதனால் வட கொரியாவில் இதுபோன்ற பிரமாண்ட டிரெய்லர்களை அங்குள்ள மக்கள் பார்த்திருக்கும் வாய்ப்பு குறைவுதான்.
 
தனது கைக்கடிகாரத்தை கிம் ஜோங்-உன் சுட்டிக்காட்டி ஏவுகணை ஏவுதலுக்கான சமிக்ஞையை வழங்குகிறார்
 
நாட்டின் சக்திவாய்ந்த பிரசார மற்றும் கிளர்ச்சித் துறை இதில் ஒரு சமநிலைச் செயல்பாடு இருப்பதை உறுதிப்படுத்தியதாகத் தோன்றுகிறது.
 
உள்நாட்டுப் பார்வையாளர்களுக்குப் புதியதாகவும் உற்சாகமாகவும் தோன்றும் ஒரு காணொளியை வட கொரிய அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர் - இதன் மூலம் தேசியப் பெருமை, கிம் ஜோங் உன்னின் பிம்பம் ஆகிய இரண்டிற்கும் ஊக்கமளிக்கப்பட்டிருக்கிறது, சமீபத்திய எடை குறைப்பு செய்த கிம் ஜோங் உன்னை, ஆற்றல்மிக்கவராக காண்பிக்கவும் அவரது புதிய ஆல்-ஆக்ஷன் ஆளுமையை உலகுக்கு காண்பிக்கவும் அதிகாரிகள் முயன்றிருக்கிறார்கள்.
 
கடந்த முறை இது போன்ற ஒரு முயற்சியை வட கொரியா செய்தது. ஆனால், அதில் இருந்து இப்போதைய முயற்சி முற்றிலும் மாறுபட்டது. 2019ஆம் ஆண்டில் செயின்ட் மவுண்ட் பேக்டுவில் அவர் குதிரை சவாரி சென்ற காட்சி காணொளியாக வெளியிடப்பட்டது. அதில் அதிக எடை கொண்ட தோற்றத்தில் இருந்த கிம் மோசமான வகையில் காணொளியில் தோன்றியதாக கருதப்பட்டது.
 
வட கொரியர்கள் இதை எப்படி நினைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் பெரும்பாலானோர் இந்த காட்சிகளை கண் சிமிட்டி பார்த்திருப்பார்கள் - திடீரென்று வட கொரியாவின் தொனியும் பார்வையும் மாற என்ன காரணம் என்பது தெரியவில்லை. இத்தகைய காட்சிகளுக்கும் இந்த மக்கள் அதிகம் பழகியிருக்கவில்லை. இதற்கு முன் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தைப் பார்த்திருக்கக்கூடிய சிறுபான்மையினர் கூட இதை பார்க்கும்போது குழம்பியிருப்பார்கள். இது தவறா, அல்லது நாடு மெல்ல, மெல்ல மாறத் தொடங்கியுள்ளதா என்றும் அவர்கள் குழம்பியிருக்க வேண்டும்.
 
வட கொரியாவின் பிரசாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள், ராக்கெட் ஏவுகணை வீடியோ வெளிநாட்டில் பார்க்கப்படும் என்றும் அது பரவலாக பேசப்படும் என்றும் அறிந்திருந்தார்கள், எனவே அனைத்து ஹாலிவுட் திரைப்பட பாணியில் இந்த காணொளி இப்படித்தான் பிரசாரம்செய்யப்பட வேண்டும் என்பதை வட கொரியர்கள் திட்டமிட்டே செய்திருக்கலாம்.
 
 
இந்த ஏவுகணை 6,000 கிலோமீட்டர் உயரத்தை எட்டியது - இத்தனை பெரிய தூரத்துக்கு இதுவரை கண்டம் விட்டு கண்டம் பாயும் வேறு எந்த ஏவுகணையும் செலுத்தப்படவில்லை.
 
மொத்தத்தில், இது வட கொரியா கொண்டிருக்கும் ஒரே முழுமையான நம்பிக்கையின் வெளிப்பாடு.
 
தலைநகரில் இருந்து 25 கிமீ (16 மைல்) தொலைவில் உள்ள ப்யோங்யாங் சுனான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டது. இதில் சிறு தோல்வி ஏற்பட்டிருந்தாலும் விமான நிலையமும் அதன் அருகே உள்ள குடியிருப்புவாசிகளும் பேரழிவை சந்தித்திருப்பார்கள்.
 
ஹ்வாசாங்-17 என்பது கிம் ஜோங்-உன் மிகவும் பெருமைப்படும் ஒரு ஆயுதம் ஆகும்.
 
இந்த காணொளி மூலம் ஒன்றை உணர்த்துகிறார் கிம் ஜோங் உன். குறிப்பாக அமெரிக்காவுக்கு அவர் விடுக்கும் செய்தி இது. வட கொரியாவை ஆத்திரமூட்டினால், தங்களால் எந்த இடத்தையும் தாக்க முடியும். அதற்கான ஆற்றல் தங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்த அவர் விரும்பியிருக்கிறார். அதற்காகவே வெளிநாட்டு மக்கள் தங்களை வேறு மாதிரி பார்க்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் பாணி டிரெய்லர் உத்தியை கிம் ஜோங் உன் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்