INDIA Vs ENGLAND: முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட் தொடரில் யாருக்கு வெற்றி?

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (23:51 IST)
அஜிங்க்யா ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 2-க்கு 1 என்கிற கணக்கில் ஆஸ்திரேலிய டெஸ்ட் சீரிஸை வென்றது ஒரு வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி. அதுவே இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வெற்றி.
 
அந்த டெஸ்ட் சீரிஸில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் நாடு திரும்பிவிட்டார், அணி வீரர்கள் ஒவ்வொருவராக காயம் காரணமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் ஆஸ்திரேலியா உடன் போட்டி போடச் சொல்வதே மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இளங்காளைகளைக் கொண்ட இந்தியப் படை அப்போதும் துவளாமல் வெற்றிக் கொடி நாட்டினார்கள்.
 
இப்போது இந்திய அணிக்கு அடுத்த அக்னிப் பரிட்சை தயாராக இருக்கிறது. இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணமாக வந்திருக்கிறது. இச்சுற்றுப் பயணத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் மோதி விளையாடவிருக்கின்றன.
 
இந்தியா வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி: போட்டி அட்டவணை
நாளை (பிப்ரவரி 5-ம் தேதி) சென்னையில் தொடங்கும் இந்த மோதல் புணே வரை தொடரவிருக்கிறது. இந்தியா ஆஸ்திரேலியாவை 2-க்கு 1 என்கிற கணக்கில் வெற்றி கொண்ட களிப்புடன் இருக்கிறது என்றால், இங்கிலாந்தும் இலங்கையை 2க்கு 0 என்கிற கணக்கில் தோற்கடித்த திமிரோடு தான் இருக்கிறது.
 
இந்திய வீரர்கள்: யார் உள்ளே யார் வெளியே?
 
தன் மனைவியின் பேறு காலத்துக்கு சென்றிருந்த விராட் கோலி, தந்தையாக தன் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் அணிக்குத் திரும்பி இருக்கிறார். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மொஹம்மத் ஷமி, ரவிந்த்ர ஜடேஜா, உமேஷ் யாதவ் போன்றவர்கள் சிகிச்சையில் இருக்கிறார்கள். ப்ரித்வி ஷா வெளியேற்றப்பட்டார். தமிழகத்தின் நடராஜன் தவிர்க்கப்பட்டிருக்கிறார்.
 
அஸ்வின் & பும்ரா விளையாடத் தயாராகி இருக்கிறார்கள். ஹனும விஹாரி காயத்தால் களம் காணப்போவதில்லை. 97 டெஸ்ட் போட்டி அனுபவமுள்ள வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா மீண்டும் அணியில் இடம் பிடித்திருக்கிறார். குறைந்த அனுபவத்தோடு ஆஸ்திரேலிய அசகாய பேட்டிங் சூரர்களை வீழ்த்திய தீரர்களான மொஹம்மத் சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் என மூவரையும் அணியில் வைத்திருக்கிறது இந்தியா.
 
 
 
இந்த 2021-ம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் போட்டிகள் & டி20 போட்டிகள் போக மொத்தம் 17 டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து விளையாடப் போகிறது. எனவே இங்கிலாந்து அணி சுழற்சி முறையைப் பின்பற்றுகிறது. இங்கிலாந்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பெய்ர்ஸ்டோவ் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் களம் காணப் போவதில்லை. இலங்கை டெஸ்ட் போட்டியில் ஆடிய மார்க் வுட் & சாம் குர்ரன் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
இங்கிலாந்தின் அணித் தலைவரான ஜோ ரூட் சென்னையில் தன் 100-வது போட்டியை விளையாடவிருக்கிறார். ஜோ ரூட் நாக்பூரில் தான் தன் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார் என்பது நினைகூரத்தக்கது. ஜோ ரூட் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரமாதமாக விளையாடி 228 & 186 ரன்களைக் குவித்திருக்கிறார். இந்தியா இங்கிலாந்துக்கிடையிலான டெஸ்ட் தொடரில் ரூட்டின் ஃபார்ம் இங்கிலாந்துக்கு மிகவும் முக்கியம்.
 
ராரி பர்ன்ஸ், சக் க்ராலி, டாம் சிப்லி ஆகியோர் ஒப்பனிங் இடங்களுக்கு போட்டியிடுவார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஒலி போப்-ம் இந்த தொடரில் இங்கிலாந்து அணியில் இணைக்கப்பட்டிருக்கிறார். ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்குகிறார்.
 
ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சர் மீண்டும் ஸ்குவாடில் இடம்பிடித்திருக்கிறார்கள். இவர்கள் இலங்கைக்கு எதிரான போட்டியில் இல்லை. போட்டியில் நிலவும் அழுத்தத்தைப் பொறுத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் & ஸ்டுவர்ட் ப்ராட் மாறி மாறி களமிறக்கப்படுவார்கள். ஜாக் லீச், டாம் பெஸ், மொய்ன் அலி ஆகியோர் சுழற்பந்து தாக்குதலைப் பார்த்துக் கொள்வார்கள். லீச் & பெஸ் ஆகியோருக்கு இது தான் முதல் இந்திய சுற்றுப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 05-ம் தேதி) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆனால் சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் இரண்டாவது போட்டியில் 50% பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்திருக்கிறது.
 
மூன்றாவது & நான்காவது டெஸ்ட் போட்டி அஹமதாபாத் மொடேரா மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இந்த அரங்கம் மறு கட்டுமானம் செய்யப்பட்டு, தற்போது 1.10 லட்சம் பேர் அமரக் கூடிய வகையில், உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் அரங்கமாக உருவெடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த அரங்கத்தை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த மைதானத்தில் நடைபெறவிருக்கும் போட்டிகளில், பார்வையாளர்கள் பங்கேற்பது தொடர்பாக இதுவரை குஜராத் கிரிக்கெட் சங்கம் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இதே அரங்கில் தான் ஐந்து டி20 போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
 
அதன் பிறகு மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளை விளையாட புணே புறப்படும் இந்தியா & இங்கிலாந்து அணிகள். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெறவிருக்கும் முதல் சர்வதேசத் தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் இங்கிலாந்தின் செயல்பாடு
இந்தியாவில் இங்கிலாந்தின் செயல்பாடு
பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்தியாவில் இங்கிலாந்து இதுவரை 60 டெஸ்ட் போட்டிகளை விளையாடி இருக்கிறது. அவர்கள் 13 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். 19 போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறார்கள். 28 போட்டிகளை சமன் செய்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து ஐந்து டெஸ்ட் தொடர்களை வென்றிருக்கிறது. கடைசியாக 2012-ம் ஆண்டு அலஸ்டர் குக் தலைமமையிலான அணி 2-க்கு 1 என்கிற கணக்கில் இங்கிலாந்து வென்றது. இங்கிலாந்து கடைசியாக 2016-ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 4-க்கு 0 என்கிற கணக்கில் இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.
 
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூசிலாந்தோடு மோதப் போவது யார்?
 
இந்த இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதி தான். ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான சுற்றுப் பயணம் கொரோனாவால் ரத்தாகிவிட்டதால், நியூசிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்குச் சென்றுவிட்டது. தற்போது ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகள் நியூசிலாந்துடன் விளையாடலாம்.
 
இந்தியாவை 3-க்கு 1 அல்லது 3-க்கு 0 அல்லது 4-க்கு 0 என்கிற கணக்கில் தோற்கடித்து இங்கிலாந்து தொடரை வென்றால் இங்கிலாந்து தகுதி பெறும்.
 
இதுவே இங்கிலாந்தை 2-க்கு 0, 2-க்கு 1, 3-க்கு 0, 3-க்கு 1, 4-க்கு 0 என்கிற கணக்கில் தோற்கடித்து இந்தியா தொடரை வென்றால், இந்தியா தகுதி பெறும். ஆஸ்திரேலியாவும் தகுதி பெற வாய்ப்பிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்