அஸீம் ரஃபீக்: இனவெறி சர்ச்சையால் அதிரும் இங்கிலாந்து கிரிக்கெட் - நடப்பது என்ன?

வெள்ளி, 19 நவம்பர் 2021 (13:00 IST)
முன்னாள் யார்க்ஷயர் கவுன்டி கிரிக்கெட் வீரர் ஒருவரது இனவெறி குற்றச்சாட்டால் இங்கிலாந்து கிரிக்கெட்டில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுது அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கின்றன.

குற்றம்சாட்டிய வீரரின் பெயர் அஸீம் ரஃபீக். அவரது குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையால், கவுண்டி கிளப்பில் பல உயர் அதிகாரிகள் பதவி விலகி இருக்கிறார்கள்.

அஸீம் ரஃபீக் யார், அவர் கூறியது என்ன?

அஸீம் ரஃபீக் 30 வயதான முன்னாள் தொழில்முறை கிரிக்கெட் வீரர். தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதி யார்க்ஷயர் கவுன்டி கிரிக்கெட் கிளப்புக்காக ஆடியவர்.
பாகிஸ்தானில் பிறந்த ரஃபீக் 10 வயதில் இங்கிலாந்து சென்றார். அவர் இளைஞர் நிலையிலான இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்தார். இறுதியாக 2012ல் யார்க்ஷயர் கவுன்டி அணியின் தலைவராானர்.

2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் ESPN Cricinfo இணையதளத்துக்கு அவர் ஒரு நேர்காணலை அளித்தார். அதில் யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பில் "அமைப்பு ரீதியிலான இனவெறி" தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளியதாகக் கூறினார்.

யார்க்ஷயர் கிளப்பில் இருந்த காலத்தில் தனது பாகிஸ்தானிய பாரம்பரியத்தைப் பற்றி இனவெறியுடன் பேசுவது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பாதிக்கப்பட்டதாக ரஃபீக் குறிப்பிட்டார்.

யார்க்ஷயர் கிளப் என்ன செய்தது?

ரபீக்கின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து யார்க்ஷயர் கிளப் "முறையான விசாரணையை" தொடங்கியது.

ஓராண்டு நீடித்த இந்த விசாரணைக்குப் பிறகு ரஃபீக் "இனரீதியிலான துன்புறுத்தல் மற்றும் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்" என்பதை ஏற்றுக் கொள்வதாக யார்க்ஷயர் கூறியது. மேலும் ரஃபீக் கூறிய 43 குற்றச்சாட்டுகளில் ஏழு குற்றச்சாட்டுகளை சுயேச்சையான விசாரணைக் குழு உறுதி செய்தது.

இருப்பினும் "தனியுரிமைச் சட்டம் மற்றும் அவதூறு தொடர்பான" சட்ட காரணங்களுக்காக முழு அறிக்கையையும் வெளியிட மறுத்துவிட்டது.

அதே நேரத்தில் அறிக்கையில் தெரிய வந்திருக்கும் காரணங்களுக்காக எந்தவொரு வீரரும், பணியாளரும், நிர்வாகியும் எவ்விதமான ஒழுங்கு நடவடிக்கையையும் சந்திக்க வேண்டியிருக்காது என்று அக்டோபர் 28ஆம் தேதியன்று யார்க்ஷயர் கிளப் நிர்வாகம் அறிவித்தது.

"அமைப்பு ரீதியிலான இனவெறி" என்று கூறுவதற்கு "போதுமான ஆதாரம் இல்லை" என்று கிளப்பின் தலைவர் ரோஜர் ஹட்டன் முடிவுக்கு வந்தார்.

அடுத்து நடந்தது என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக யார்க்ஷயர் கிரிக்கெட் வாரியம் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் உட்பட எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

"எதிர்பார்க்கப்படும் தரத்தை தெளிவாக எட்டும்வரை" சர்வதேச போட்டிகள் எதையும் நடத்தக்கூடாது என்று யார்க்ஷயர் கிரிக்கெட் வாரியத்துக்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) தடை விதித்தது. அது நடந்தது கடந்த நவம்பர் 4-ஆம் தேதி.

மறுநாளே யார்க்ஷயர் கிரிக்கெட் வாரிய தலைவர் ஹட்டன் ராஜிநாமா செய்தார். புகார்களைக் கூறிய ரஃபீக்கிடம் மன்னிப்பு கேட்டார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று எம்.பி.க்கள் முன் ஆஜரான அவர், யார்க்ஷயர் கிளப் "அமைப்பு ரீதியாக இனவெறி கொண்டது" என்பதை ஒப்புக் கொண்டார்.

யார்க்ஷயர் வாரியத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஆர்தர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பதவி விலகியுள்ளனர்.

யார்க்ஷயர் கிளப்பின் புதிய தலைவராக லார்ட் படேல் நியமிக்கப்பட்டார். முறைகேடுகளை முன்வந்து அம்பலப்படுத்தியவர் என்று அவர் ரஃபீக்கை பாராட்டியிருக்கிறார்.

பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நடைமுறைகளை மறு ஆய்வு செய்வது, முறைகேடுகளைக் கூறுவதற்கான ஹாட்லைன் அமைப்புது, ரஃபீக் கூறிய புகார்கள் தொடர்பான விசாரணையின் அறிக்கையை அவரது வழக்கறிஞர்கள் உள்ளிட் சட்ட நலன் கொண்டோரிடம் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

எம்.பி.க்கள் முன் ஆஜர்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதர்காக செவ்வாயன்று பிரிட்டன் நாடாளுமன்றக் குழு முன் ரஃபீக் ஆஜரானார். தனது வாழ்க்கையை இனவெறியால் இழந்ததாகவும், தனது மகன் "விளையாட்டு பக்கமே செல்ல" விரும்பவில்லை என்றும் கூறினார்.

இதற்கிடையே, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இனவெறிக் கருத்துக்களைக் கூறியதாக 3 முன்னாள் யார்க்ஷயர் வீரர்கள் கூறியுள்ளனர்.

யார்க்ஷயர் விசாரணை அறிக்கையில் தனது பெயர் இருப்பதை வாகன் கடந்த 4-ஆம் தேதி ஒப்புக் கொண்டார். ஆனால் தாம் இனவெறியுடன் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்று "முழுமையாகவும் திட்டவட்டமாகவும்" மறுப்பதாகக் கூறினார்.

பிரிட்டிஷ் ஆசியர்கள் கூறுவது என்ன?

இந்த விவகாரம் கிரிக்கெட்டில் இருக்கும் பிற பிரிட்டிஷ் ஆசியர்களிடமும் எதிரொலித்தது. கம்ரான் உல் ஹக் உள்ளிட்ட பலர் இதே போன்று தங்களுக்கு நடந்த கதைகளைப் பகிர்ந்துள்ளனர்.

"வெறும் கேலிப்பேச்சுதான் என்று கூறிக்கொண்டே செய்யப்படும் இதுபோன்ற செயல்களால் மனக் கலக்கமுறாத, கண்ணீரை அடக்கிக் கொள்ளாத ஒரு பழுப்புத் தோல் மனிதரும் பிரிட்டனில் இருக்க மாட்டார்" என செய்தித் தொகுப்பாளர் கிருஷ்ணன் குருமூர்த்தி ட்விட்டரில் பதிவிட்டார்.

ரஃபீக் விவகாரம் பிரிட்டிஷ் ஆசியர்களுக்குப் பரிச்சயமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று இந்தியாவில் பிறந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் டெய்லி மெயிலில் எழுதியிருக்கிறார். இருப்பினும், "அதிரடியான மாற்றம்" பற்றிய பேச்சு உண்மையாக இருந்தால், கிரிக்கெட் விளையாட்டு "பிரகாசமான, அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு" தயாராக இருக்கலாம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்