பும்ரா, ஷமியை விஞ்சி இந்தியாவின் பிரமாஸ்திரமாகிறாரா முகமது சிராஜ்?

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (21:52 IST)
இலங்கைக்கு எதிராக தொடரில் சாதனை சதங்கள் அடித்து அசத்திய விராட் கோலிக்கு இணையாக வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜூம் கவனம் பெற்றுள்ளார். குறிப்பாக, 4 ஸ்லிப் மற்றும் கல்லி பகுதியில் பீல்டரை நிறுத்தி அவர் பந்து வீசிய விதம் கிரிக்கெட் உலகில் பெரிதும் கொண்டாடப்படுகிறது. 
 
சூர்யகுமாரைப் போல இந்திய அணிக்கு ஐ.பி.எல். தொடர் கண்டெடுத்துக் கொடுத்த மற்றொரு முத்து வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். ஐதராபாத்தில் ஆட்டோ டிரைவருக்கு மகனாகப் பிறந்த முகமது சிராஜ் ஒன்றும் சிறு வயதிலேயே கிரிக்கெட் மட்டையை கையில் ஏந்தியவர் இல்லை.
 
இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையுடன் இருப்பது பிரச்னையா? - இந்திய அணி எதிர்கொள்ளும் சிக்கல்கள்
 
பதின்ம வயதில் கிரிக்கெ விளையாடத் தொடங்கிய முகமது சிராஜ், 2015-ம் ஆண்டு தனது 21-வது வயதில்தான் கிரிக்கெட் பந்தில் முறையாக பந்துவீசத் தொடங்கியுள்ளார். ஆனால், இயற்கையாகவே தனக்கிருந்த சிறப்பாக பந்துவீசும் திறனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில், அதாவது 2017-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார். 
 
முதல் ஐ.பி.எல். தொடரிலேயே திறம்பட செயல்பட்டு, கவனிக்கப்படும் வீரராக மாறிய முகமது சிராஜ் அந்த ஆண்டே சர்வதேச இருபது போட்டிகளில் இந்திய அணிக்காக தடம் பதித்தார். இருபது ஓவர் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கான வாய்ப்பும் கதவு தட்டியது. 
 
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்
 
2019-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பிறகு முகமது சிராஜூக்கு கிரிக்கெ உலகில் தொடர்ந்து ஏறுமுகம்தான். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கால் பதித்த கால கட்டத்தில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு துறையில் ஜஸ்பிரித்சிங் பும்ராவும், முகமது ஷமியும் ஆதிக்கம் செலுத்தினர். 
 
ஒருநாள் போட்டிகளில் ஜஸ்பிரித்சிங் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் பிரதான வீச்சாளர்களாக இருக்க, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராகவே அணியில் நுழைந்தார் முகமது சிராஜ். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த மிகக் குறுகிய கால கட்டத்திலேயே பந்துவீச்சை தொடர்ந்து மெருகேற்றி அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர் முன்னேறியுள்ளார். 
 
 
முகமது சிராஜின் கிரிக்கெட் வாழ்க்கையில் கடந்த ஓராண்டு காலம் மிக முக்கியமானது. ஏனெனில், அணியின் வேகப்பந்துவீச்சுத் துறையில் பிரதான இடம் வகித்த பும்ரா காயம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு ஒரு சர்வதேச போட்டியில் கூட ஆடவில்லை. உடல் தகுதியை மீண்டும் பெற அவர் பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். முகமது ஷமியோ வழக்கமான பார்மில் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். 
 
அணியின் வேகப்பந்துவீச்சுத்துறை தடுமாறிக் கொண்டிருந்த இந்த கால கட்டத்தில்தான் தனது முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார் முகமது சிராஜ்.
 
பந்தை வீசும் போது அவர் கைக்கொள்ளும் முறை, வேகமாகவும் துல்லியமாகவும் தொடர்ச்சியாக வீசும் திறன், சரியான லைன் மற்றும் லெந்தில் பந்தை வீசுவது, பேட்ஸ்மேன் எதிர்பாராத நேரத்தில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவது போன்றவையே சர்வதேச கிரிக்கெட்டில்  முகமது சிராஜை அபாயகரமான வேகப்பந்துவீச்சாளராக மாற்றியுள்ளன. 
 
குறிப்பாக, வெள்ளைப் பந்தில் அதாவது ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் தொடக்க ஓவர்களிலேயே விக்கெட்டை வீழ்த்துவதில் முகமது சிராஜ் அபாரமாக செயல்பட்டுள்ளார் என்பதை புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. 
 
சிராஜ் வருகைக்கு முன்பாக, இந்தியாவுக்கு எதிரான ஆட்டங்களில் எதிரணியின் தொடக்க ஜோடி பலமுறை சதத்தை கடந்தும் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது. ஆனால், சிராஜ் இந்திய அணியில் தடம் பதித்த பிறகு, ஒரு முறை எதிரணியின் தொடக்க ஜோடி சதத்தை தொட்டதே இல்லை என்பதே ஆபத்தான வீரர் அவர் என்பதை திட்டவட்டமாக பறைசாற்றுகின்றன. 
 
இலங்கை பேட்டிங் வரிசையை சீர்குலைத்த மாயாஜாலம்
அனைத்திற்கும் சிகரமாக, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முகமது சிராஜின் செயல்பாடு அமைந்தது. மூன்று போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ், ஓவருக்கு சராசரியாக 4.05 என்ற வீதத்தில்தான் ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளரும் அவரே. 
 
கடைசி ஒருநாள் போட்டில் இந்திய அணியின் சாதனை வெற்றிக்கு விராட் கோலியின் அபார சதம் எந்த அளவுக்கு காரணமோ, அதற்கு சற்றும் குறைவில்லாதது முகமது சிராஜின் பங்களிப்பு. கோலியின் அபார சதம் உதவியுடன் இந்திய அணி இமாலய ரன்களை குவிக்க, அதனை துரத்திய இலங்கை அணியின் நம்பிக்கையை தொடக்கத்திலேயே தகர்த்தார் சிராஜ். 
 
 
இலங்கை அணி இழந்த முதல் 5 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது முகமது சிராஜ்தான். எனினும், 2007-ம் ஆண்டில் ஜாகீர் கானுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில்  5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கைகூடவில்லை. 
 
இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிட்டதால், அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்ற உதவும் பொருட்டு பேட்ஸ்மேனுக்கு வெகு நெருக்கமாக பீல்டர்களை நிறுத்தினார் கேப்டன் ரோகித். குறிப்பாக, முகமது சிராஜ் வீசிய கடைசி 2 ஓவர்களில் அவருக்கு 4 ஸ்லிப் மற்றும் கல்லி பகுதியில் ஒருவர் என 5 பீல்டர்களை பேட்ஸ்மேனுக்கு நெருக்கமாக கேப்டன் ரோகித் நிறுத்தியிருந்தார். இந்திய அணி பந்துவீசும் போது இதுபோன்ற காட்சியை காண்பது அரிது. 
 
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலியா கோலோச்சிய போது, மெக்ராத், பிரெட் லீ ஆகியோர் பந்துவீசுகையில் இதுபோன்ற உத்தியை அந்த அணி கேப்டன்கள் பயன்படுத்தியது உண்டு. கடைசி ஒருநாள் போட்டிக்கு பிந்தைய பரிசளிப்பு விழா மேடையில் கேப்டன் ரோகித்திடம் இந்திய அணி இதுபோன்ற உத்தியை கடைசியாக எப்போது பயன்படுத்தியது என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, "எனக்கு நினைவில் இல்லை" என்று பரிசளித்தார். 
 
 
முகமது சிராஜ் வேகப்பந்துவீச்சில் எவ்வளவு தூரம் தன்னை பட்டை தீட்டிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே உதாரணம். கடந்த ஓராண்டில் 15 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். அதில், 23 விக்கெட்டுகள் பவர் பிளே ஓவர்களில் கிடைத்தவை. பவர் பிளேவில் 83 ஓவர்களை வீசியுள்ள அவரது எகானமி ரேட் 3.88, ஸ்ட்ரைக் ரேட் 21.7 ஆகும். 
 
முகமது ஷமி கடைசி 17 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எனமி ரேட் 6.24, ஸ்ட்ரைக் ரேட் 33.69 ஆகும். 
 
பும்ரா ஆடிய கடைசி 14 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையே எடுத்துள்ளார். அவரது எகானமி ரேட் 5.16, ஸ்டிரைக் ரேட் 38.16 ஆகும்.
 
 
கடந்த ஓராண்டில் பும்ரா, முகமது ஷமியை விஞ்சி, வேகப்பந்துவீச்சில்  முகமது சிராஜே இந்தியாவுக்கு துருப்புச் சீட்டாக திகழ்ந்துள்ளார் என்பதையே புள்ளிவிவரங்ள் கூறுகின்றன.
 
'உலகக்கோப்பையில் இந்தியாவின் பிரமாஸ்திரமாக திகழ்வார்'
சர்வதேச கிரிக்கெட்டில் முகமது சிராஜின் செயல்பாடுகள் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக அவரை மாற்றியிருப்பதாகவும், வரும் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கான பிரம்மாஸ்திரமாக அவர் திகழ்வார் என்றும் முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வர்ணனையாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
 
ஒருநாள் போட்டி மட்டுமல்ல, டெஸ்ட், இருபது ஓவர் ஆகிய கிரிக்கெட்டின் மற்ற வடிவங்களிலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு துருப்புச் சீட்டாக முகமது சிராஜ் உருவெடுத்து வருகிறார்.
 
தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன், தனது திறனையும் தொடர்ந்து மெருகேற்றி வரும் அவரே, இன்றைய நிலையில், இந்திய அணிக்கு மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்று ரசிகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர். 
 
ஜஸ்பிரித்சிங் பும்ரா, முகமது ஷமி ஆகியோரின் நிழலில் இருந்து விடுபட்டு, சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த ஓராண்டாக தனி ஆவர்த்தனம் செய்து வரும் முகமது சிராஜ், எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக திகழ்வார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்