ஃபுகுஷிமா அணு உலை விபத்து: கதிர்வீச்சு நீரை கடலில் விட முடிவு

சனி, 17 அக்டோபர் 2020 (14:39 IST)
ஜப்பானின் ஃபுகுஷிமா அலையிலிருந்து வெளியேற்றும் கதிர்வீச்சு நீரைக் கடலுக்குள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
2011ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட அந்த அணு உலையைக் குளிரச்செய்யப் பயன்படுத்தப்பட்ட நீரை எப்படி அகற்றுவது என பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில் இருந்தன.
 
கடலுக்குள் கதிர்வீச்சு நீரை செலுத்துவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ஆனால் இவ்வாறாக வெளியிடுவதே ஆபத்தை குறைக்கும் வழி என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
 
இருப்பினும் இதுகுறித்து அரசு இறுதி முடிவை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கதிர்வீச்சை குறைக்கும் விதத்தில் சுத்திகரிக்கப்பட்ட பத்து லட்சம் டன்னுக்கும் அதிகமான நீரை 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து கடலுக்குள் செலுத்தவுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
நீர் வெளியேற்றப்படும் முன், அதன் அடர் தன்மை குறைக்கப்படும் என்று யோமிரு ஷிம்புன் என்ற செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே வழக்கத்தைவிட நீர் 40 சதவீத அளவு அடர்த்தி குறைவானதாக இருக்கும்.
 
ஆனால் இந்த முழு செயல்முறைக்கும் 30 வருடங்கள் வரை ஆகலாம் எனவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. இதுகுறித்து இந்த மாத இறுதியில் முடிவு எட்டப்படும் என க்யூடூ செய்தி முகமை தெரிவிக்கிறது. நிலத்தடி நீர் மற்றும் மழை நீர் ஆகிய இரண்டும் சேர்ந்து மொத்தமாக நீரின் அளவு உயர்ந்து வந்ததால் அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது.
 
அணு உலையிலிருந்து பல்வேறு கதிரியக்க ஐசோட்புகள் பல கடினமான முறைகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால் டிரிடியம் என்னும் ஐசோட்பை மட்டும் அகற்ற முடியாத காரணத்தால் நீர் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நீரைதான் வெளியேற்ற திட்டமிட்டுள்ளனர்.
 
வெள்ளியன்று ஜப்பானின் தொழில்துறை அமைச்சர், அணு உலையில் உள்ள நீரை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் விரைவில் ஒரு முடிவு எட்டப்படும் என தெரிவித்தார்.
 
கடலில் கதிர்வீச்சு நீரைச் செலுத்துவது குறித்து சுற்றுச்சூழல் அமைப்புகள் நீண்ட நாட்களாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேலும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் இம்மாதிரியாக நீர், கடலில் செலுத்தப்பட்டால் மக்கள் மீன்களை வாங்கமாட்டார்கள் என கவலை தெரிவிக்கின்றனர்.
 
இருப்பினும் விஞ்ஞானிகள் சிலர், பசிபிக் பெருங்கடலில் நீர் செலுத்தப்பட்டவுடன் அது நீர்த்துப் போய்விடும் என்றும், டிரிடியம் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு குறைவான ஆபத்தையே விளைவிக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்