மனித மாமிசம்: பாலுறவு கொள்வதாக அழைத்து கொன்று திண்ற முன்னாள் ஆசிரியர்!

சனி, 8 ஜனவரி 2022 (10:33 IST)
இணைய டேட்டிங் தளத்தில் சந்தித்த ஒருவரை கொலை செய்து, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய குற்றத்துக்காக முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது ஒரு ஜெர்மனி நீதிமன்றம்.
 
42 வயதாகும் ஸ்டீஃபன் ஆர், மனித மாமிசத்தைப் புசிக்கும் தன் விருப்பத்துக்காக, மின் பொறியாளர் ஒருவரைக் கொன்றதாக பெர்லின் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
 
முன்னாள் ஆசிரியரான ஸ்டீஃபனால் கொலை செய்யப்பட்டவரின் எலும்புகள், வடக்கு பெர்லினில் உள்ள ஒரு பூங்காவில் பொது மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட பின், கடந்த நவம்பர் 2020-ல் கைது செய்யப்பட்டு தடுப்புப் காவலில் வைக்கப்பட்டார் ஸ்டீஃபன்.
 
அதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் ஆசிரியரால் கொல்லப்பட்ட 43 வயது நபரின் தாய், தன் மகனைக் காணவில்லை என புகார் கூறி இருந்தார்.
ஜெர்மனியில் உள்ள பங்கோ மாவட்டத்தில், ஸ்டீஃபனின் வீட்டில் இருவரும் சந்தித்து பாலுறவு வைத்துக் கொள்ள ஏற்பாடுகள் நடந்தன. அங்குதான் ஸ்டீஃபன் தனியார் பள்ளி ஒன்றில் கணிதம் பயிற்றுவிக்கும் ஆசிரியராக பணியாற்றி வந்தார். டேட்டிங் தளத்தில் ஸ்டீஃபன் தன்னை CanOpener79 என அழைத்துக் கொண்டதாக பெர்லின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
ஸ்டீஃபன் இதற்கு முன், மனித மாமிசத்தை உண்பது குறித்து விவாதித்த இணையதள அரட்டைகளில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் சந்தித்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே பொறியாளர் இறந்துவிட்டதாகவும், ஆசிரியரின் வீட்டில் எலும்பை அறுக்கும் ரம்பம் மற்றும் இறைச்சி வெட்டுபவர்கள் பயன்படுத்தும் கத்தி ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாகவும் விசாரணை அதிகாரிகள் கூறினர்.
 
இருவரும் சந்தித்துக் கொண்டு உடலுறவு வைத்துக் கொண்ட பின், அடுத்த நாள் காலை பொறியாளர் தன் அறையில் இறந்து கிடந்ததாகவும், பதற்றத்தில் அவரது உடலை அப்புறப்படுத்தியதாகவும் நீதிமன்ற விசாரணையின் போது கூறினார் ஸ்டீஃபன்.
 
ஸ்டீஃபன் ஒரு வாடகை காரைப் பயன்படுத்தி, பொறியாளரின் உடல் பாகங்களை பங்கோ மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் பல பாகங்களில் வீசி எறிந்தார். பொறியாளரின் உடலில் இனப்பெருக்க உறுப்புகள் மட்டும் காணவில்லை.
 
"பாலியல் ரீதியிலான கற்பனைகள் அல்லது இறைச்சி வெட்டும் கற்பனைகள் ஒரு குற்றமில்லை" என ஸ்டீஃபன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் வாதாடினர். பொறியாளர் உட்கொண்ட போதை மருந்துகளால் இறந்திருக்கலாம் என்றும் வாதாடினர்.
 
ஆனால் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள், கொலை என வரையறுப்பதற்கான எல்லா விஷயங்களும் ஒத்துப் போகின்றன. பொறியாளர் ஆசை வார்த்தைகளால் மயக்கப்பட்டு பொறியில் சிக்க வைக்கப்பட்டு, கொலையாளி தன் பாலுறவு ரீதியிலான ஆசைகளை தீர்த்துக் கொண்ட பின், மேற்கொண்டு குற்றங்களைச் செய்திருக்கிறார் என கூறினர்.
 
இந்த வழக்கு ஜெர்மனியில் மனித மாமிசத்தை உண்ணும் குற்றவாலி அர்மின் மெய்வெஸை நினைவூட்டுகிறது. அவர் கடந்த 2006ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்