முதலைகளும் மனிதர்களும் இணைந்து வாழும் இந்திய கிராமம் - ஆச்சர்ய தகவல்

திங்கள், 4 பிப்ரவரி 2019 (16:39 IST)
குஜராத்தில் சில கிராமங்களில் உள்ளூர் மக்கள் சதுப்புநில முதலைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த வகை முதலைகள் மிகவும் ஆபத்தானவை. இப்படி மக்களும் முதலைகளும் சேர்ந்து வாழும் பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் ஜானகி லெனின்.
"காலை 10 மணி அளவில் முதலைகள் வெளியே வரும்" என்று குளிர்கால காலையில் துணியை காய வைத்துக் கொண்டிருந்த பெண் எனக்கு அறிவுரை வழங்கினார்.
 
நான் ஏதும் விலங்குகள் சஃபாரிக்கு செல்லவில்லை. மலதாஜ் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு முற்றத்தில் இருந்து அருகில் இருந்த குட்டையை பார்த்துக் கொண்டிருந்தேன்.
 
சாதாரண குட்டை போலதான் அது இருந்தது. ஆனால், அங்கு படர்ந்திருந்த செடிகொடிகள் மற்றும் குவளைப்பூக்களுக்கு இடையே சதுப்புநில முதலைகள் இருக்கின்றன. அங்கு வசிக்கும் கிராமவாசிகள், பல தலைமுறைகளாகவே இந்த ஊர்வனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 
பெரும்பாலும், ஒரே ஒரு முதலையை பார்த்தாலே பயந்து போய் ஓடிவிடுவோம். ஆனால், 4000 சதுர கிலோ மீட்டர் அளவில் சபர்மதி மற்றும் மாஹி நதிகளால் சூழ்ந்திருக்கும் சர்தோரில் அப்படியில்லை.
 
சர்தோரில் உள்ள 30 கிராமங்களில் குறைந்தது 200 சதுப்புநில முதலைகள் இருப்பதாக தன்னார்வ இயற்கை பாதுகாப்பு அமைப்பின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அந்த பகுதியில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சுமார் 600 மக்கள் வசிக்கிறார்கள்.
 
அப்பகுதியில் இருக்கும் அனைத்து குளங்களிலும், முதலைகள் இருப்பதற்கான எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த குளம், குட்டைகளை நம்பிதான் கிராம மக்கள் இருக்கிறார்கள். அதனால், எச்சரிக்கைப் பலகையை மீறி, அவர்கள் அதில் குளிக்கவும், துவைக்கவும், மாடுகளை சுத்தம் செய்வதுமாக இருக்கிறார்கள்.
 
அதே நேரத்தில் முதலைகள் அங்கு மீன்களை உண்டும், தங்கள் குஞ்சுகளை பாதுகாத்து கொண்டும் இருக்கின்றன. சில நேரம் கரையோரம் வந்து, வெயிலில் இளைப்பாறுவதும், புல்வெளிகளில் தூங்குவதுமாக இருக்கின்றன. ஆடு மாடுகள் மேயும் மற்றும் மக்கள், குழந்தைகள் பயன்படுத்தும் பாதைகளில்தான் அவையும் வாழ்கின்றன.
 
மக்களும் முதலைகளும் ஒவ்வொரு நாளும் தங்களது தினசரி வேலையையே பார்க்கின்றனர். யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை.
 
சரொதர் என்பதற்கு "தங்கம் நிறைந்த பானை" என்று அர்த்தம். எல்லா திசைகளிலும் நீண்டு கிடக்கும் புகையிலை தோட்டங்களில், வனவிலங்குகளுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை. அப்படி இருக்க இந்த முதலைகள் எங்கிருந்து வந்தன?
 
சரோதரில் எப்பவுமே முதலைகள் இருந்ததாக சிலர் கூறுகின்றனர்.
 
18ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் பெரும் வரை அப்பகுதியை ஆண்ட கைக்வாட் வம்சத்தினர், வேட்டையாடுவதற்காக இந்த முதலைகளை பிடித்து குளங்களில் விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த கூற்றுக்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.
 
ஆனால், ஒன்று மட்டும் உறுதியாக கூறமுடியும். இந்த சதுப்புநில முதலைகள் சமீபத்தில் இங்கு குடிபெயர்ந்தவை அல்ல.
 
ஆனால், இந்த முதலைகளின் நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமானவை. முதலை வகைகளிலேயே மூன்றாவது மிகவும் ஆபத்தானவை இந்த சதுப்புநில முதலைகள்.
 
உணவளிக்க வந்த பெண்ணை கடித்து குதறிய வளர்ப்பு முதலை  மாய சடங்குக்குப் பிறகு சடலத்தைத் தந்த முதலை
 
சரோதரில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விஷ்வாமித்ரி நதியில் இந்த முதலைகளால் எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும், 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் இருவர் கொல்லப்பட்டதாகவும் கூறுகிறார் ஊர்வன வல்லுநரான ராஜு வ்யாஸ்.
 
விமான முனையத்திற்காக, நர்மதா நதியில் இருக்கும் சர்தார் சரோவர் அணையில் இருந்து 300ல் இருந்து 500 முதலைகளை இடம்மாற்றம் செய்ய எடுக்கப்பட்டுள்ள சமீபத்திய முடிவு, வல்லுநர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. புது இடத்தில் முதலைகளை விட்டால், அவை தங்கள் பழைய இடத்திற்கு செல்ல முயற்சிக்கும். அப்படி போகும் வழியில் மக்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.
 
எச்சரிக்கை பலகை
 
ஆனால், தன்னார்வ இயற்கை பாதுகாப்பு அமைப்புபடி, சரோதரில் கடந்த 30 ஆண்டுகளில் 26 தாக்குதல் நடந்திருக்கின்றன. அதில் எட்டு சம்பவங்களில் சிறிய காயங்களுடன் மனிதர்கள் உயிர் தப்பியிருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டு, முதலை தாக்கியதில் 9 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற 17 சம்பவங்கள் கால்நடைகள் மீதான தாக்குதல்கள் ஆகும்.
 
முதலை தாக்கியதில் 9 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற 17 சம்பவங்கள் கால்நடைகள் மீதான தாக்குதல்கள் ஆகும்.
 
மலதாஜ் கிராமத்தில், முதலைகளிடம் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக கரையோரத்தில் வேலி போன்ற அமைப்பை வனத்துறை கட்டியது. ஆனால், முதலைகள் தீங்கற்றவை என்று அந்த வேலியை வேண்டாம் என்று கூறி, அதனை பராமறிக்கவும் கிராம மக்கள் மறுத்துவிட்டனர்.
 
வேலி அமைப்பில் இருக்கும் பல ஓட்டைகளால், முதலைகளால் கைகளையோ கால்களையோ பற்றி இழுக்க முடியும். ஆனால், அவை அப்படி செய்வதில்லை. அந்த வாய்ப்புகளை முதலைகள் பயன்படுத்திக் கொள்வதும் இல்லை. அதற்கு பதிலாக, மனிதர்களுடன் ஒன்றாக வாழ்ந்து, அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கின்றன.
 
பெட்லி கிராமத்தில் குளத்திற்கு ஓரமாக வாழும் குடும்பம் ஒன்று, தங்களது ஆடு ஒன்றை முதலைகளிடம் இழந்துவிட்டது. அதனை ஏற்றுக் கொண்டுள்ள அந்தக் குடும்பத்தின் நபர் ஒருவர், "அந்த ஆடு, முதலைக்கு என்று எழுதியுள்ளதால் அது எடுத்துக் கொண்டது" என்று கூறினார்.
 
வெயில் காலத்தில் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக முதலைகள் குடிசைகள் பின்புறத்தில் சுரங்கங்களை தோண்டுகின்றன. இதனால் சாலைகள் சேதமடைகின்றன. அதோடு, கரையோரம் இருக்கும் வீடுகளும் சேதமடைகின்றன.
இதையெல்லாம் தாண்டி, சரோதரியில் இருக்கும் மக்கள் தங்கள் முதலைகளால் பெருமை கொள்கின்றனர்.
 
உயிரிழந்த ஒரு சதுப்புநில முதலைக்கு இறுதி அஞ்சலி நடத்திய அப்பகுதி மக்கள், கோதியர் என்ற பெண் கடவுளுக்கு கோவில் ஒன்றையும் கட்டியுள்ளனர். அணிகலன்கள் அணிந்திருக்கும் முதலைகளுக்கு முன்பு அந்தக்கடவுள் நிற்கிறார். மலதாஜ் கிராமத்து வீடுகளின் முன்பு இந்த கடவுளின் புகைப்படத்தை காணமுடிகிறது.
 
பல குடியிருப்பு வாசிகளுக்கு இந்த ஊர்வனவை பிடித்திருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. முதலைகளுக்கு அதிக இடம் தேவை என்பதால், இன்னொரு குளம் வெட்ட திட்டமிட்டிருப்பதாக கிராமத் தலைவர் துர்கேஷ்பாய் பட்டேல் தெரிவித்தார்.
 
குளிர்கால காலையில் சூரியன் ஒளிர்ந்து கொண்டிருக்க, தண்ணீரில் இருந்து முதலைகள் வெளியே வந்தன. டஜன் கணக்கான முதலைகளை அங்கு காண முடிந்தது.
 
மலதாஜ் கிராமத்திற்கு வெளியே உள்ள பாலத்தின் மீது, சூடான வெங்காய பஜ்ஜி கடையில் மக்கள் கூட்டம் சூழ்ந்துள்ளது. அதற்கு அடியில், உள்ள காய்ந்துபோன கால்வாயில் சூரிய ஒளியை வாங்கிக் கொண்டு படுத்திருக்கிறது ஒரு சதுப்புநில முதலை.
 
அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அது அவர்கள் வாழ்க்கையில் இன்னொரு நாள். அவ்வளவுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்