முகலாயர் கால இந்திய வரலாற்றுப் பொக்கிஷங்களை பல கோடிக்கு ஏலம் விடும் லண்டன் நிறுவனம்

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (14:31 IST)
வைரம் மற்றும் மரகதத்தால் ஆன அரிய கண்ணாடிகள் இரண்டை லண்டனில் உள்ள சௌத்பை'ஸ் ஏல நிறுவனம் இந்த மாதம் ஏலம்விடவுள்ளது.

விவரம் அறியப்படாத இந்திய மன்னராட்சி கால பொக்கிஷங்களில் இருந்து இந்த இரண்டு கண்ணாடிகளும் கிடைத்திருந்தன.

இந்தக் கண்ணாடி வில்லைகள்(லென்ஸ்கள்) சுமார் 1890ல் செய்யப்பட்ட முகலாயர் கால சட்டங்களுக்குள் வைக்கப்பட்டிருந்தன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் கண் கண்ணாடி தலா ஒன்றுக்கு 1.5 மில்லியன் பவுண்ட் முதல் 2.5 மில்லியன் பவுண்டு வரை ஏலத்தில் விலை நிர்ணயிக்கப்படும் என்று அந்த ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் இந்திய மதிப்பு சுமார் 15 கோடி ரூபாயிலிருந்து 25 கோடி ரூபாய் வரை ஆகும்.

அதற்கு முன்பாக இந்த முகலாயர் கால கண்ணாடிகள் லண்டன் மற்றும் ஹாங்காங்கில் கண்காட்சிக்கு வைக்கப்படும்.

"இந்த அசாதாரணமான கலைப்பொருட்கள் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் கலைப் பொருட்கள் செய்வதில் இருக்கும் அறிவுக்கூர்மை உள்ளிட்ட எண்ணற்ற விஷயங்களை ஒன்றாக இணைக்கின்றது," என்று சௌத்பை'ஸ் நிறுவனத்தின் மத்தியகிழக்கு மற்றும் இந்திய பிரிவுக்கான தலைவர் எட்வர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த கண்ணாடிகளை உருவாக்குவதற்கு யார் ஆணையிட்டார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் கட்டடக்கலை மற்றும் கலைப் பொருட்களுக்கு பெரிதும் அறியப்பட்ட மற்றும் 16 - 17ஆம் நூற்றாண்டுகளில் இந்தியத் துணைக் கண்டத்தை ஆட்சி செய்த முகலாயர்கள் காலத்தைச் சேர்ந்ததாக இவை இருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

வைரம் மற்றும் மரகதம் ஆகிய கண்ணாடி வில்லைகள் இதில் பதிக்கப்பட்டுள்ளது என்று சௌத்பை'ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபரணக் கற்களின் தரம் மற்றும் தெளிவு ஆகியவை அசாதாரணமாக உள்ளன; இவ்வளவு பெரிய அளவில் இருக்கும் இந்த கற்கள் நிச்சயமாக ஒரு பேரரசரின் இருப்பில்தான் இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையாக கிடைத்த ஒரே வைரக்கல்லில் இருந்து இந்த இரண்டு வைரக் கண்ணாடி வில்லைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து கிடைத்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

கண்ணீர்த் துளி வடிவத்தில் இருக்கும் இந்த மரகதக் கண்ணாடி வில்லைகள் ஒற்றைக் கல்லாக இருந்த கொலம்பிய மரகதத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

சாதாரணக் கண்ணாடி வில்லைகள் பார்வையை சரி செய்வதற்காக உருவாக்கப்படுகின்றன. ஆனால் இந்த ஆபரணக் கற்களால் செய்யப்பட்ட கண்ணாடி வில்லைகள் ஆண்ம வெளிச்சத்தைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. வைரம் மற்றும் மரகத கற்கள் அற்புத சக்திகளை கொண்டுள்ளன என்றும் தீமைகளை அழிக்கும் திறன் உடையதாகவும் நம்பப்படுகிறது, என்று சௌத்பை'ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்