கடல் பாசி: எதிர்கால உணவு, எரிபொருளுக்கு மாற்றாகுமா?

சனி, 29 ஆகஸ்ட் 2020 (15:52 IST)
சூரிய வெளிச்சம் பரவியதும் காற்றும், மழையும் இணைந்த சூழ்நிலையில், மோட்டார் படகு பரோ தீவுகளில் கடல் வழி இடைவெளிகளில் மெல்லிய சப்தத்துடன் பயணத்தைத் தொடங்குகிறது.

``இங்கே காற்று கொஞ்சம் பலமாக இருக்கிறது. அறுவடை செய்யும் படகு எவ்வளவு தொலைவிற்குச் செல்கிறது என்று பார்ப்போம்'' என்று ஒலாவுர் கிரெகார்சென்  கூறினார்.
 
முகாம் போன்ற ஓர் இடத்திற்கு சீக்கிரமே சென்று சேர்ந்தோம். நூற்றுக்கணக்கான படகுகள், அலைகளின் ஏற்ற இறக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
 
``அவை கிடைமட்ட கோட்டில் வளர்கின்றன'' என்று கடல் பாசி உற்பத்தி செய்யும் ஓசன் ரெயின்பாரஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கிரெகார்சென் கூறினார்.
 
``ஒவ்வொரு மீட்டர் இடைவெளியிலும் இன்னொரு வரிசை கீழே தொங்கிக் கொண்டிருக்கும். அதில்தான் கடல் பாசி வளரும்'' என்று அவர் தெரிவித்தார்.
 
அலைகளால் உடைப்பு
 
கடலின் தரை மட்டத்தில் நிலைநிறுத்தப்பட்ட, கடற்பாசி வளர்ப்பு ரிக் கருவியில் 50 ஆயிரம் மீட்டர் அளவுக்கு கயிறு பின்னல்கள் இருக்கின்றன. இவை கடலின்  சீற்றத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளன.
 
``பிரதான பகுதி 10 மீட்டர் ஆழத்தில் இருக்கும். எனவே, பெரிய அலைகளால் கடற்பாசி பரப்பு உடைந்துவிடாமல் நாங்கள் தவிர்த்துவிடுகிறோம்'' என்று அவர்  கூறினார்.
 
வடக்கு அட்லான்டிக் பகுதியில் எளிதில் அணுக முடியாத பகுதியில் உள்ள டென்மார்க்கின் பகுதியாக இந்த இடம் இருக்கிறது. சத்துகள் மிகுந்த தண்ணீர் உள்ள  ஆழமான பகுதியில் கடல்பாசி வளர்ப்பதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுகிறது, அங்கு 6 முதல் 11 டிகிரி செல்சியஸ் வரையில் தொடர்ந்து வெப்பம்  பராமரிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
 
இயந்திர மயமாக்கல்
 
வேகமாக வளரக் கூடிய பாசி இனத்தைச் சேர்ந்ததாக கடற்பாசிகள் உள்ளன. சூரிய ஒளியில் இருந்து ஆற்றலை எடுத்துக் கொண்டு, கடல் நீரில் இருந்து  சத்துகளையும், கார்பன் டைஆக்சைடு வாயுவையும் அது எடுத்துக் கொள்கிறது. பருவநிலை மாற்றப் பாதிப்புகளை சமாளிக்க இந்தக் கடற்பாசிகள் உதவிகரமாக  இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கார்பன் உற்பத்தியை இது குறைக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
இதேபோன்ற உற்பத்தி வளாகத்தை கலிபோர்னியாவில் உருவாக்குவதற்கு அமெரிக்காவின் எரிசக்தித் துறையிடம் இருந்து ஓசன் ரெயின்பாரஸ்ட் நிறுவனத்திற்கு  நிதி கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் எரிபொருள் தேவைக்கு கடற்பாசி தயாரிப்பை தொழிற்சாலை போல கலிபோர்னியாவில் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
 
அறுவடை செய்யும் மோட்டார் படகில், அதை செலுத்துபவர், கயிறுகளை நீரில் இருந்து மேலே கொண்டு வருவதற்கான கை போன்ற பகுதியை இயக்குகிறார்.  கடற்பாசியை வெட்டி, பெட்டிகளில் நிரப்பிக் கொள்கிறார்கள். அது சிக்கலான வேலை, ஆனால் சீக்கிரத்தில் முடித்துவிடுகிறார்கள். கயிறு வலைப்பின்னல் பகுதி  மீண்டும் கடலுக்குள் இறக்கிவிடப் படுகின்றன. அவற்றில் மீண்டும் கடற்பாசி வளரும். இந்த ஆண்டு சுமார் 200 டன்கள் அளவுக்கு அறுவடை செய்யப்படும்.
 
ஆனால் இந்த ஆண்டில் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்துவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டு தீவிரமாக செயலாற்றி வருகிறது. இன்னமும் இந்த நிறுவனம்  பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் விரைவில் வருமானம் கிடைக்கும் என்று நம்புகிறோம் என்று கிரெகார்சென் என்னிடம் கூறினார்.
 
``இதை எப்படி இயந்திரமயமாக்க முடியும் என்று நாம் பார்க்க வேண்டும். பெரிய அளவில், செயல்திறன் மிக்க செயல்பாடாக இதை எப்படி உருவாக்கலாம்  என்பதைப் பார்க்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.
 
``இதை லாபகரமான தொழிலாக செய்யும் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை'' என்று அவர் குறிப்பிட்டார்.
 
அழகுசாதன பொருட்களும் மருந்துகளும்
 
கடல் பாசிகளை விரைவாகப் பதப்படுத்தியாக வேண்டும். பரோ தீவில் கல்ட்பக் என்ற சிறிய கிராமத்தில் இயந்திரம் மூலம், கடற்பாசிகள் சுத்தம் செய்யப்படுகின்றன.  அறுவடை செய்ததில் ஒரு பகுதி உலர வைக்கப்பட்டு உணவு தயாரிக்கும் தொழிலில் இருப்பவர்களுக்கு அளிக்கப் படுகிறது. மீதியுள்ளவை நொதிக்க வைக்கப்பட்டு,  கால்நடை தீவனம் தயாரிப்பவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
 
உற்பத்தி செய்யப்படும் கடல் பாசிகளில் பெரும் பகுதி உணவாக எடுத்துக் கொள்ளப் படுகிறது. கடற்பாசியில் இருந்து எடுக்கப்படும் சாறுகள் உள்ளிட்ட துணை  பொருட்கள் பல்வேறு வகையான பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப் படுகின்றன. பற்பசை, அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள், செல்லப் பிராணிகளுக்கான  உணவு ஆகியவற்றில் கடற்பாசியில் இருந்து எடுக்கப்படும் ஹைட்ரோ கொலாய்ட்கள் உள்ளன. அதுதான் ஜெல் போன்ற அல்லது கடினப்படுத்தும்  குணாதிசயங்களைத் தருகிறது.
 
ஜவுளிகள் மற்றும் பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களில் பயன்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதால், வேறு உற்பத்திப் பொருட்களும் வரவுள்ளன. மக்கிப்போகக்  கூடிய பேக்கேஜிங் பொருட்கள், நீர் கேப்சூல்கள், குடிப்பதற்கான ஸ்டிரா போன்றவை தயாரிப்பிலும் இவை இடம் பெறவுள்ளன.
 
கடல் பாசி உற்பத்தி பெருமளவு அதிகரித்துள்ளது. 2005ல் இருந்து 2015க்குள் இதன் உற்பத்தி இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 30 மில்லியன் டன்களுக்கும்  அதிகமாக இது உற்பத்தியாகிறது என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் இதன் மூலம்  ஆறு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான அளவில் வியாபாரம் நடக்கிறது.
 
நிறைய உழைப்பு தேவை'
 
``ஐரோப்பாவில் தொழிலாளர் கூலி உண்மையிலேயே அதிகமாக உள்ளது. எனவே, அது ஒரு பெரிய பிரச்சினை'' என்று டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ்  பல்கலைக்கழக மூத்த விஞ்ஞானியான அன்னெட் புருஹ்ன் தெரிவித்தார்.
 
``இதை இயந்திரமயமாக்குவதற்கும், உற்பத்தியைப் பெருக்குவதற்கும் நிறைய உழைப்பு தேவைப்படுகிறது'' என்று அவர் குறிப்பிட்டார்.
 
குறைந்த செலவில் இதை உற்பத்தி செய்ய வேண்டுமானால், ``விளைச்சல் அதிகரிக்க வேண்டும், செலவுகள் குறைய வேண்டும்'' என்று அந்த பெண் ஆராய்ச்சியாளர்  தெரிவித்தார்.
 
ஆனால் வேளாண்மையில் கையாளும் அதே உத்திகளை இதில் கையாள முடியாது. ``வெவ்வேறு நீர்நிலைகள் வெவ்வேறு வகையில் இருக்கும். அதற்கேற்ப  மாற்றங்கள் தேவைப்படும். எல்லா இடங்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில், ஒரே மாதிரியான தீர்வு கிடையாது'' என்று புருஹ்ன் கூறினார்.
 
இருந்தாலும், ``சில விஷயங்களில் பொதுவாக செயல்பட முடியும்'' என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
 
சின்டெஃப் போன்ற புதுமை சிந்தனையாளர் அமைப்புகள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இதன் சாகுபடியை முறைப்படுத்துவதற்கான புதிய  தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு நார்வேயைச் சேர்ந்த இந்த அறிவியல் ஆராய்ச்சிக் குழு முயற்சி மேற்கொண்டுள்ளது.
 
``இப்போது பெரும்பகுதி கடல் பாசி உணவாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் மீன்களுக்கான தீவனமாக, உரங்களாக, பயோகேஸ் தயாரிப்பில்  இதைப் பயன்படுத்த விரும்புகிறோம். அதற்கு நமக்கு பெரிய அளவில் கடற்பாசிகள் தேவைப்படும். எனவே வேகமாக இதை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம்  உள்ளது'' என்று ஆராய்ச்சியாளர் சில்ஜே போர்போர்டு கூறினார்.
 
உலர் ஆய்வகம்
 
``கடல்பாசி ஸ்பின்னர்'' போன்ற முன்மாதிரி இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. விதையாக இருக்கும் கண்டுகளை தானாகவே சுழற்றி, பின்னல்களாக  உருவாக்கித் தரும். அதை அப்படியே கடலில் இறக்கி வைத்துவிட முடியும்.
 
"ஸ்போக்" என்ற மற்றொரு செய்முறையில், வட்டமான பண்ணை தொகுப்பு முறை பின்பற்றப்படுகிறது. இதில் பின்னல்களில் இருந்து வெளிப்புறமாக ஆரங்களைப்  போல கடல் பாசிகள் வளரும். ரோபோ மூலமாக, சக்கரம் போன்ற கம்பிகளை இயக்கி இந்த கடற்பாசிகளை அறுவை செய்துவிட முடியும்.
 
``ஒரு கை உள்ள ரோபோ ஒன்றை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். அது முன்னும் பின்னுமாக நகர்ந்து செல்லும். உலர் பரிசோதனை நிலையில் அதை நாங்கள்  சோதனை செய்து பார்த்திருக்கிறோம்'' என்று போர்போர்டு தெரிவித்தார். ஆனால் அதற்கு நிறைய முதலீடு தேவைப்படுகிறது.
 
வடக்கு போர்ச்சுக்கல்லில் அல்காபிளஸ் என்ற நிறுவனம் குளங்கள் மற்றும் நீர்நிலைகளில் கடற்பாசி உற்பத்தி செய்கிறது.
 
``இது கட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள் நடப்பதாக உள்ளது'' என்று அதன் நிர்வாக இயக்குநர் ஹெலனா அப்ரெயு தெரிவித்தார். கடலில் சாகுபடி செய்வதைக்  காட்டிலும் இதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளதாக அவர் கருதுகிறார்.
 
``குளங்களில் வெப்பநிலை உள்ளிட்ட சூழ்நிலைகளை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். ஆண்டு முழுக்க உங்களுக்கு இது கிடைத்துக் கொண்டிருக்கும்'' என்று அவர்  தெரிவித்தார்.
 
கம்பளி துணி உற்பத்தியில் கடல்வள உயிரியல் நிபுணராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு இந்த நிறுவனத்தை கூட்டு முயற்சியில் தொடங்கியுள்ளார் அப்ரெயு. உணவு நிறுவனங்கள், அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பவர்கள் மற்றும் உயர்தர உணவகங்களின் தேவைகளுக்காக உயர் மதிப்புள்ள கடற்பாசிகள், சிறிய  அளவில் உற்பத்தி செய்யப் படுகின்றன.

புதுமை சிந்தனை
 
கடலில் நீர் கழிமுனையில் இருந்து மீன் வளர்ப்புக் குளங்களுக்குச் செல்கிறது. அங்கிருந்து வடிகட்டும் ஏற்பாட்டின் மூலம் ஏரிகளுக்கு பம்ப் செய்யப்பட்டு கடல்  பாசிகள் வளர்க்கப் படுகின்றன. அதற்கான விதைகளை வளர்க்கும் நர்சரிகளும் உள்ளன.
 
``ஆரம்ப கட்டத்தில் இருந்து நாம் புதுமைகளைப் புகுத்த வேண்டியுள்ளது'' என்று அவர் கூறினார்.
 
இந்த நீரில் நைட்ரஜன் அதிகமாக உள்ளது. அதை பாசிகள் எடுத்துக் கொண்டு, அந்த இயற்கை சூழலை உருவாக்கித் தருகின்றன. ``ஊக்கிகள், உரங்கள் எதுவும்  நமக்குத் தேவைப்படாது. கடற்பாசிகள் வளர்வதற்கு மீன்கள் வளரும் நீரை நாம் பயன்படுத்துகிறோம்'' என்றார் அவர்.
 
நிறைய நிலம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அப்ரெயு கருதுகிறார். பழைய உப்பளங்களையும், மீன் வளர்ப்புப் பண்ணைகளையும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் யோசனை தெரிவிக்கிறார். போர்ச்சுகல், பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ், துருக்கியில் இப்படி நிறைய நிலம் உள்ளதை அவர்  சுட்டிக்காட்டுகிறார்.
 
கனடா மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் உள்நாட்டு கடற்பாசி உற்பத்தி நடைபெறுகிறது. ஏரி அமைப்புகளில் நுண்பாசிகள் வளர்க்கப் படுகின்றன.
 
ஆனால் இதில் வேறு சவால்கள் உள்ளன.
 
``மின்சார செலவு தான் பெரிய இடையூறாக உள்ளது. ஏரிகளில் இதைச் செய்வதற்கு நிறைய நீரை பம்ப் செய்ய வேண்டும். நீரை சுழல வைப்பதற்கு காற்றை சுழலச் செய்யும் சாதனங்களை இயக்க வேண்டும்'' என்று அப்ரெயு கூறினார்.
 
கடல் பாசிகளை விற்பதால் மட்டும் ஒரு நிறுவனம் தாக்குபிடித்துவிட முடியாது. ஆனால் கடற்பாசிக்கான சந்தை தொடர்ந்து வளரும் என்று அப்ரெயு நம்பிக்கை  கொண்டிருக்கிறார்.
 
``இது பெருமளவு வாய்ப்பு உள்ள துறையாக இருக்கிறது. ஆண்டுதோறும் புதிய நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. இதன் மதிப்புகூட்டும் சங்கிலித் தொடர்  நிறுவனங்களில் புதிய முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன'' என்று அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்