மகாமுனி: சினிமா விமர்சனம்

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (17:31 IST)
திரைப்படம் மகாமுனி
நடிகர்கள் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார், ரோகிணி, இளவரசு, ஜெயப்பிரகாஷ், காளி வெங்கட், ஜி.எம். சுந்தர்
பின்னணி இசை தமன்
இயக்கம் சாந்தகுமார்


 
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமாரின் அடுத்த படம். முதல் படத்திலேயே பெரிதும் கவனத்தை ஈர்த்த சாந்தகுமார், இந்தப் படத்திலும் த்ரில்லர் கதையையே கையில் எடுத்திருக்கிறார்.
 
காஞ்சிபுரத்தில் கார் ஓட்டுனராக இருக்கும் மகாதேவன் என்ற மகா (ஆர்யா), தன் மனைவி (இந்துஜா), குழந்தையுடன் வாழ்ந்துவருகிறார். அரசியல்வாதியான முத்துராஜ் (இளவரசு) சொல்லும் குற்றச்செயல்களுக்கான திட்டங்களையும் அவ்வப்போது தீட்டித்தருகிறார்.
 
ஒரு முறை, முத்துராஜ் சொல்வதன் பேரில் அரசியல்வாதி ஒருவரைக் கடத்திவந்து தருகிறார் மகா. அந்த அரசியல்வாதியை முத்துராஜ் கொன்றுவிட, அது பெரிய விவகாரமாகிவிடுகிறது. அந்த வழக்கில் மகாவை மாட்டிவிட முயற்சிக்கிறார் முத்துராஜ்.


 
ஈரோடு மாவட்டத்தில் தன் தாயுடன் வாழ்ந்துவரும் முனிராஜ் (ஆர்யா), உள்ளூர் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுப்பது, மரம் வளர்ப்பது என அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார். அவர் தன் மகள் தீபாவைக் (மகிமா நம்பியார்) காதலிப்பதாக நினைக்கும் ஜெயராமன் (ஜெயப்பிரகாஷ்), முனிராஜைக் கொல்ல நினைக்கிறார். ஒருகட்டத்தில் மகாவின் பாதையும் முனிராஜின் பாதையும் குறுக்கிடுகின்றன. என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
 
மனைவி தொடர்ந்து போனில் அழைக்க, வீட்டிற்கு வரும் வழியில் மகாவை யாரோ கத்தியால் குத்திவிடுகிறார்கள் எனத் தொடங்குகிறது படம். மெல்ல மெல்ல மகாவின் வாழ்க்கைப் பின்னணி, அதிலிருக்கும் சிக்கல்களைச் சொல்லிவரும்போதே, முனிராஜ் அறிமுகமாகிறார்.
 
அவரது அமைதியான வாழ்க்கையில் குறுக்கிடும் தீபா, அவரால் வரும் சிக்கல்கள் என படம் மற்றொரு புறமும் நீண்டு செல்கிறது. ஒரு நல்ல த்ரில்லருக்கான கதையும் அதற்கேற்றபடி அமைந்திருக்கும் நான் - லீனியர் திரைக்கதையும் தொடர்ந்து சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கின்றன.
 
ஆனால் திரைக்கதையின் வேகம் ஒரே சீராக இல்லாதது இந்தப் படத்தின் முக்கியமான பலவீனம். திடீரென வேகமாகச் செல்லும் திரைக்கதை, சட்டென வேகம் குறைந்து நத்தை வேகத்தில் செல்கிறது. வேகமாக நகர வேண்டிய கட்டங்களில்கூட மிக மெதுவாக நகர்வது பொறுமையைச் சோதிக்கிறது.
 
தவிர, பல இடங்களில் எதுவுமே நடக்காமல் சில இயற்கைக் காட்சிகளைக் காட்டுகிறார். அவை, மெதுவான திரைக்கதையை மேலும் மெதுவாக்குகின்றன.
 
படத்தின் இறுதியில், துப்பாக்கியால் சுடப்பட்டு காவல்துறையால் தேடப்படும் மகா, தன் மனைவியின் உடல் இருக்கும் மார்ச்சுவரியைத் தேடிவந்து பார்த்துச் செல்வதெல்லாம் நம்பக்கூடியதாக இல்லை. முனிராஜின் தோழியாக வரும் தீபாவின் பாத்திரம் முழுமையடையாமல் நிற்கிறது.
 
ஆர்யாவுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க படம். மகா, முனி ஆகிய இரண்டு பாத்திரங்களிலுமே சிறப்பாக நடித்திருக்கிறார். இந்துஜா, மகிமா ஆகிய இரு கதாநாயகிகளில் இந்துஜாவுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அரசியல்வாதி முத்துராஜாக வரும் இளவரசுவும் காவல்துறை அதிகாரியாக வரும் ஜி.எம். சுந்தரும் படத்தின் சுவாரஸ்யத்தைக்கூட்டுகிறார்கள்.
 
படத்தில் பாராட்டத்தகுந்த மற்றொரு அம்சம் அருள் பத்மநாபனின் ஒளிப்பதிவு. தமனின் இசையில் பாடல்களைவிட, பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது.
 
மௌனகுரு படம் வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த படத்தைத் தந்திருக்கும் இயக்குனர், முதல் படத்தில் இருந்த கச்சிதத்தைத் தவறவிட்டிருக்கிறார். ஆனால், த்ரில்லர் பட ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்