எம்.எஸ். தோனி கிரிக்கெட் ஓய்வுக்கு பின் என்ன செய்ய போகிறார்?

திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (14:48 IST)
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் :ஓய்வுக்கு பிறகு என்ன செய்ய போகிறார் தோனி?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வுக்குப் பின்பு தொழில் செய்வதில் தனது பெரும்பாலான நேரத்தை செலவிடலாம் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் தோனி விளம்பரத் துறையில் அதிகம் கோரப்படும் பிரபலங்களில் ஒருவராக இன்னும் தொடர்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பின்னர் இயற்கை உர உற்பத்தி தொழிலில் அவர் பெரும்பாலான நேரத்தை செலவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகேந்திர சிங் தோனி நியோ குளோபல் எனும் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியுள்ளதாக, பல முன்னணி கிரிக்கெட் வீரர்களின் தொழில்முறை வாழ்க்கையை நிர்வகிக்கும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மிகிர் திவாகர் தெரிவித்துள்ளார்.

தனது பண்ணை வீட்டில் இந்த இயற்கை உரத்தை தோனி பரிசோதித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தயாரிப்பு குறித்து தோனி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த நிறுவனத்தின் பங்குகளை பெருமளவில் வாங்கியுள்ளார்; ஐபிஎல் போட்டி முடிவடைந்த பின்னர் இது சந்தைக்கு வரும் என்றும் திவாகர் தெரிவித்துள்ளார்.
 
தினத்தந்தி - கொரோனா பயத்தால் உடலை அடக்கம் செய்ய மறுப்பு

கர்நாடகத்தில் கொரோனா பீதியில் உடல் நலக்குறைவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய யாரும் உதவி செய்ய முன்வராததால், சைக்கிளில் பிணத்தை தூக்கிச் சென்ற சம்பவம் குறித்து தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் எம்.கே.உப்பள்ளி காந்திநகரை சேர்ந்தவர், 71 வயதான சதப்பா பரசப்பா சககாரா.

தனியார் மருத்துவமனையில் காய்க்காலுக்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தும்படி மருத்துவர்கள் கூறியிருந்தனர். நேற்று காலை சதப்பா திடீரென்று உயிரிழந்தார். இதைதொடர்ந்து அந்த சதப்பாவின் மகனும், குடும்பத்தினரும் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

ஆனால் சதப்பா காய்ச்சல் இருந்ததால், அவர் கொரோனாவால் உயிரிழந்திருக்கலாம் என்ற பீதியில் அந்தப் பகுதி மக்கள் யாரும் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை. இதுகுறித்து முதியவரின் மகன், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார். ஆனால் அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் சதப்பாவின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் அவரது மகன் தவித்து வந்தார். இதை அறிந்த நண்பர் ஒருவர், சதப்பாவின் மகனுக்கு உதவினார். இதையடுத்து முதியவரின் உடலை அவரது மகனும், மகனின் நண்பரும் முழுகவச உடையை அணிந்து கொண்டு ஒரு சைக்கிளில் வைத்து அடக்கம் செய்ய தூக்கிச் சென்றனர். இதுபற்றிய புகைப்படம் மற்றும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனே இதுபற்றி அறிந்த நகரசபை உறுப்பினர் புட்டப்ப பட்டாஷெட்டி என்பவர் முதியவரின் உடலை அடக்கம் செய்ய வாகன வசதி செய்து கொடுத்தார். அதன் பின்னர் முதியவரின் உடல் அமரர் ஊர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அந்த கிராமத்தை ஒட்டிய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
 
தி இந்து - பிஎம் கேர்ஸ் தகவல்கள் மறுப்பு

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு உருவாக்கியுள்ள சிறப்பு நிதியமான பிஎம் கேர்ஸ் (PM ) மற்றும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி ஆகியவை குறித்த தகவல்களை வழங்க இந்திய பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


தகவல் அறியும் உரிமைச் செயற்பாட்டாளரும் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரியுமான லோகேஷ் பத்ரா என்பவர் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்திய பிரதமர் அலுவலகம் பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பங்கள் அவற்றில் பிஎம் கேர்ஸ் மற்றும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி ஆகியவை குறித்த விண்ணப்பங்கள் மற்றும் மேல்முறையீடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை குறித்து தகவல் கோரியிருந்தார்.

ஆனால் அத்தகைய தகவல்களை அளிப்பதால் பிரதமர் அலுவலகத்தின் வளங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு உள்ளாகும் என்று கூறி இந்த தகவல்களை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதற்கு முந்தைய நீதிமன்ற மற்றும் மத்திய தகவல் ஆணையத்தின் அணைகளின் அடிப்படையில் மேற்கண்ட காரணத்தை பயன்படுத்தி தகவல்களை மறுக்க முடியாது என்றும் வழங்கப்படும் தகவலின் வடிவத்தை மட்டுமே மாற்றலாம் என்றும் தி இந்து நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முறையற்ற வகையில் பயன்படுத்துவது என்று இந்தியாவின் முதல் தலைமை தகவல் ஆணையர் வஜாவத் ஹபிபுல்லா தெரிவித்துள்ளார் என்கிறது தி இந்து செய்தி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்