பிரிட்டனில் மறைந்திருக்கும் துபாய் இளவரசி: ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு சென்றது ஏன்?

புதன், 3 ஜூலை 2019 (21:36 IST)
துபாயிலுள்ள தனது கணவரை விட்டு சென்ற இளவரசி ஹயா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், தனது கணவரை விட்டு பிரிந்து சென்ற பின்னர் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது,
 
குதிரை பந்தய திடலின் உரிமையாளரும், பில்லினியருமான 69 வயதான ஷேக் முகமது, பெயர் குறிப்பிடாத பெண்ணொருவர் "தேச துரோசம் இழைத்து விட்டதாகவும், காட்டிக் கொடுத்துவிட்டதாகவும்" குற்றஞ்சாட்டி கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
ஷேக் முகமது பிரிட்டனிலுள்ள அஸ்கோட்டில் எல்சபெத் அரசியோடு அடிக்கடி உரையாடியிருக்கிறார்.
 
ஜோர்டானில் பிறந்து, பிரிட்டனில் கல்வி பயின்ற 45 வயதான இளவரசி ஹயா, கோடால்பின் குதிரை பந்தய திடலின் உரிமையாளரான ஷேக் முகமதை 2004ம் ஆண்டு திருமணம் செய்து, அவரது ஆறாவதும், இளைய மனைவியுமாக மாறினார்.
 
வேறுபட்ட மனைவிகளிடம் இருந்து ஷேக் முகமது 23 குழந்தைகளை கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த ஆண்டு தொடக்கத்தில் இளவரசி ஹயா ஜெர்மனியில் தஞ்சம் கோரி கணவரை விட்டு பிரிந்து சென்றார்.
 
லண்டனின் மத்திய பகுதியிலுள்ள கென்சிங்டன் பேலஸ் கார்டன்ஸிலுள்ள நகர வீட்டில் 85 மில்லியன் யூரோ மதிப்புள்ள வீட்டில் இளவரசி ஹயா இப்போது வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இளவரசி ஹயா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சட்ட போராட்டத்திற்கு இப்போது தயாராகி வருகிறார்.
 
துபாயிலுள்ள ஆடம்பரமான வாழ்க்கையை விட்டு செல்ல அவரை தூண்டியது எது? "உயிருக்கு பயந்து அவர் வாழ்வதாக" கூறப்படுவது ஏன்?
 
கடல் வழியாக தப்பி சென்று, இந்திய கடலோர காவல் படையால் துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்ட ஷேய்கா லத்தீஃபா
 
துபாயை ஆளுகின்ற ஒருவருடைய மகள்களில் ஷேய்கா லத்தீஃபா என்ற பெயருடையவர், கடந்த ஆண்டு மர்மமான முறையில் துபாய் திரும்பி வந்தது தொடர்பாக கவலை அளிக்கக்கூடிய உண்மைகளை இளவரசி ஹயா சமீபத்தில் கண்டறிந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
பிரான்ஸை சேர்ந்த ஒருவரின் உதவியோடு கடல் வழியாக ஐக்கிய அரபு எமிரேட்டை விட்டு தப்பி சென்ற ஷேய்கா லத்தீஃபாவை, இந்திய கடலோர காவல் படை தடுத்து மீண்டும் துபாய்க்கு அனுப்பி வைத்தது.
 
அப்போது அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சனோடு சேர்ந்து இளவரசி ஹயாவும் இந்த சம்பவம் தொடர்பாக துபாய்க்கு ஆதரவாக பேசினார்.
 
ஷேய்கா லத்தீஃபா தப்பிச்செல்வதால் "பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது" என்றும், தற்போது "துபாயில் பாதுகாப்பாக இருப்பதாகவும்" துபாய் அதிகாரிகள் கூறினர்.
 
ஆனால், அவரது விரும்பத்திற்கு மாறாக ஷேய்கா லத்தீஃபா கடத்தப்பட்டு துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
அப்போது முதல் இந்த சம்பவம் தொடர்பாக இளவரசி ஹயா புதிய உண்மைகளை அறிய வந்துள்ளதாக கூறப்பட்டது.
 
இதன் விளைவாக, கணவரின் குடும்பத்தினரிடம் இருந்து வெறுப்புணர்வையும், அழுத்தங்களையும் எதிர்கொண்ட இளவரசி ஹயா, அங்கு தான் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்ந்தார்.
 
இளவரசி இளவரசி லத்தீஃபாவுடன் உணவு உண்டதாக ஐநா மனித உரிமை அமைப்பின் தலைவர் மேரி பிபிசியின் ரேடியோ 4 நிகழ்ச்சியில் தெரிவித்தார்,
இந்த விவகாரம் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலானது என்று கூறி, லண்டனிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்டின் தூதரகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
 
ஆனால், இந்த சம்பவத்தில் விரிவான சர்வதேச அம்சமும் உள்ளது.
 
டோர்செட்டிலுள்ள பிர்யான்ஸ்டன் பள்ளியிலும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்ற இளவரசி ஹயா, பிரிட்டனில் வாழ விரும்புவதாக நம்பப்படுகிறது.
 
ஆனால், அவர் கைவிட்டு சென்ற கணவர், இளவரசி ஹயா திரும்பி வர வேண்டுமென கோரினால், ஐக்கிய அரபு எமிரேட்டோடு நெருங்கிய உறவு வைத்திருக்கும் பிரிட்டனுக்கு இது பெரிய ராஜீய தலைவலியாகிவிடும்.
 
ஜோர்டன் அரசர் அப்துல்லாவின் உறவினராக இளவரசி கஹயா இருப்பதால் ஜோர்டனுக்கும் இது நல்லதாக தோன்றவில்லை.
 
சுமார் பத்து லட்சம் ஜோர்டன் மக்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை செய்து, ஜோர்டனுக்கு பணம் அனுப்பி வருகிறார்கள். எனவே, துபாயோடு இருக்கும் உறவில் சிக்கல் தோன்றுவதை ஜோர்டனும் விரும்பவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்