செவ்வாய்க்கிழமை இரவு வலிமிக்கதாக இருக்கும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சூரல்மலை, முண்டகை, மேப்பாடியில் ஒவ்வொருவரும் தன்னுடைய, காணாமல் போன உறவுகளைத் தேடித் திரிந்த வண்ணம் செய்வதறியாது திகைத்துக் கிடந்தனர். அதில் இவரும் ஒருவர். அவர் காட்டிய செல்போன் புகைப்படத்தில் இருப்பவர் அனிதா, வயது 9.
"இது என் புள்ளைதானே.. என் புள்ளைதானே.. பார்த்துச் சொல்லுங்க" என உடையும் குரலில் செல்போனைக் காட்டிக் கேட்கிறார் அந்தப் பெண்மணி. அவரது செல்போனில் 9 வயதுச் சிறுமியான அனிதாவின் இரண்டு படங்கள் இருக்கின்றன. ஒன்று உயிரோடு இருக்கும்போது எடுத்தது. மற்றொன்று, நிலச்சிரிவில் சிக்கி உயிரிழந்த கோலத்தில் இருப்பது.
சடலத்தில் தலையின் மேற்பகுதி சிதைந்திருப்பதால், புகைப்படத்தில் இருப்பது தனது அண்ணன் மகளா என உறுதிசெய்ய முடியாமல் தடுமாறுகிறார் அந்த அத்தை. போனில் புகைப்படங்களை வைத்துக்கொண்டு சிறுமியின் உடலைத் தேடும் அவரின் நிராதரவான குரல், யாரையும் உலுக்கிவிடும்.
ஜூலை 30 அதிகாலையில், கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தின் முண்டகை, சூரல்மலை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 200ஐ தாண்டியிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர்.
சூரல்மலை, முண்டகை மற்றும் மேப்பாடி கிராமங்கள் வயநாட்டில் அமைந்துள்ளன. இங்குள்ள மலைமுகடுகளில் இருந்து பிறக்கும் சிற்றாறு சூரல்மலையை ஒட்டிக் கீழே சென்று இருவஞ்சி ஆற்றை அடைகிறது. இந்த ஆறு, இன்னும் சில கிளை நதிகளுடன் இணைந்து சாலியாறாக மாறி அந்த மாவட்டத்தில் ஓடுகிறது.
ஜூலை 30 மற்றும் அதற்கு முன் சில நாட்கள் பெய்த கனமழை இந்த ஆற்றில் அதிக நீர்வரத்தை உண்டாக்கியது. ஜூலை 30ஆம் தேதி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது ஏற்பட்ட நிலச்சரிவை முதலில் எதிர்கொண்ட முண்டகை கிராமம், கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்துவிட்டது. சூரல்மலை பகுதியில் அந்த ஆற்றை ஒட்டி அமைந்திருந்த குடியிருப்புப் பகுதிகள் முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
இந்தப் பகுதியில் வசித்தவர்கள் பலர் காணாமல் போனதால் தேடும் பணி நடைபெற்று வருகிறது. முண்டகை, சூரல்மலை பகுதியில் வசித்த சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
புதன் மாலை வரை, 166 உடல்களுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. 96 உடல்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அதே நாளில் வெவ்வேறு இடங்களில் இருந்து மேப்பாடியில் அமைந்திருக்கும் பள்ளிக்கு 31 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டன.
இந்த உடல்களை அடையாளம் காணும் இடத்தில் காத்திருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு துயரக் கதை இருந்தது. அப்படித் தேடி அலைந்தவர்களில் ஒருவர்தான் அனிதாவின் அத்தை.
வயநாடு கோட்டூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். அவருடைய இரண்டாவது மகன் சூரல்மலையில் உள்ள தாசப்பன் - சரஸ்வதி தம்பதியின் மகளைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அதில் இரண்டாவது குழந்தைதான் அனிதா. சில ஆண்டுகளுக்கு முன்பு அனிதாவின் அம்மா இறந்துவிட, பேரக்குழந்தைகளைத் தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்தார் தங்கராஜ்.
பெண் குழந்தையான அனிதாவை நாங்களே படிக்க வைக்கிறோம் என அனிதாவின் தாய்வழிப் பாட்டியான சரஸ்வதி வேண்டிக் கொள்ளவே, அனிதாவை சூரல்மலைக்கு அனுப்பி வைத்தார் தங்கராஜ்.
அனிதா சூரல்மலையில் படித்து வந்த நிலையில்தான் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருடைய தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அவர்களின் ஒரு குழந்தை என மேலும் ஐந்து பேர் அவருடன் இறந்துள்ளனர்.
இதில் அனிதா, தாசப்பன், சரஸ்வதி ஆகிய மூன்று பேரின் சடலங்கள் இன்னும் கிடைக்கவில்லை. மற்ற மூவரின் சடலங்கள் கிடைத்துவிட்டன. இந்த நிலையில்தான் தங்கராஜும் அவரது மகளும் அனிதாவின் சடலத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அண்ணி இறந்த பிறகு அனிதாவை முழுக்க முழுக்க வளர்த்தது அவரின் அத்தைதான். பார்ப்பவர்களிடமெல்லாம் தனது செல்போனில் இருக்கும் படத்தைக் காட்டி, அடையாளம் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்.
நிலச்சரிவிலிருந்து மயிரிழையில் தப்பிப் பிழைத்த அமராவதி, தனது கணவரின் தம்பியையும் தம்பி மகனையும் இந்த நிலச்சரிவில் இழந்திருக்கிறார். அமராவதியின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம். இப்போது அவர் சூரல்மலையில் குடியிருந்து வருகிறார்.
"இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. செவ்வாய்க் கிழமை அதிகாலை சுமார் ஒரு மணியளவில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டபோது வந்த தண்ணீர், சகதியைப் பார்த்து நானும் என் கணவரும் பயந்துபோனோம். சரி, இனி இங்கிருக்க வேண்டாம் என முடிவெடுத்து சற்று தூரத்தில் இருந்த மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டோம்.
மகள் வீட்டிற்குச் சென்ற சிறிது நேரத்திலேயே மிகப் பெரிய அளவில் சத்தம் கேட்டது. சேறும் சகதியும் வருவது தெரிந்தது. உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. அந்த நேரத்தில் எனது மருமகள், ஒரு மேட்டில் ஏறி எங்களைத் தூக்கினார். பிறகு சற்று மேலேறிச் சென்று ஒரு காப்பிக் காட்டில் காலை வரை தங்கியிருந்தும், பிறகு அரசின் மீட்புப் படையினர் வந்து மீட்டார்கள்" என்கிறார் அமராவதி.
ஆனால், இதுபோன்ற அதிர்ஷ்டம் இவரது கணவரின் தம்பிக்கும் தம்பியின் மகனுக்கும் வாய்க்கவில்லை. இந்த நிலச்சரிவில் அவர்களது வீடு சிக்கித் தரையிறங்கியது. அவர்களது சடலங்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதேபோல, சூரல்மலையில் வசித்து வந்த பொன்னையனும் மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறார். இவர் ஒரு சிறிய லாட்டரி கடையும் தையல்கடையும் நடத்தி வருகிறார். சூரல்மலையில் இருந்த ஆற்றுக்கு அருகில்தான் இவரது வீடு இருந்தது.
"செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே கடுமையாக மழை பெய்து வந்தது. மழை அதிகரிக்கவே இனி இங்கிருக்க வேண்டாம் என முடிவு செய்து, கடைக்குப் போய்விட்டேன். இரவில் 9 மணியளவில் அருகில் இருந்த மின் கம்பம் கடையின் ஷட்டரின் மீது விழுந்தது. கடைக்குள்ளும் தண்ணீர் வர ஆரம்பித்தது. இதையடுத்து, வெளியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக ஓட்டைப் பிரித்து வெளியில் பார்த்தபோது சாலையில் தண்ணீரும் சகதியும் எல்லாவற்றையும் அடித்துச் சென்றுகொண்டிருந்தது," என்று நடந்ததை நினைவு கூறுகிறார் பொன்னையன்.
அந்தத் தருணத்தில் இனி பிழைக்க வாய்ப்பில்லை பொன்னையன் நினைத்ததாகத் தெரிவிக்கிறார். "ஆனால், பத்து நிமிடத்தில் மழை நின்றுவிட்டது. இதற்குப் பிறகு, தாசில்தாருக்கு போன் செய்து சொன்னேன். அவர் உடனடியாக வெளியில் வர முடியுமா எனப் பாருங்கள் என்றார். அதன்படி நானும் என் குடும்பத்தினரும் அங்கிருந்து வெளியேறினோம். முழங்கால் அளவுக்கு சகதி இருந்தது. அதிலேயே சுமார் ஒரு அரை கிலோமீட்டர் நடந்து வந்த போதே, இரண்டாவது முறையாக நிலம் சரிந்தது. பிறகு அருகில் இருந்த மேட்டில் ஏறிக்கொண்டோம். அடுத்த சில நிமிடங்களில் தீயணைப்பு வாகனங்களும் மீட்புப் படையினரும் வர ஆரம்பித்துவிட்டனர். பின்பு ஊருக்குள் சென்று பார்த்தால் எல்லாவற்றையும் தண்ணீர் அடித்துச் சென்றுவிட்டது," என்கிறார் பொன்னையன்.
மழை வலுக்கவே இவர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். ஆனால் அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்று தெரியாமல் வீட்டில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த பொன்னையனின் அண்டை வீட்டினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் கொன்றுவிட்டது இந்த நிலச்சரிவு.
மீட்கப்படும் உடல்கள் மேப்பாடியில் உள்ள மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அங்குள்ள பள்ளிக்கூடத்தில் உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக வைக்கப்படுகிறது.
சூரல்மலையையும் முண்டகையையும் இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்புப் பணிகளுக்காக அங்கு பெரிய அளவிலான இயந்திரங்களை எடுத்துச் செல்வது சிக்கலாகவே இருந்து வந்தது.
தற்போது ராணுவம் இரும்பினால் ஆன பெய்லி (Bailey) பாலம் ஒன்றை அமைத்து வருகிறது. அந்தப் பாலம் ஆகஸ்ட் 1ம் தேதி அன்று செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு மீட்புப் பணிகள் இன்னும் துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.