ஆற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த இளைஞர்

சனி, 15 ஆகஸ்ட் 2020 (15:04 IST)
தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டுவாச்சாவடி சேர்த்த விவசாயி மாரியப்பன் என்பவரின் மகன் வீரமணி(வயது 22). இவர் கந்தரக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இளங்கலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தார்.

வீரமணியின் தந்தை தினந்தோறும் ஆடு மேய்த்து வந்து கொண்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் ஆடு மேய்க்கச் செல்லவில்லை. இதனையடுத்து அவரது மகன் வீரமணி, அன்று ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார்.

அப்போது மந்தையிலிருந்த ஆடு ஒன்று தவறி கல்லணை கால்வாய் ஆற்றில் விழுந்தது. இதையடுத்து விழுந்த ஆட்டை காப்பாற்ற நீச்சல் தெரியாமலேயே ஆற்றுக்குள் வீரமணி இறங்கியுள்ளார். ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக ஆற்றில் உள்ள சுழலில் சிக்கிக்கொண்டார். வீரமணி சுழலில் மாட்டிக்கொண்டதைக் கண்ட அருகே இருந்தவர்கள் வருவதற்குள் நீரின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு அவரை மீட்க முயற்சித்தனர். தொடர்ந்து தேடியதில் மறுநாள் காலையில் தான் வீரமணியை உயிரிழந்த நிலையில் மீட்டனர். பின்னர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறாய்விற்காக அவரது உடலை அனுப்பிவைத்தனர். ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வீரமணியின் தந்தை மாரியப்பன் பிபிசி தமிழுக்குக் கூறுகையில், "எனது மகன் பிறந்து 16வது நாளிலேயே அவரது தாயார் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து தாயில்லாத குழந்தை என்பதால், வீரமணியை சிறிய வயதிலிருந்து பார்த்துப் பார்த்து வளர்த்தேன்.

அவன் பள்ளி படித்துக்கொண்டிருந்த போதே முதல் இரண்டு மகள்களை அடுத்தது திருமணம் செய்து வைத்துவிட்டேன். அதையடுத்து மூன்றாவது இளைய மகள் சரிதா மற்றும் வீரமணி இருவரையும் நான் விவசாய தொழில் செய்தும், ஆடுகள் மேய்த்தும் படிக்க வைத்தேன்," என்றார் அவர்.

சிறிய வயதிலிருந்தே படிப்பில் அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்த எனது மகன், பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மேற்கொண்டு படிக்க விரும்பினான். பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட எனது மகன் அதற்காக கல்விக் கடன் கேட்டு அனைத்து வங்கிகளிலும் முயற்சிதான். ஆனால் எதிலும் கல்விக்கடன் உதவி கிடைக்கவில்லை"

இதையடுத்து நிலத்தை விற்றாவது என்னைப் படிக்க வைத்துவிடுங்கள் என்று என்னிடம் கேட்டதாகக் கூறும் வீரமணியின் தந்தை. எங்களது நிலத்தை விற்று தான் இறுதியில் அவனைக் கல்லூரியில் சேர்த்தோம் என்று கூறுகிறார்.

அவனை எப்போதுமே நான் ஆடு மேய்க்க அனுப்பியதில்லை. அன்று எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உடல்நிலை முடியாமல் ஓய்வெடுத்தேன். இதனையறிந்த எனது மகன் மாலை மருத்துவரைச் சென்று பார்க்கலாம் என்று என்னிடம் கூறிவிட்டு, ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டான். ஆனால், அவன் அதோடு அவன் வரவில்லை," என்று வேதனையுடன் தெரிவித்தார் மாரியப்பன்.

சிறிய வயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததால், எப்படியாவது வேலைக்குச் சென்றுவிட வேண்டும். நம்முடைய இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று எப்போதும் கூறிக்கொண்டிருப்பான் என்று கூறுகிறார் வீரமணியின் சகோதரி சரிதா.

"கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் போதே கல்லூரியில் வேலைக்கு (Campus Interview) தேர்வாகினான். வேலை கிடைத்துவிட்டது, வேலைக்குப் போகப் போகிறேன் என்று சந்தோஷமாக இருந்தான். இந்த கொரோனா இல்லையென்றால் இந்நேரம் அவன் சென்னை தேர்வாகிய நிறுவனத்தில் வேலையில் சேர்ந்திருப்பான்," என்றார் சரிதா.

"அம்மா இல்லாத குறை தெரியாத அளவிற்கு அவனை வளர்த்தேன். என்னைப் படிக்க வைத்து, நல்ல நிலைக்குக் கொண்டுவர, நீ திருமணம் செய்துகொள்ளலாம் இருக்கிறாய் என்று கூறி, விரைவில் வேலைக்குச் சென்று நல்லபடியாக உன் திருமணத்தைச் செய்து வைக்கிறேன் என்று கூறுவான் எனது தம்பி வீரமணி.

"எங்கள் அனைவரும் பார்த்துக் கொள்வதாகக் கூறினான். ஆனால், இன்று அவனை இழந்து நிற்கிறோம். இதன்பிறகு நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறோம்," என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார் சரிதா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்